56 – வது தேசிய நூலக வார விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு நூலகங்களில் இந்த விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னை திருவான்மியூரில் உள்ள மாவட்ட முழுநேரக் கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கடந்த 14ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நூலகர் பா.சந்தான லட்சுமி தலைமையில், வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் ஆ. மனோகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், கவிஞர் சந்திரா குணசேகரன், இந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேலாளர் சோலைமலை, இதழியலாளர் உதய் பாடகலிங்கம், டி.ஜி. வைணவக் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் த. சிவலிங்கம், இதழியலாளர் நா.மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றினர்.
சிறப்புரையில் பேசியவர்கள் நூலகம் குறித்தும், வாசிப்பனுபவம் குறித்தும், நூலகங்களின் பயன்கள் மற்றும் மாணவர்கள் நூலகங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் பேசினர்.
பின்னர் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசளித்து கவுரவிக்கப்பட்டது. விழாவில் சென்னை மாவட்ட நூலக ஆய்வாளர் சுசீலா, நூலகப் பணியாளர்கள் பேபி, உமா மோகன்ராஜ், அஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.