அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநராகப் பணிபுரியும் செல்வராஜ், வீட்டுக்குப் பின்னே இருபதுக்கு 20 அடி பரப்பில் ஆடுகள் வளர்த்து வாழ்வில் தன்னிறைவுடன் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
நம்மிடம் பேசிய அவர், “கொடி ஆட்டில் கலப்பினத்தைத்தான் நாங்கள் வளர்க்கிறோம்.
சுத்தமான கொடி ஆடுகள் ராமநாதபுரத்தில் இருக்கின்றன. அவை கொஞ்சம் விலை அதிகம். கடந்த 2008 முதல் இருபதுக்கு 20 அடி இடத்தில் ஆடுகள் வளர்த்துவருகிறேன்.
என் பெற்றோர்கள் பல ஆண்டுக்காலமாக ஆடு வளர்த்துவந்தார்கள். சிறுவயதில் அதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். 2015க்குப் பிறகுதான் ஆடு வளர்ப்பில் அதிக நுட்பங்களைத் தெரிந்துகொண்டேன்.
காலையில் 10 மணிக்கு வெளி மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் ஓட்டிவருவார்கள்.
செயற்கைத் தீவனங்கள் இல்லாமல் இயற்கை முறையில் வளர்த்துவருகிறேன். நோய்ப் பாதிப்பு ஏற்பட்டாலும், நாட்டு மருந்துகள் செய்து கொடுப்போம்.
பொதுவாக ஆடு வளர்ப்பில் பணம் தேவைப்படும் நேரத்தில் ஏடிஎம் போல ஆட்டை விற்று பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆட்டின் எடை, தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும்.
எதார்த்தமாகத்தான் ஆடு வளர்ப்பைத் தொடங்கினோம். எனக்கு அதுவொரு துணைத் தொழிலாக மாறிவிட்டது.
எளிய முறையில் வளர்த்தாலும், பிறகு ஆடுகள் தங்குவதற்காக 70 ஆயிரம் ரூபாய் செலவில் வசதியான கொட்டில் அமைத்தேன்” என்கிறார்.
முதல்கட்டமாக ஆறு ஆடுகள் வாங்கினால், ஆறே மாதத்தில் குட்டிகள் வழியாக முதலீடு கிடைத்துவிடும்.
எட்டு மாதங்களில் ஒரு குட்டி 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். 12 குட்டிகள் விற்றால் 72 ஆயிரம் கிடைத்துவிடும். அடுத்து ஆடு சினையாகும். இப்படித்தான் ஆடுகள் பெருகும். வருமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் வழிகாட்டுகிறார்.
“மழைக்காலத்தில் குட்டிகள் பாதிக்கப்படும். இரத்த ஓட்டம் நின்று உயிரிழப்புகள் ஏற்படும். அப்போது ஹீட்டர் மூலம் கொட்டிலின் வெப்பநிலையை அதிகரித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. முன்னதாக இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடவேண்டும்.
ஜேசிபி வாங்கியபோது எனக்கு ரூ. 2 லட்சம் வரை ஆடு விற்பனையிலிருந்து கிடைத்தது. என் வாழ்க்கையில் சிறு பொருளாதார வளர்ச்சியை ஆடு வளர்ப்பு கொடுத்திருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
பின்னர், ஜேசிபியில் கிடைத்த வருமானத்தில் மீண்டும் ஆடுகள் வாங்கி வளர்த்தேன்.
மேலும், சொந்தமாக ஓர் இடமும் வாங்கினேன். அதில், பெரிய அளவில் ஆட்டுப் பண்ணை தொடங்கும் முயற்சியில் இருக்கிறேன்.
ஆடு வளர்ப்பில் முதலில் ஷெட்டு போடுவதில் அதிகம் முதலீடு செய்யக்கூடாது. 50 ஆயிரம் ரூபாய்க்கு ஷெட்டு அமைக்கலாம். 3 லட்சம் ரூபாய்க்கு ஆடு வாங்குங்கள்.
இதுதான் வருமானத்தைப் பெருக்கும். மிகக் குறைந்த செலவில் பணிகளைச் செய்யவேண்டும்.
ஆறு மாதத்திற்குப் பிறகு வருமானம் கிடைக்கத் தொடங்கும். பின்னர் படிப்படியாக ஆடு வளர்ப்பை மேம்படுத்துங்கள்” என்று உற்சாகமாகச் சொல்லி முடித்தார் செல்வராஜ்.
- எஸ். சங்கமி