நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாட்ஷா’ திரைப்படம், அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
சென்னை அடையாறு கேட் ஓட்டலில் நடந்த அந்தப் படத்தின் வெற்றி விழா, தமிழக அரசியலிலும் பூகம்பத்தை உருவாக்கியது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தை சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார்.
நக்மா, ரகுவரன், விஜயகுமார், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் ப்ளாஷ்பேக் சீன், தீம் மீயூசிக் போன்றவை அந்தப் படத்தின் ஹைலைட்.
‘பாட்ஷா’ படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினிக்கு அதில் விருப்பம் இல்லை.
இந்நிலையில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா ‘செகண்ட் பார்ட்’ குறித்து அண்மையில் மனம் திறந்து பேசினார்.
‘ரஜினியை மனதில் வைத்துத்தான் பாட்ஷா கதை எழுதப்பட்டது. அதில் அவரைத் தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்கவில்லை’ என தெரிவித்த சுரேஷ் கிருஷ்ணா, ‘பாட்ஷாவை ரீமேக் செய்தால், அஜித் சார் மட்டும் தான் பொருத்தமாக இருப்பார்’ என குறிப்பிட்டார்.
ரஜினிகாந்தை வேற லெவலுக்கு கொண்டு சென்ற ‘பில்லா’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரகுமான், பிரபு, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ‘பில்லா 2’. விஷ்ணுவர்த்தன் இயக்கிய இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
இதனிடையே பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜித்தை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், அதனைத் தொடர்ந்து நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
பாட்ஷா படத்தின் ரீமேக் உரிமத்தை விஷ்ணுவர்த்தன் வாங்கி வைத்துள்ளதாக தகவல். அதில் அஜித்தை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரஜினியின் பில்லா படத்தை அஜித்தை வைத்து ரீமேக் செய்த அனுபவம் இருப்பதால், அதே ஸ்டைலில் பாட்ஷா படத்தையும் அஜித்தை வைத்து எடுக்க விஷ்ணுவர்த்தன் பேச்சு நடத்தி வருகிறார்.
– பாப்பாங்குளம் பாரதி.