“சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே கிடைக்கும்” எனும் டெய்லி டெலிக்ராப்பின் புகழுரையுடன் அமைந்திருக்கிறது இந்த ‘புக்கர்’ பரிசு பெற்ற ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ (The God of Small things) நாவல்.
நூலாசிரிரான அருந்ததி ராய் (பிறப்பு – 1961) இந்தியாவின் நட்சத்திர எழுத்தாளர்; களப்பணியாளர். இவரது நாவலான ‘The God of Small Things’ (சின்ன விஷயங்களின் கடவுள்) புக்கர் பரிசு பெற்றதும் உலகப் புகழை அடைந்தார்.
பின்னர் மேதா பட்கரின் ‘நர்மதா பச்சாவோ அந்தோல’னில் (நர்மதாவைக் காப்பாற்றும் போராட்டம்) தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்திய அரசமைப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீரிகள், ஆதிவாசிகள் முதலிய பலருக்காகவும் குரல் எழுப்பிவருகிறார்.
இந்துத்துவத்தின் கடுமையான விமர்சகர். தலித் விடுதலையில் ஆழ்ந்த கரிசனம் கொண்டவர். ஆய்வின் வலுக்கொண்ட அவரது கட்டுரைகள் அவற்றின் கருத்துகளுக்காகவும் நடைக்காகவும் உலகக் கவனம் பெற்றவை.
நூலில் ராஹேலுடனும் எஸ்தாவுடனும் கூடவே பயணிக்கவைக்கும் முதல் அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. இன்னதென்று சொல்லாமல் ஒரு மாதிரியான மோன உணர்வை தோற்றுவிக்கும் வகையில் சம்பவங்களை அடுக்கியபடி செல்கிறது.
ராஹேலுக்கு தோன்றுவது போல, மார்பில் வலி வருமா, கொண்டை நன்றாக எரியுமா என்பதுபோல நமக்கும் சிறு வயதில் சந்தேகங்கள் தோன்றியிருக்கலாம். எஸ்தாவின் மௌனம் நம்மை இடைவிடாமல் தொந்தரவு செய்கிறது.
இறக்காமலேயே புதைக்கப்படுகிறோமோ என மனம் முழுதும் புழுக்கத்தை ஏற்படுத்தும் ஸோபிமோளின் மரணம். இரட்டையர்களான இவர்களின் வாழ்க்கை பயணமே முதல் அத்தியாயம் முழுதும் கேரளாவின் பிண்னணியில் சொல்லப்படுகிறது.
‘முப்பத்தொரு வயது, அத்தனை முதுமை இல்லை, அத்தனை இளமை இல்லை. ஆனால் வாழவும் சாகவும் கூடிய ஒரு வயது’
‘ஆக்ஸ்போர்டுக்கு சென்றால் ஒருவன் அறிவாளியாகிவிடுவான் என்று அவசியமில்லை./ புத்திசாலித்தனம் ஒரு நல்ல பிரதம மந்திரியை உருவாக்குவதில்லை/ ஒரு ஊறுகாய் தொழிற்சாலையைக்கூட லாபகரமாக நடத்தத் தெரியாதவன் எப்படி மொத்த நாட்டையும் நிர்வகிக்க முடியும்?’
இ.எம்.எஸ் காலத்து கேரளாவின் அரசியல் நிலைமைகளைப்பற்றிய முழுமையான விவரணைகள் அழகு. முக்கியமாக முதலாளிகள் நிறைந்த அவ்வூரில் கம்யூனிசம் வேரூன்றியது தொடர்பான அலசல் அருமை.
அபிலாஷ் டாக்கீஸில் நாமும் ஒரு சுற்று சுற்றுகிறோம். பெயர்கள் கொஞ்சம் அன்னியமாக தெரிந்தாலும் வாசிப்பின் வேகத்தில் எல்லாமும் பழகிப்போகிறது.
ஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது இடையிடையே சட்டென்று இன்னொன்றை சொல்லி திரும்ப வரும் லாவகம் அருமை.
சில நேரங்களில் கட்டுரையின் தன்மையில் விபரங்கள் எனினும் பொருத்தமாக அமைந்து கதையை நகர்த்திச்செல்கிறது. இதுதான் என்று சொல்லாமல் பலவித உணர்வுகளை, சமூக அடுக்கு சீரழிவுகளை அங்கங்கே சொருகிச்செல்லும் காவியம்.
இருபத்தொரு வருடங்களுக்கு முன் நவீன உலக இலக்கியத்துக்கு அருந்ததி ராய் அளித்த இந்தியக் கொடை இந்நாவல்.
பழைமைவாதத்திலும் சாதியின் ஆதிக்கத்திலும் மூழ்கியிருந்த கேரள மண்ணில் கம்யூனிசம் காலூன்றத் தொடங்கியிருந்த காலகட்டம். கவித்துவமான மொழியில் கனவுத்தன்மை கூடிய நடையில் கால ஓட்டத்தின் முன்னும் பின்னுமாக நாவல் விரிந்து செல்கிறது.
குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற உலகம் சிதைக்கப்படுகிறது. சாதியின் கொடுங்கரங்களால் அப்பாவியின் உயிரும் தனிமைக்கொண்ட இதயத்தின் காதலும் நொறுங்குகின்றன.
சுயநலத்திலும் பொறாமையிலும் மனித உறவுகள் அர்த்தம் இழந்து போகின்றன. கருமுட்டைகளிலிருந்து ஒன்றாகப் பிறந்த எஸ்தா, ராஹேலின் வாழ்க்கைகள் என்றென்றைக்கும் திரும்ப முடியாதபடி வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்படுகின்றன.
உலகெங்கும் வாசகர்களால் மிகவும் நேசிக்கப்படுகிற, திரும்பத்திரும்ப வாசிப்பில் திளைக்க வைக்கிற நாவல்களில் ஒன்றான இது தனது ரசிக்கக்கூடிய மாய உலகிற்குள் ஒவ்வொரு நாளும் புதிய வாசகர்களை ஈர்த்து வருகிறது.
நூல்: சின்ன விஷயங்களின் கடவுள்
நூலாசிரியர்: அருந்ததி ராய்
மொழிபெயர்ப்பாளர்: ஜி. குப்புசாமி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 366