பயணங்கள் வாழ்வின் பாடசாலைகள். சாலையோர போதி மரங்கள். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே. அவை நம்மை அச்சத்திலிருந்து விடுவிக்கிறது.
அறியாத மனிதர்கள் உறவாகிறார்கள். வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்குகிறது.
பயணங்கள் ஒருவரின் ஆளுமையை உருவாக்குகிறது. சமூக அடையாளங்களை மறக்கச் செய்கிறது. பயணங்கள் காட்டும் தரிசனங்கள் நம் மனதின் அபத்தங்களையும், அற்பங்களையும், வன்மங்களையும் துடைத்தெறிந்து விடுகின்றன.
நாம் பயணங்கள் சென்று வரும்போது
“We Take Only memories, leave only footprints “
“இனிய நினைவுகளை எடுத்து கொண்டு நம் காலடித்தடங்களை மட்டும் அங்கு விட்டு வருகிறோம்”
சாவி பத்திரிக்கையாளர், எழுத்தாளர், நிறைய எழுத்தாளர்களை உருவாக்கியவர். நகைச்சுவை ததும்ப எழுதுவதில் வல்லவர்.
இவர் தன்னுடன் ஶ்ரீ.வேணுகோபாலன் (இவர் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை) ராணி மைந்தன் இவர்களுடன் தாய்லாந்து பயணம் செய்கிறார்.
நம் அண்டை நாடான தாய்லாந்தின் வரலாறு, பண்பாடு, அங்குள்ள மக்களின் தொழில், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், கோவில்கள் என அனைத்தைப் பற்றியும் அழகாக எழுதி உள்ளார்.
தாய்லாந்து எந்த காலணி ஆதிக்கத்திலும் இருந்ததே கிடையாது. அது தேவதைகளின் நாடு!
சிங்கப்பூரின் அழகிய, தூய்மையான விமான நிலையத்தில் இருந்து ஆரம்பமாகும் பயணம் மூன்று மணி நேரத்தில் பாங்காக் செல்கிறது.
அதே மூன்று மணி நேரம் அங்குள்ள ஹோட்டலுக்கு செல்ல ஆகிறது! அவ்வளவு போக்குவரத்து நெரிசல் என்கிறார் அங்குள்ள சாவியின் நண்பர் ஹுமாயுன் தான் தங்குவதில் இருந்து எல்லா இடங்களையும் சுற்றிப் பார்ப்பது வரை அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து இருந்தார்.
பாங்காக் விண்ணை முட்டி நிற்கும் நீண்ட நெடிய கட்டிடங்கள், இடையிடையே கூர், கூரான முனைகளை உடைய புத்தர் ஆலயங்கள், தாய்லாந்து முழுதும் 27000 புத்தர் ஆலயங்கள்! இந்த கூர்மை எல்லாவற்றிலும் தொடர்கிறது.
இளநீர்க்காய்கள் சீவப்பட்டு வெள்ளை வெளேரென்ன ஊசிமுனைக் கூர்மைகள், பெண்கள் தலையிலும், விரல்களிலும் கூர்மையான அணிகள், தாய்லாந்தின் அமைப்பே யானையின் துதிக்கை வடிவத்தில் கூர்மையாக உள்ளது!
தாய்லாந்து மக்கள் கூர்மையான அறிவுடையவர்கள். தாய்லாந்து பெண்களை தாய்க்கிளிகள் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
சிறந்த கலாசாரம், பிரகாசமான சிவப்பு விளக்கு இந்த இரண்டு முகங்களைக் கொண்டது தாய்லாந்து. பாங்காக்கில் சிவப்பு விளக்கின் ஒளி சற்றே அதிகம்.
அங்கு இளம் பெண்கள், சிறுமிகள் வறுமையின் காரணமாக, பெற்றோர்களை காப்பாற்ற கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு சென்று உலகின் பழைய தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இந்துக் கடவுளையும் தாய்லாந்து மக்கள் வழிபடுகின்றனர். சில இடங்களில் பிரம்மா கோவில், விஷ்ணு கோவில், விநாயகர் கோவில் என கோவில்கள் உள்ளன. இங்கும் அயோத்தி என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.
அயுத்தி என அழைக்கப்படுகிறது. இங்கு ராமர் கோவில் இல்லை! பெரிய புத்தர் கோவில் உள்ளது. ஶ்ரீரங்க பெருமாள் போல படுத்த நிலையில் பெரிய புத்தர் சிலை உள்ளது.
பாங்காக்கில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் ரோஸ் கார்டன் உள்ளது.
தாய்லாந்து கலாசாரத்தின் ஒரு மினி தோற்றத்தையே இங்கு ஒரு கல்சுரல் சோவாக காட்டுகிறார்கள்.
கோழிச்சண்டை, கத்திச்சண்டை, யானைகளின் சாகசங்கள், வீர விளையாட்டு என பல அயிட்டங்கள். இதன் கிளைமேக்ஸ் ஒரு திருமண நிகழ்ச்சியை தத்ரூபமாக நடத்திக் காட்டுகின்றனர்.
மணமகள் தலையில் கொத்தாக நூல் செண்டு சுற்றி அறுந்து போகாமல் அப்படியே மணமகன் தலையில் கட்டிவிடுகின்றனர்.
இது தான் நம் தாலி போல! கணவன் உன்னை என் தலையில் கட்டி விட்டார்களே என மனைவியிடம் அலுத்துக் கொள்வது உண்மையாவது போல, மணமகன் தலையில் தாலி போல கட்டுகின்றனர்!
வரலாற்றுப் பின்னனி உடைய பாலம். போர்க் கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது தாய்லாந்தின் க்வாய் நதி மேல் கட்டப்பட்ட பாலம். இந்த சம்பவத்தை வைத்து “த பிரிட்ஜ் ஓவர் ரிவர் க்வாய்“ என்றொரு ஆங்கிலப் படம் எடுத்து இருந்தனர்.
அந்த படத்தைப் பார்த்தாலும், அதன் நீண்டப் பெயராலும் கவரப்பட்ட சாவி அதைப் பார்க்க தீராத ஆவல் கொண்டு இருந்தார்.
காஞ்சனபுரிக்கு 4 மைல் தொலைவிலுள்ள இந்த பாலத்தின் வழியாக வந்த ஜப்பானிய போர் வீரர்களுக்கும் தாய் ராணுவத்திற்கும் யுத்தம். ஆனால் ஜப்பானியர்களின் நோக்கம் இந்த பாலம் வழியாக பர்மாவிற்கு சென்று அதை கைப்பற்றுவது தான் என தெரிந்து யுத்தத்தை கை விட்டனர்.
பின்பு பர்மாவுக்கும் தாய்லாந்துக்கும் ரயில் பாதை 415 கி.மீட்டருக்கு அமைக்க திட்டமிட்டு, ஆறு ஆண்டுகள் தேவைப்பட்ட, வேலையை, தங்களிடம் ஆயிரக்கணக்கில் போர்க்கைதிகளாக இருந்தவர்களை வைத்து பதினெட்டு மாதங்களில் முடித்தனர். அது ஒரு சோக கதை!
ஆசியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் போர்க்கைதிகள். ஆடு மாடுகள் போல வரவழைக்கப்பட்டனர்.
ரயில் பாதைக்கு வேண்டிய கல்லையும் மண்ணையும் அவர்கள் முதுகில் ஏற்றினார்கள்.
கல்லிலும் முள்ளிலும் நடக்க வைத்தனர். போதிய உணவு இல்லை தேவையான ஓய்வு இல்லை.
சுகாதாரமற்ற சூழல், அடி உதைகள், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை மலேரியா போன்ற நோய்களில் இறந்தவர்களுக்கு கணக்கு வழக்கே இல்லை! அங்குள்ள கல்லறைகள் இன்னும் இறந்த போர்க்கைதிகளின் சோகக் கதைகளை பேசிக்கொண்டு உள்ளது.
இவர்கள் மகாராஜாவை தெய்வமாக கருதுகிறார்கள். அவரை அவதூறாக பேசமாட்டார்கள். பிறரை பேசவும் விட மாட்டார்கள். மன்னர்களை கிங் ராமா 1, கிங் ராமா 2 என்றுதான் அழைக்கப்படுகிறார்கள்.
ஐந்தாம் ராமா மன்னரின் பிரமாண்டமான தங்க தேக்கு மரத்தால்கட்டப்பட்ட ராஜமாளிகையை பார்த்தனர். அங்கு வசிக்கும் குடும்பங்களுடன் பேசி வாழ்வு முறையை அறிந்தனர்.
தமிழ் நாட்டின் ஊட்டி போல அங்கு சாங்மாய்! அதற்கு ஒரு ஏர் கண்டிசன் லிமோஸின் பஸ்ஸில் பிரயாணம் செய்தனர். அந்த பஸ் தரையில் பறக்கும் குட்டிவிமானம் என்றே சொல்ல வேண்டும் என்கிறார்.
போகும் இடங்களில் பல கிராமங்களைப் பார்க்கின்றனர்.அங்கு மக்கள் பேசும் மொழியில் பல சொற்கள் தமிழ் வார்த்தைகளுடன் தொடர்பு உடையதாக உள்ளது. உதாரணம் – சொம்பட் (சம்பத்).
தாய்லாந்து சில்க், வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளிச் சாமான்கள், விசிறிகள், குடைகள் இவை உலகப்பிரசித்தம். குடை விழா இங்கு நடக்கிறது.
அங்கு கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்கள் குடும்பத்தைக் காப்பாற்ற நகர்புறம் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
ஒரு வீட்டில் பட்டு புழுக்களை கொன்று, பட்டு நூல் எடுப்பதில் இருந்து பட்டாடை நெய்வது முதல் கண்காட்சி படுத்தி உள்ளனர். அழகிய வண்ண ஓவியங்கள் வரைந்த குடைகள், விசிறிகள் இங்கு அதிகம் செய்கின்றனர்.
புத்த நாகரீகத்தின் தொட்டில் இந்த சாங்மாய்!
பாங்காக்கில் மறைமலை அடிகளின் பேரன் மறைக்காடன் அவர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.
பிறகு பொங்கல் திருவிழாவை அங்கேயே கொண்டாடி இனிமையான நினைவுகளுடன், நிறைந்த மனதுடன் சென்னை வந்து சேர்ந்தனர்
“பயணங்கள் இல்லை எனில் வாழும் வாழ்க்கை பயனில்லாமல் போய்விடும்.
சாலைகள் நம்மை எதிர் நோக்கிக் காத்துக்கிடக்கின்றன, நாம் பயணங்களை மேற்கொள்ள…” என்பதை விளக்குகிறது எழுத்தாளர் சாவியின் தாய்லாந்து பயணக்கட்டுரை நூல்.
நூல்: தாய்லாந்து
ஆசிரியர்: சாவி
பதிப்பகம்: கிண்டில் எடிசன்
பக்கங்கள்: 81
விலை: ரூ. 49/-