ஜப்பான் – கலவையான விமர்சனங்களைக் குவிக்கும்!

முழுக்க கமர்ஷியலாக படம் எடுப்பதும் எளிது; முழுக்க யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாகப் படமெடுப்பதும் எளிது தான். ஆனால், இரண்டு வகைமையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தாற்போல ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உண்மையிலேயே கடினமானது.

அப்படியொரு வெற்றியைச் சுவைக்க வேண்டுமென்று சில இயக்குனர்கள் விரும்புவார்கள். இயக்குனர் ராஜுமுருகன் அப்படியொரு முயற்சியாகத்தான் ‘ஜப்பான்’ படத்தைத் தந்திருக்கிறார்.

கார்த்தி, அனு இம்மானுவேல், வாகை சந்திரசேகர், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ். ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பவா. செல்லத்துரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் சாதாரண ரசிகர்களைக் கவருமா?

யார் இந்த ஜப்பான்?

ஒரு பெரிய நகைக்கடையில் கொள்ளை நடக்கிறது. 200 கிலோ தங்க நகை திருடு போனதாகத் தகவல் வெளியாகிறது. அந்த நேரத்தில், கடை வாசல் முன்பாக ஒரு நபர் மாட்டுவண்டியில் வந்து போயிருக்கிறார். அவர், சாக்கடைக் கழிவுகளில் இருந்து தங்கத் துணுக்குகளைப் பிரித்தெடுக்கும் வேலையைச் செய்து வருகிறார்.

குடி போதை, லாட்டரி மோகம் ஆகியவற்றில் சம்பாதித்த பணத்தை வாரியிறைக்கும் காரணத்தால், அவரது மனைவி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அந்த பிரிவைத் தாங்க முடியாமல், மாட்டு வண்டியை வீட்டில் விட்டுவிட்டு மருதமலைக்குச் செல்கிறார் அந்த நபர். அதிலிருக்கும் சாக்கடைக்கழிவில் ஒரு தங்க நாணயம் இருக்கிறது.

அந்த நாணயத்தில் ஜப்பான் என்ற நபரின் பொறிக்கப்பட்டிருக்கிறது. போலீசாரால் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியே இந்த ஜப்பான்.

ஜப்பானின் கூட்டாளி என்று சொல்லி, அந்த நபரை மருதமலை கோயில் வாசலில் கைது செய்கின்றனர் போலீசார். ‘ஜப்பான் எங்க’ என்று கேட்டு அவரைச் சித்திரவதைக்கு ஆடுபடுத்துகின்றனர்.

அதேநேரத்தில், தூத்துக்குடி அருகே ஒரு மருத்துவரைச் சந்திக்கிறார் ஜப்பான்.

அப்போது, அவர் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரிய வருகிறது. அதுவே, கொள்ளையடித்த பணத்தில் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைச் சொல்லிவிடுகிறது.

வாழ்வே இருண்டு போனதாக எண்ணும் ஜப்பான், உடனடியாகத் தான் ஒருதலையாகக் காதலிக்கும் சஞ்சனாவைச் (அனு இம்மானுவேல்) சந்திக்கக் கிளம்புகிறார்.

கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஜப்பான் தயாரித்த படத்தில் நாயகியாக நடித்தவர்தான் சஞ்சனா. படப்பிடிப்பில் இருக்கும் அவரை ஜப்பான் சந்திக்கும்போது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போலீசார் ஒரே நேரத்தில் சுற்றி வளைக்கின்றனர்.

அப்போதுதான், தான் செய்யாத ஒரு குற்றத்தில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஜப்பான் அறிகிறார். அதன்பின் என்ன நடந்தது? அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்தாரா, அந்த குற்றத்தில் சிக்கவைத்தது யார் என்பதைக் கண்டறிந்தாரா எனச் சொல்கிறது மீதிப்படம்.

யார் இந்த ஜப்பான் என்ற கேள்விக்குப் பதிலாக, அவர் நிகழ்த்திய கொள்ளைச் சம்பவங்களும், அதன்பிறகு மேற்கொண்ட ஆடம்பர வாழ்க்கையும் திரையில் காட்டப்படுகிறது.

படம் முழுக்கத் தொடரும் என்ற நம்பிக்கை வேரூன்றும்போது, வேறோரு திசைக்குத் திரைக்கதை திரும்புகிறது. இந்த படத்தின் பலமும் பலவீனமும் அதுவே!

கார்த்தியின் ‘சம்பவம்’!

அலட்டல் உடல்மொழி, தெத்துப்பல்லை மறைக்கும்விதமான பேச்சுத்தொனி, எதற்கும் யாருக்கும் இளகாத இதயம் என்று கார்த்தி ஏற்றிருக்கும் ‘ஜப்பான்’ பாத்திரம் முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது.

நாயக துதிக்குச் சற்றும் வழியில்லாத ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதன் மூலமாக, ‘தரமான சம்பவம்’ ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்.

‘நாயகன்’ படத்தில் வரும் குயிலியைப் போல, ‘நிலா அது வானத்து மேலே’ டைப்பில் ‘டச்சிங்.. டச்சிங்.. பாடலில் தோன்றியிருக்கிறார் அனு இம்மானுவேல்.

அவரது வேடமும், அதன் ‘எக்ஸ்டென்ஷன்’ ஆகவே உள்ளது. மனதில் நிற்கும்படியான ஒரு பாத்திரத்தில் நடிப்பதென்பது அனுவுக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதிலும் அது தொடர்கிறது.

இருதயம் ஆக வரும் வாகை சந்திரசேகர் படம் முழுக்க கார்த்தி கூடவே வருகிறார். நீண்டநாட்கள் கழித்து அவரது முகத்தைத் திரையில் பார்க்கும் வாய்ப்பைத் தவிர அதில் சிறப்பு எதுவுமில்லை.

சுனில், விஜய் மில்டன் இருவரும் சமமான அளவில் திரையை நிறைக்கின்றனர்; போலவே, அவர்களது கதாபத்திரங்களும் காவல்துறையில் எதிரும்புதிருமாக இயங்குபவர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் கே.எஸ்.ரவிக்குமார், பவா செல்லதுரை உட்படப் பலர் இதில் வந்து போயிருக்கின்றனர். ஜித்தன் ரமேஷும் குறிப்பிடத்தக்க ஒரு வேடத்தை ஏற்றிருக்கிறார்.

இந்த படத்தில் பல பாத்திரங்கள் இருந்தபோதும், ஜப்பான் மற்றும் அவரது தாய் பாத்திரங்கள் மட்டுமே கதையின் அடிப்படையாக உள்ளன. அந்த தாய் பாத்திரம் திரையில் வரும் நேரம் குறைவு என்பதால், முழுக்க கார்த்தியின் ஆதிக்கமே தலைவிரித்தாடுகிறது.

இதற்கு நடுவே தங்கம் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் தம்பதிகளாக வருபவர்களில் நடிப்பு திரையில் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. அப்பாத்திரங்கள் எந்த அளவுக்கு ரசிகர்களைக் கவர்கின்றன என்பதைப் பொறுத்தே, இப்படத்தின் வெற்றி அமையும்.

வழக்கமான கதையொன்றை முழுக்க வேறொரு கோணத்தில் சொல்கிறது ராஜு முருகனின் திரைக்கதை. அதற்கு ஏற்றாற்போல, திரையில் ‘ரியாலிட்டி’யை உணர வைத்திருக்கிறது ரவி வர்மனின் ஒளிப்பதிவு.

சண்டைக்காட்சிகள், பாடல்களில் ‘பேண்டஸி’ தென்பட்டாலும், படம் முழுக்க யதார்த்தமாகக் கண்ணால் நாமே நேராகக் காண்பது போன்ற உணர்வை ஊட்ட முயன்றிருப்பது அபாரம்.

வித்தியாசமான காட்சியாக்கம் நம் கவனத்தைக் கவர்வதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்கிறது வினேஷ் பங்கலானின் தயாரிப்பு வடிவமைப்பு.

பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, எந்தக் காட்சியை ‘கட்’ செய்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறது. அதனால், இடைவேளைக்குப் பிறகு ‘கொட்டாவி’ பெருகும் வாய்ப்பும் கணிசம்.

சமீபகாலப் படங்களைப் போலல்லாமல், இதில் வன்முறையின் அளவு திரையில் குறைவாகத் தெறிக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் சண்டைக்காட்சி வடிவமைப்பாளர் அனல் அரசு.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை பல இடங்களில் ஓகே ரகம். ஆனால், அதனால் எழும் சலிப்பை கிளைமேக்ஸ் காட்சியில் நிவர்த்தி செய்திருக்கிறார். ‘சொட்டாங்கல்ல’ பாடல் மெலடி தென்றலாக மனதைத் தொடுகிறது; அதற்கு ஏற்றாற்போல, ‘டச்சிங் டச்சிங்’ நம்மை ஆட்டுவித்திருக்க வேண்டும். அது நிகழவில்லை.

‘ஜப்பான்’ என்ற பாத்திரத்தை வடிவமைத்தது முதல் சில பத்திரிகைச் செய்திகளை நினைவூட்டும் வகையிலாகச் சில காட்சிகளை இணைத்தது வரை, வித்தியாசமான முயற்சியொன்றைச் செய்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.

‘சிங்கத்துக்கு சீக்கு வந்தா பெருச்சாளியெல்லாம் பிரிஸ்கிரிப்ஷன் எழுதுமாம்’ என்பது போன்ற வார்த்தை ஜாலங்களும் பஞ்ச்களும் இதில் நிறையவே உண்டு. அவை ஆங்காங்கே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

இது ராஜுமுருகன் படமா?

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸிக்குப் பிறகு ராஜு முருகன் நான்காவதாக இயக்கியிருக்கும் படமே ‘ஜப்பான்’. சமூகத்தில், நாட்டில் சாதாரண மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசின அவரது முந்தைய படைப்புகள். அந்த விமர்சனச் சத்தம் ஜப்பானில் கொஞ்சம் குறைவாகவே கேட்கிறது.

அவரது கதை சொல்லும் பாணி வழக்கத்திற்கு மாறாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அது எந்தளவுக்கு கமர்ஷியல் பாணியை கைக்கொண்டிருக்கும் என்பதே பெரும்பாலானோரின் கேள்வியாக இருந்தது. இப்படத்தில் அக்கேள்விக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

பையா தொடங்கி சர்தார் வரை, தான் நடித்த பெரும்பாலான படங்களில் அலட்டல் தொனியிலான உடல்மொழியைக் கைக்கொண்டிருப்பார் கார்த்தி. முதல் இரண்டு படங்களான பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவனில் அவர் ஏற்ற எதிர்மறை பாத்திரங்களின் தொடர்ச்சியாகவே அவை அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், வெகுநாட்களுக்குப் பிறகு ஜப்பானில் முழுக்கவே எதிர்மறையானதொரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனை வித்தியாசமாகக் காட்ட நிறையவே உழைத்திருக்கிறார். அதற்கேற்ற ‘முத்திரை’ காட்சிகள் இதில் அதிகம் இல்லை.

படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது. ஆனாலும் வாகை சந்திரசேகர், ஜித்தன் ரமேஷ், கே.எஸ்.ரவிக்குமார் என்று பலரது பாத்திரங்கள் திரைக்கதையில் முழுமையற்று தொக்கி நிற்கின்றன.

அனு இம்மானுவேல் பாத்திரமும் கூட, திரையில் அம்போவென விடப்பட்டிருக்கிறது. படத்தின் நீளம் கருதி அக்காட்சிகள் ‘கட்’ ஆகியிருந்தால், ‘சாரி’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

இந்த படத்தில் இரண்டு விஷயங்கள் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்க வேண்டும். சாக்கடையில் இருந்து தங்கத் துளிகளைப் பிரிப்பவர்களின் வாழ்க்கை பூதாகரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்;

போலவே, கார்த்திக்கும் அவரது தாய்க்குமான காட்சிகள் ஆங்காங்கே இடம்பெற்றிருக்க வேண்டும். ‘கேஜிஎஃப்’பை நினைவூட்டும் என்ற காரணத்தினாலோ என்னவோ அது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், மொத்தப்படமும் ‘கேஜிஎஃப்’பின் இன்னொரு வடிவமாகவே தெரிகிறது.

அதில் சமநிலையைப் பேணியிருந்தால், யதார்த்த பாணியில் அமைந்த கமர்ஷியல் திரைப்படமாக ‘ஜப்பான்’ உருமாறியிருக்கும். தற்போது, ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெறும் வகையிலேயே இப்படம் உள்ளது.

 – உதய் பாடகலிங்கம்

You might also like