த்ரீ ஆஃப் அஸ் – மங்கும் நினைவுகளின் மீதான வெளிச்சம்!

சில படங்கள் திரையில் ஒன்றரை மணி நேரமே ஓடும். ஆனால், அது ஒரு யுகமாகத் தோற்றமளிக்கும்; பெரும் அயர்ச்சியைத் தரும்.

சில நேரங்களில், ட்ரெய்லரே அது ஒரு ‘ஸ்லோட்ராமா’ என்பதைச் சொல்லிவிடும். அதையும் மீறி பார்த்து, லயித்து, தியேட்டரை விட்டு வெளியேறிய பிறகும் அந்த காட்சியின்பத்திலே திளைக்க வைக்கும் படங்கள் மிகச்சிலவே.

அவினாஷ் அருண் தாவரே இயக்கத்தில் ஷெஃபாலி ஷா, ஜெய்தீப் அலாவத், ஸ்வானந்த் கிர்கிரே பிரதான வேடங்களில் நடித்துள்ள ‘த்ரீ ஆஃப் அஸ்’ படம் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துகிறது.

சரி, இது எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்குமா?

பால்யத்தை நோக்கி..!

மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றமொன்றில் அலுவலகம் சார்ந்தியங்கும் பணியைச் செய்து வருபவர் ஷைலஜா (ஷெஃபாலி ஷா).

அவரது கணவர் தீபாங்கர் (ஸ்வானந்த் கிர்கிரே) எல்ஐசி உட்படச் சில காப்பீட்டு நிறுவனங்களின் முகவராக இருந்து வருகிறார். இவர்களது மகன் ஐஐடியொன்றில் படிக்கிறார்.

டிமென்ஸியா எனும் ஒரு வகை மறதி நோயால் பாதிக்கப்பட்ட காரணத்தால், தினசரி வாழ்வைச் சரிவர மேற்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார் ஷைலஜா. விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருக்க முனைகிறார்.

திடீரென்று, தான் சிறு வயதில் வாழ்ந்த வெங்குர்லா எனும் ஊருக்குச் செல்லப் பிரியப்படுகிறார். மகாராஷ்டிராவுக்கும் கோவாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அவ்வூர் அமைந்திருக்கிறது.

பதின்ம வயதின் தொடக்கத்தில், அவ்வூரில் ஷைலஜா வாழ்ந்திருக்கிறார். அப்போது தான் படித்த பள்ளியைப் பார்க்க ஆசைப்படுவதாகக் கணவரிடம் கூறுகிறார்.

அந்த நினைவுகள் தன்னை விட்டு அகல்வதற்கு முன்பாக, அங்கு சென்றுவர வேண்டும் என்பதே அவரது திட்டம்.

உடனடியாக ஷைலஜாவும் தீபாங்கரும் வெங்குர்லா செல்கின்றனர். அந்த பள்ளி மூடப்பட்டிருக்க, அப்பகுதியில் வசிக்கும் பள்ளித்தோழியைத் தற்செயலாகச் சந்திக்கிறார் ஷைலஜா.

அவர் மூலமாக, பள்ளித்தோழன் பிரதீப் ஒரு வங்கியில் மேலாளராகப் பணியாற்றுவது தெரிய வருகிறது. கணவரோடு சேர்ந்து அவரைச் சந்திக்கச் செல்கிறார் ஷைலஜா.

ஷைலாஜாவை நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கும் பிரதீப் (ஜெய்தீப் அலாவத்) ஆச்சர்யத்தில் உறைகிறார்.

சிறு வயதில் தான் வாழ்ந்த, சுற்றிய இடங்களை மீண்டும் பார்க்க உதவ வேண்டுமென்று அவரிடம் கேட்கிறார் ஷைலஜா. அவரோ, என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்.

அன்றிரவு, பிரதீப் தனது மனைவி சரிகாவிடம் (காதம்பரி காதம்) நடந்ததைச் சொல்கிறார். அவர் முகத்தில் பதற்றம் நிறைந்து வழிகிறது.

அதைக் கேட்டதுமே, ‘உங்க பால்ய பருவ பிரியத்தை ஒருவழியா சந்திச்சுட்டீங்க’ என்று கிண்டலடிக்கிறார் சரிகா.

கூடவே, ‘என்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் ஷைலஜாவையும் அவரது கணவரையும் கூட்டிச் செல்லுமாறு கூறுகிறார்.

அதன்பிறகும் பிரதீப்பின் பதற்றம் நின்றபாடில்லை.

‘ஷைலஜா திடீரென்று ஏன் வெங்குர்லா வர வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் தெரியவில்லை’ என்கிறார் பிரதீப்.

அவர் சொல்வது போலவே, ஷைலஜாவின் மனதை ஏதோ ஒரு உண்மை கரையான்கள் போலப் பல ஆண்டுகளாக அரித்து வருவது நமக்கும் பிடிபடுகிறது.

ஷைலஜாவின் வாழ்வில் மறைந்திருக்கும் அந்த உண்மை எப்படிப்பட்டது? நினைவுகள் அழிந்துவிடும் முன்பாக, அந்த ஊருக்குச் சென்றதனால் அவர் அடையப்போவது என்ன?

இது போன்ற கேள்விகளுக்கு மிக மிக மெதுவாக நகரும் காட்சிகளின் வழியே நமக்குப் பதிலளிக்கிறது ‘த்ரீ ஆஃப் அஸ்’.

சுண்டியிழுக்கும் நடிப்பு!

நொடியில் மாறும் முகபாவனைகளோடு நம்மை அசரடிக்கிறார் ஷெஃபாலி ஷா. தனது மனதிலுள்ள நினைவுகள் மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒவ்வொரு பிரேமிலும் அவர் உணர்த்தியிருப்பது அற்புதமான விஷயம்.

சக நடிகர்கள் பொறாமைப்படக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துவது பிரதீப் அலாவத்தின் வழக்கம். ‘பாதாள்லோக்’ வெப்சீரிஸை அடுத்து, இந்தப் படத்தில் மனதில் நிற்கும்படியான ஒரு பாத்திரத்தில் அவர் தோன்றியிருக்கிறார்.

ஷெஃபாலியை முதன்முறையாகச் சந்திப்பதில் தொடங்கி, கிளைமேக்ஸில் ராட்டினமொன்றில் அமர்ந்தவாறு அவரோடு பேசுவது வரை ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நெகிழ வைக்கிறார்.

பாடலாசிரியர், பாடகர், திரைக்கதையாசிரியர், நடிகர் என்று பன்முகம் கொண்டவர் ஸ்வானந்த் கிர்கிரே.

இதில், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் கணவனாக வந்து போயிருக்கிறார்.

படம் முழுக்க இறுக்கமான பாவனைகளுடன் வலம் வரும் அவர், ‘என்கூட நீ கடைசியா எப்போ சிரிச்சு சந்தோஷமா இருந்தே’ என்று ஷெஃபாலியிடம் கேட்குமிடத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

இவர்கள் மூவரது நடிப்பும் சுண்டியிழுக்கும் வகையில் அமைந்திருப்பதே இந்த படத்தின் பலம்.

இவர்கள் தவிர்த்து ஜெய்தீப்பின் மனைவியாக நடித்த காதம்பரி காதம், பள்ளித் தோழிகள் மற்றும் ஆசிரியையாக வருபவர்கள் என்றும் ஒரு டஜன் கலைஞர்களே இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.

படம் முழுக்கப் பெரும்பாலான இடங்களில் மௌனமே நிறைந்திருக்கிறது. வெகு சில இடங்களில் மட்டும் தனது பின்னணி இசையால் திரைக்கதையின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் அலோக்நந்தா தாஸ்குப்தா.

சன்யுக்தா காஸாவின் படத்தொகுப்பானது, நாம் நேரடியாகப் பார்க்கும் உணர்வைத் திரையில் காட்ட முயன்றிருக்கிறது. மிகநேர்த்தியாகக் கதை சொல்ல உதவியிருக்கிறது.

அசோக் லோகரே – ஏ.ருச்சாவின் தயாரிப்பு வடிவமைப்பும், அவர்களோடு இணைந்த பிரசாத் சவனின் கலை இயக்கமும், திரையில் உண்மைக்கு நெருக்கமான தோற்றம் தெரியச் செய்திருக்கின்றன.

இந்தப் படத்திற்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் அவினாஷ் அருண் தாவரே.

ஒரு கோலத்தில் இடம்பெற்ற புள்ளிகளாகக் கதாபாத்திரங்களைக் காட்டும் வகையில், படம் முழுக்க ‘அதீத வைட் ஷாட்கள்’ உள்ளன. அதற்கு நேர்மாறாக, முகத்தைத் துல்லியமாகக் காட்டும் குளோஸ்அப் காட்சிகளும் நிறைய.

இவையிரண்டும் சேர்ந்து, கதையின் மையமாக வழங்கும் பாத்திரங்களையும், அவை நடமாடுகின்ற நிலத்தின் சிறப்பம்சங்களையும் தெளிவாகக் காட்டுகின்றன.

கவித்துவமான காட்சிகள்!

பாட்டியை ஆஜ்ஜி என்று மராத்தியில் அழைப்பது போன்ற மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த கூறுகளும், வெங்குர்லா மக்களிடம் தென் தமிழ்நாட்டை ஒத்த வாழ்க்கைமுறை காணக் கிடைப்பதும், இப்படத்தோடு நம்மைப் பிணைக்கிறது.

ஆரம்பத்தில் வரும் சில காட்சிகள் மும்பை மாநகரத்தின் வேகமான இயக்கத்தை உணர்த்தினாலும், அதன்பிறகு முழுக்கவே நாம் வெங்குர்லாவோடு ஐக்கியமாகிறோம்.

ஷெஃபாலி ஏற்ற ஷைலாஜா பாத்திரத்தின் பால்ய அனுபவங்கள் எப்படிப்பட்டவை என்றறியப் பிரியப்படுகிறோம். அதற்கேற்ற வகையில், கவித்துவமாக நகர்கின்றன பல காட்சிகள்.

ஜெய்தீப் – ஷெஃபாலி ஏற்ற பாத்திரங்கள் பால்யத்தில் காதல் கொண்டிருந்தன என்று திரைக்கதையின் எந்த இடத்திலும் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால், அது அவர்கள் சந்திக்கும் காட்சிகளில் தெளிவாகத் தெரிய வருகிறது.

அந்த காதலைத் திரையில் காட்டிய விதம் மீட்டப்படாமல் இருக்கும் ஒரு இசைக்கருவியில் இருந்து மீண்டும் இசை வெளிப்படுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

போலவே, திரைக்கதையின் இறுதிக் கட்டத்தில் ஷைலஜாவைப் பல ஆண்டுகளாக அலைக்கழிக்கும் உண்மையும் அவரது மனதை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறது.

படத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ஷாட், அப்பாத்திரத்தின் மனதிலிருந்த இறுக்கம் முற்றிலுமாக அகன்றுவிட்டதை நமக்கு உணர்த்துகிறது; இயக்குனர் அருண் தாவரே அதனை உணர்த்தியிருக்கும் விதத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!

‘த்ரீ ஆஃப் அஸ்’ கதை நிச்சயம் புதிதல்ல; ‘சொல்லப்படாத காதலும்’ கூட நாம் அறியாததல்ல; அதையெல்லாம் தாண்டி, பிரமாண்டத்தைக் கொட்டும் படங்களுக்கு நடுவே எளிமையானதொரு உலகத்தை நம் முன்னே வைக்கும் அதிசயத்தைச் செய்கிறது இப்படம்.

பால்யத்தை நினைவூட்டும் பல காட்சிகள் இதிலுண்டு. அனைத்துக்கும் மேலே, மனதின் பூட்டப்பட்ட அறைகளுக்குள் இருக்கும் ஏக்கங்கள் எவரோடும் பகிரப்படாமல் மடிந்துவிடக் கூடாது என்றெண்ணும் ஒரு பெண்ணின் துயரம், நம்மை நெகிழச் செய்யும் வகையிலான திரைக்கதையின் வழியே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மங்கிவரும் நினைவுகளின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம்.

ஆதலால், இந்த ‘த்ரீ ஆஃப் அஸ்’ அனைவருக்குமான படம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. என்ன, அதனை உணரத்தான் நிறையவே பொறுமை தேவைப்படும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like