வள்ளுவர், யாழ், திருக்குறளுடன் நவீன உடைகள்!

ஃபேஷன் உலகில் ஜொலிக்கும் அபிநந்தினி

சக்சஸ் ஸ்டோரி – 1 

****

சென்னையைச் சேர்ந்த இளம் ஆடை ஒப்பனையாளர்களில் மிக முக்கியமான பெயர் அபி நந்தினி மகேந்திரகுமார். ‘புதிய தலைமுறை’ நிறுவனத்தில் உதவி ஸ்டைலிஸ்ட்டாக முதல் வேலையைத் தொடங்கியவர், இன்று நுங்கம்பாக்கத்தில் சொந்தமாக ஒரு ஃபேஷன் ஸ்டுடியோவை வெற்றிகரமாக நடத்திவருகிறார்.

இளங்காடு கிராமம்

இவரது சொந்த ஊர் வந்தவாசி அருகிலுள்ள இளங்காடு. தந்தை மகேந்திர குமார் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். தொழில்முனைவோராக இருக்கிறார் சகோதரர். சென்னையில் பிறந்து வளர்ந்த அபிநந்தினி, ஃபேஷன் டிசைனிங் படித்தார்.

ஃபேஷன் உலகில் வென்ற கதையை அவர் மனந்திறந்து பேசினார். “நான் படிக்கும்போதே புதிய தலைமுறையில் ஸ்டைலிஸ்ட் வேலையில் சேர்ந்தேன். பிறகு அனுபவத்திற்காக டிசைனர் பலரிடம் வேலை பார்த்தேன். கடைசியாக, சென்னையின் புகழ்பெற்ற டிசைனர் ரெஹானேவிடம் ஓர் ஆண்டு இருந்தேன்.

எனக்கு பேஷன் டிசைன் உலகில் ஆறு ஆண்டுகள் சிறந்த அனுபவம் கிடைத்தது. பின்னர், சொந்தமாக ஏஎஸ்கே கொட்யூர் என்ற பேஷன் ஸ்டுடியோவை தொடங்கினேன்.

ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்ததால், எல்லாமே அங்கு ஆங்கில வழியில்தான் நடக்கும். எனக்குத் தமிழ்மீது அதிக ஆர்வம் இருந்தது.

தமிழ்மீது ஆர்வம்:

தமிழில் ஏதாவது செய்யவேண்டும் என்ற பள்ளிப் பிராயத்திலேயே நினைத்திருக்கிறேன். நான் ஸ்டுடியோ ஆரம்பித்த நாட்களில் லெட்சுமி, வெங்கடேஷ்வரா என கடவுள் உருவங்களை வைத்து பெண்களுக்கான ப்ளவுஸ் டிசைன் செய்தார்கள். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது.

என்னிடம் அதேபோல கேட்கும்போது சாம்பிள் இல்லை. மாற்றாக, என்ன செய்யமுடியும் என யோசித்தேன்.

தமிழ் ஆர்வத்தின் விளைவாக, திருவள்ளுவர் உருவம் பொறித்த ப்ளவுஸ் செய்தேன். அதைத்தொடர்ந்து தமிழ்த்தாய், யாழ் மற்றும் ராணிகளின் உருவங்களுடன் டிசைன் செய்தேன். அதற்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு.

மெல்ல என் பிராண்டும் மக்களிடம் போய்ச் சேர்ந்தது. வள்ளுவரை 3டி எம்பராய்டரி செய்து, கீழே திருக்குறளை வைத்திருந்தேன். நான் டிசைன் செய்த முதல் ப்ளவுஸில் அகர முதல் எழுத்தெல்லாம்… என்ற குறள் இடம்பெற்றது.

ஆடை ஒப்பனை

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற ப்ளவுஸ்களை டிசைன் செய்து கொடுக்கத் தொடங்கினோம். அதுதான் எங்களது பிரதான பணியாக இருந்தது.

பேஷன் ஸ்டியோ மட்டுமன்றி, நான் பல வேலைகளைச் செய்பவளாக இருந்துவருகிறேன்” என்று உற்சாகத்துடன் பேசுகிறார்.

எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றும் அபி நந்தினி, தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஸ்டைலிஸ்ட்டாக இருக்கிறார்.

அவ்வப்போது நண்பர்களின் விளம்பரப் படங்கள் மற்றும் திரைப்படங்களிலும் ஆடை ஒப்பனையில் ஆலோசனைகள் வழங்குகிறார்.

புதுமுக நடிகர்களுக்கு போர்ட்ஃபோலியோ ஷூட், பத்திரிகை அட்டைப்பட ஷூட் போன்றவற்றில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.

2019 அக்டோபரில், 15 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் ஸ்டிடியோ தொடங்கிய அபி நந்தினிக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

பிராண்ட் பிரபலம்

மீண்டும் பேசிய அவர், “கடந்த நான்கு ஆண்டுகளில் எங்கள் பிராண்ட் மக்களிடம் பிரபலமாகியுள்ளது. ஆரம்பத்தில் பெண்களை ஈர்ப்பதற்காக வள்ளுவர் உருவத்துடன் ப்ளவுஸ் செய்தோம். பிறகு அவரவர் தேவைக்கேற்ப நவீனமாக டிசைன் செய்தோம்.

எதிர்காலத்தில் வெளியே பிரான்சைஸ் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறோம். எந்த தொழிலையுமே முழுமையாகத் தெரிந்துகொண்டு செய்யவேண்டும். அப்போதுதான், அதில் நல்ல வளர்ச்சியையும், சிறந்த வருவாயையும் எட்ட முடியும்.

அனுபவம் அவசியம்

என்னால் ஓர் உடையைத் தைக்கமுடியுமா என்றால், முடியும். ஒரு தொழில்முனைவோராக அது மிகவும் தேவையான திறன். சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கும்போது, நமக்கு அதில் நல்ல அனுபவம் இருக்கவேண்டும்.

இன்று பல மாணவர்களும் என்னிடம் பயிற்சிக்கு வருகிறார்கள். ஆனால் ஏதோ ஆர்வம் இல்லாமல் படித்துவிட்டு அரைகுறையாக வருகிறார்கள்.

எதை பிரதானமாக படிக்கிறார்களோ, அந்த அறிவை முழுமையாகப் பெறவேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள்” என்று அன்புடன் வழிகாட்டுகிறார்.

-எஸ். சங்கமி

You might also like