– கவிஞர் இந்திரன்
ஆகஸ்ட் 1982-ல் எனது ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ வெளிவந்து 10 ஆண்டுகள் கழித்து ராஜ் கௌதமன் ‘தலித் பண்பாடு’ நூலை செப்டம்பர் 1993 இல் எழுதினார்.
துரை.ரவிக்குமார் (இன்றைய விழுப்புரம் எம்.பி.) ராஜ் கௌதமன் புத்தகத்திற்கு ஒரு அட்டைப்படம் உடனே வேண்டும் என்று எனக்கு போஸ்ட் கார்டு எழுதினார்.
(அப்போது என் வீட்டில் டெலிபோன் கிடையாது. கைபேசி அறிமுகப்படுத்தப்படவில்லை. ரவிக்குமார் போஸ்ட் கார்டில் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
நினைத்ததைச் செயலாக மாற்றும் செயல் ஊக்கமிக்கவர் அவர்) நான் அவசர அவசரமாக ஒரு அட்டைப்படம் தயார் செய்து அனுப்புகிறேன். (அப்போது மின்னஞ்சல் வாட்ஸ் அப் கிடையாது)
அட்டைப் படத்தில் ஒரு மனிதனின் முகம் – அதில் கண், மூக்குக்குப் பதிலாக ஒரு பிணம் தின்னும் கழுகு சிறகை விரித்தபடி கொடூரமாக தன் கூறிய அளவை நீட்டியபடி இருக்கும் காட்சியை வைத்து வடிவமைக்கிறேன்.
கழுகின் இரண்டு சிறகுகள் மனிதனின் புருவம் கண் போலவும், கூரிய நகங்களோடு கூடிய அதன் இரண்டு கால்கள் மனிதனின் வாய் போலவும் அட்டைப் படத்தில் அமைக்கப்படுகிறது.
Imprint பகுதியில் அட்டை வடிவமைப்பு : கவிஞர் இந்திரன் என்று போடுகிறார்கள்.
புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் இணைந்து கலைவிழா செய்கிறார்கள்.
அதில் ராஜ் கௌதமன் தலித் பண்பாடு நூலை நான்தான் வெளியிட்டு பேசவேண்டும் என்று ரவிக்குமாரும், அமைப்பாளர்களும் விரும்பினார்கள்.
நான் அந்த நூலை வெளியிட்டேன். எனது உரையில் 1976இல் மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் நகரில் நான் ‘தலித்’ எனும் மராட்டிய வார்த்தையை முதல்முதலாக எப்படி கேள்விப்பட்டேன் என்றும், Dalit Panthers அமைப்பின் முன்னோடிகளான அர்ஜுன் டாங்ளே போன்றவர்களை எப்படி சந்தித்தேன் என்பதைச் சொல்லி ராஜ் கௌதமனின் நூலை வெளியிடுகிறேன்.
முதல் பிரதியை வ.கீதா பெற்றுக்கொண்டு பெண்ணும் தலித்தும் எப்படி பிறப்பினால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது.
1982இல் எனது ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்கா வானம்’ வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு தலித் இலக்கியம் என்பது நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாகப் போய் அதன் மீது தூசு படிந்துவிட்டது.
இன்றைக்கு சென்னை மாநிலக் கல்லூரயில் அக்கல்லூரி முதல்வர் கல்யாணராமன் முன்னெடுப்பில் “தமிழில் தலித் இலக்கியம்” என்னும் முழு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அதில் சுகிர்தராணி, க.பஞ்சாங்கம், அழகியபெரியவன் மற்றும் பல பேராசிரியர்கள் பங்கு கொள்ளும் விழாவில் நிறைவுறையாற்றப் போகிறேன்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு தலித் இலக்கியத்துக்கு இன்றைக்கு தேவைப்படுவது மிகவும் நடுநிலையான சுயவிமர்சனங்களும், மறுவாசிப்புகளும்தான் என்று நான் நினைக்கிறேன்.