பிரதமர் மோடி, மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டிப் பேசினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் எழுத்தாளர் சிவசங்கரி.
கேள்வி : ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ எப்போது உருவானது?
சிவசங்கரி பதில் : எழுத்துலகில் 25 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கூட இன்னும் பெரிதாக இலக்கியத்துக்கும், இந்த நாட்டுக்கும் எதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி ஒரு சிந்தனையாக உதித்தது தான் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’.
இலக்கியத்தைப் பயன்படுத்தி இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் 4 தொகுப்புகளாக புத்தகத்தை கொண்டு வர தீர்மானித்தேன்.
கேள்வி : தமிழ் எழுத்தாளராகிய நீங்கள் புத்தகத்தை தமிழில் மட்டும் வெளியிட்டிருக்கலாமே? ஏன் ஆங்கிலத்திலும்?
சிவசங்கரி பதில் : இதில் தமிழகம் மட்டும் சம்பந்தப்படவில்லை. இந்தியாவின் 18 முக்கிய மொழிகளில் ஆய்வு செய்யப்பட்டு, அந்தந்த எழுத்தாளர்களின் கண் வழியாக அந்த பிரதேசத்தை, மக்களை, கலாச்சாரத்தை, இலக்கியத்தைப் பார்த்து எழுதப்பட்ட பதிவுகளாகும்.
இது அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என நினைத்தேன். எனவே ஆங்கிலத்தில் வந்தால் தான் அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அனைவரையும் சென்றடையும் என கருதினேன்.
முக்கியமாக இளைய தலைமுறையினர் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்காகவே ஆங்கிலத்தில் வெளியிட்டேன்.
புத்தகத்தின் 400 பிரதிகளை ஸ்ரீராம் நிறுவனத்தின் 3 ஆயிரம் கிளைகள் வழியாக இந்தியா முழுவதும் உள்ள சிறந்த நூலகங்கள், பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதத்தில் கொண்டு சேர்த்தனர்.
இதன்மூலம் என் கனவு நனவானது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தற்போது அமைந்திருக்கிறது.
– நன்றி: இந்து தமிழ்திசை