கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: கண்காணிப்பு தீவிரம்!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டு வெடித்தன.

கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

இந்த நிலையில் கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம் மற்றும் கோவை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரெயில்கள் மற்றும் கேரளாவில் இருந்து வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  

இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான புளியாரை சோதனை சாவடியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல், அரியலூர் மாவட்ட எல்லையான திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள சோதனை சாவடியிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாகனங்களில் வெடிப்பொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய வெடிபொருட்கள் துப்பறியும் மோப்பநாய் பினா உதவியுடன் வாகன சோதனை நடைபெற்றது.

இதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மழுக்குப்பாறை  சோதனைச் சாவடியிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையும் வனத்துறையும் இணைந்து தீவிர வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

கேரளா பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர விசாரணைக்குப் பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரளா மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது.

You might also like