தமிழ் சினிமாவின் துவக்கத்தைப் பார்த்தால் காட்சி வடிவத்தில் எடுக்கப்பட்ட நாடகங்களாகவே இருந்தன. சமூகப் படங்கள் பின்பே வந்தன. பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடித்தவர்கள் தான் ஆரம்ப சினிமாக்களில் நாயகர்களாக இருந்தார்கள்.
சிறுகதையில் சிகரம் தொட்ட எழுத்தாளரான புதுமைப்பித்தனும் தியாகராஜ பாகவதரின் படத்திற்கு வசனம் எழுதப் போயிருக்கிறார்.
பி.எஸ்ராமையா – துவங்கி திராவிட இயக்க எழுத்தாளர்கள் வரை பலர் திரைப்பட உருவாக்கத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். பாரதிதாசன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.
அப்போதைய படங்களில் ”கதை இலாகா” என்றே தனியாக இருந்தது. ஜெமினி ஸ்டூடியோ, தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்களில் கதை இலாகாவுக்கென்றே தேர்ச்சி பெற்ற சிலர் இருந்தார்கள்.
சுஜாதா துவங்கி ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று பலரும் தற்போதைய தமிழ்த் திரையுலகிற்குள் பங்கேற்றிருக்கிறார்கள்.
இருந்தாலும், அடிப்படையாகக் கதையும், வசனங்களுமே ஒரு திரைப்படத்திற்கு முக்கியம் என்றிருக்கையில் திரைபடத்திற்கான அஸ்திவாரத்தை உருவாக்குகிறவர்களுக்கு அதற்குரிய மதிப்பும், பணமும், உரிய அங்கீகாரமும் இங்கு கிடைக்கிறதா என்கிற கேள்வியைப் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
படு மசாலாத் தனமான அல்லது வன்முறை மயமான ஒரு திரைக்கதையைப் பல ஆங்கிலத் திரைப்படங்களில் இருந்தும், மற்ற மாநில மொழிப் படங்களில் இருந்தும் துண்டு துண்டாய்ச் சுட்டு கதை, அதில் மிளகாய்ப் பொடி தூவிய மாதிரி சில பஞ்ச் டயலாக்குகள், குத்துப் பாட்டுகள், அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாலேயே எல்லாப் படங்களும் ஓடிவிடாது.
தமிழ் நிலத்தின் தனிப் பண்பையும், அதன் பிரத்யேகத் தன்மையும் வெளிப்படுத்துகிற விதமாக அசலான மண் சார்ந்த அடையாளங்களுடன் ஒரு கதை உருவாகி, அதையொட்டி தமிழ் சினிமாவும் உருவானால் தான் அது தனித்துவம் கொண்ட திரைப்படமாக இருக்கும்.
புதுமைப்பித்தனின் ”சிற்றன்னை” குறு நாவல் இயக்குநர் மகேந்திரனால் ”உதிரப்பூக்கள்” ஆனபோதும், முள்ளும் மலரும் – உருவான போதும் அவை உரிய கவனமும் பெற்றன. வெற்றியும் கண்டன.
தற்போதும் இளம் இயக்குநர்களால் அம்மாதிரி மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் மதிப்பு இருக்கவே செய்கிறது.
இதில் முக்கியமான கேள்வி. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்குப் போடப்படும் பட்ஜெட்டில் அதிகபட்சமான தொகை நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு, இயக்குநருக்கு, இசையமைப்பாளருக்கு எல்லாம் போகிற மாதிரி – அடிப்படைக் கதையை உருவாக்குபவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை என்னவாக இருக்கிறது?
இந்த விஷயத்தில் தமிழ் சினிமாவின் ”பேஸ்மென்ட்” ஏன் இவ்வளவு “வீக்” ஆக இருக்கிறது?
– யூகி