சர்ச்சைகளில் சிக்கும் விநாயகன்: இது தொடர்கதையா?

பிரபல்யம் என்பது கண்ணாடிக் கூண்டுக்குள் அடைந்து கிடப்பது போன்றது. பிரபலங்களைப் பற்றிய ‘நெகட்டிவ்’ தகவல்கள் வெளிவரும்போது, அது நமக்குத் தெரியவரும்.

எல்லாக் காலத்திலும் இதற்கு உதாரணங்கள் உண்டு. அந்த வரிசையில் சமீபத்திய வரவாகியிருக்கிறது ‘ஜெயிலர் வில்லன் விநாயகன் கைது’ குறித்த செய்திகள்.

அவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார் என்பதாலும், ஜெயிலர் படத்தின் வழியே தற்போது கிடைத்துள்ள புகழாலும், இம்முறை அது ‘வைரலாக’ மாறியுள்ளது.

விநாயகன் யார்?

சினிமாவின் மீது வேட்கை கொண்ட ஒரு சாதாரண கலைஞனை இந்தச் சமூகமும் மிகச்சாதாரணமாகவே எதிர்கொள்ளும்.

திமிரு, சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், காளை, சிறுத்தை, மரியான் போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ்த் திரையுலகினரும் ரசிகர்களும் ‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகே விநாயகனை மாபெரும் நட்சத்திரமாகக் கருதினர்.

அடுத்த மாதம், அவர் வில்லனாக நடித்த ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகவுள்ளது.

2001 முதல் மலையாளப் படங்களில் நடித்துவந்தபோதும், 2016ஆம் ஆண்டில் வெளியான ‘கம்மாடிப்பாடம்’ தான் விநாயகனுக்குப் பெரும்புகழைத் தந்தது.

அதன்பிறகே, அவரை நட்சத்திர நடிகராக நடத்தி வருகிறது மலையாளத் திரையுலகம். அதற்கு முன்னர் நல்ல பாத்திரங்களில் மிகச்சிறந்த முறையில் நடித்தபோதும், அவர் மீது புகழ் வெளிச்சம் விழவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஆடு 2, ஏ மா யு, தொட்டப்பன், பிரணய மீன்களுடே கடல், ட்ரான்ஸ், படா, ஒருத்தி, பந்தரண்டு என்று தொடர்ந்து புகழீட்டி வருகிறார் விநாயகன். அவர் குறித்த தகவல்களை ரசிகர்களும் ஆர்வமுடன் விவாதித்து வருகின்றனர்.

திரையுலகில் மட்டுமல்ல, எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நிலைமை பொருந்தும்.

வெற்றிக்கு முன்பாக, அருகில் இருப்பவர்கள் கூட திரும்பிப் பார்க்க மாட்டார்கள்;

வெற்றிக்குப் பிறகு, சம்பந்தமே இல்லாதவர்கள் கூட அந்நபரைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதனாலேயே, வெற்றிகள் வாய்க்கும்வரை ‘தன் வாழ்க்கை தன்னிஷ்டம்’ என்றிருந்தவர்கள் கூட, அதன்பிறகு உற்றுநோக்கும் கேமிரா கண்களுக்காகப் பணிந்து நடந்தாக வேண்டியது கட்டாயம் ஆகிவிடும்.

சில பேர் அந்த உண்மையைப் புரிந்துகொண்டு மனமாற்றத்தை அடைவார்கள்; சிலர் அதனை அடைந்தாற்போன்று நடிப்பை வெளிப்படுத்துவார்கள்;

மிகச்சிலர், அப்படியொரு விஷயத்தைத் தான் எதிர்கொண்டாக வேண்டும் என்பது குறித்துக் கிஞ்சித்தும் சிந்திக்க மாட்டார்கள். விநாயகன், மூன்றாவது வகையில் தன்னை அடைத்துக்கொள்ளப் பிரியப்படுபவராக அறியப்படுகிறார்.

சர்ச்சை நாயகன்!

ஒரு நபர் வெற்றியாளர் ஆகும்போது, அவரைத் தொற்றியிருக்கும் கஞ்சத்தனம் பிறரால் ‘சிக்கனமாக’ நோக்கப்படும்.

மென்மையான தொனியில் வெளிப்படுத்தப்படும் ஆத்திரம், பக்குவமான நபராகக் கருதும் வாய்ப்பைப் பெற்றுத் தரும்.

இப்படிப் பல விஷயங்களில் தன் மனதில் இருப்பதை வெளியுலகுக்குத் தெரியாமல் மழுப்புவது பிரபலங்களுக்கான முக்கியத் தகுதிகளாகக் கருதப்படுகிறது.

இதுவரை நாம் படித்த, பார்த்த, கேள்விப்பட்ட பிரபலங்களின் வாழ்க்கை குறித்த தகவல்கள் அனைத்தும் அவ்வகையறா தான்.

‘என்னால் அப்படி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச முடியாது’ என்றிருப்பவர்கள், தன் மனதுக்குப் பட்டதைப் பேசுவார்கள்; செய்வார்கள்; அதன் வழியாகச் செய்திகளிலும் பேசுபொருளாக மாறுவார்கள்.

அப்படித்தான், தன்னோடு நெருக்கம் காட்டிய பெண்கள் குறித்துப் பேசி சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார் விநாயகன்.

சில மாதங்களுக்கு முன்னர், உம்மன் சாண்டி மறைவுக்கு ஊடகங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சமூகவலைதளமொன்றில் அவர் பதிவிட்டது சர்ச்சையானது.

தான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர் கேட்டது, எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தியது.

‘கம்மாடிப்பாடம்’ படத்திற்காகக் கேரள அரசின் விருதைப் பெற்றபோது, ‘தாய்க்கு லட்டு ஊட்டுவது போல போஸ் கொடுங்கள்’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது விநாயகன் மறுத்துவிட்டார்.

‘என்னால் நடிக்க முடியாது’ என்று சொல்லிவிட்டார். கூடவே, அந்த விருதைப் பெரிதாகக் கருதவில்லை எனும் தொனியில் பேசிவிட்டார்.

இப்படி ‘சர்ச்சை நாயகன்’ ஆக வலம் வரும் விநாயகன், தற்போது காவல் நிலையத்திற்கு அவராகவே சென்று, போலீசாருடன் வாதம் செய்து, கைது செய்யப்பட்டு, முடிவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ஏன் இந்த சிக்கல்?

கடந்த அக்டோபர் 24ஆம் தேதியன்று எர்ணாகுளம் வடக்கு காவல்நிலையத்தில் காவல் துறையினரைத் தாக்கியதாகவும், காவல் நிலையத்தில் ஒழுங்கற்று நடந்துகொண்டதாகவும் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

அத்தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால், ஒரு சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.

கண்ணூரில் ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார் விநாயகன். குறிப்பிட்ட தினத்தன்று, வீட்டில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை. அதையடுத்து, அவரே எர்ணாகுளம் வடக்கு காவல்நிலையத்திற்கு போன் செய்திருக்கிறார்.

விசாரணை மேற்கொள்ளச் சென்ற போலீசாரில் ஒரு பெண்ணும் இடம்பெற்றிருந்திருக்கிறார். அவர் சீருடையை அணியவில்லை. அவரிடம் ‘அடையாள அட்டை’யைக் காட்டுமாறு கேட்டிருக்கிறார் விநாயகன்.

அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. பிறகு, விநாயகனிடமும் அவரது மனைவியிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முடிவில், போலீசாரை பின்தொடர்ந்து காவல் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார் விநாயகன். வாக்குமூலம் பதிவு செய்ய வந்த பெண் யார் என்று கேட்டு அவர்களிடம் வாதம் செய்திருக்கிறார்.

அந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் உள்ளன. அதில், அவர் தன்னைக் குறித்தும், தனது சமூகப் பின்னணி குறித்தும் பேசியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

விநாயகன் காவல்நிலையத்தில் சிகரெட் பிடித்ததாகவும், அதன் பின்னரே அவர் மது அருந்தியிருக்கிறாரா என்று சோதிக்க மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ பதிவுகள் இல்லை.

இறுதியில், காவல் துறையினரை தாக்கியது உட்பட இரு வேறு புகார்களில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் விநாயகன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்ன காவல் துறை, பின்னர் அவரை விடுவித்திருக்கிறது.

மேற்சொன்ன வீடியோவை பார்க்கையில், கேமிராக்கள் பார்வை விழுந்தபிறகும் விநாயகன் தனது இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

விநாயகன் வீட்டிற்குச் சென்றவர் பெண் போலீஸ் என்று காவல் துறை சொன்ன பிறகும், அப்பெண் அடையாள அட்டையைக் காட்டவில்லை என்பதாகவே அவரது பதில் அமைந்திருக்கிறது.

அதேநேரத்தில், தன்னிலை தவறினால் என்ன நிகழும் என்பதையும் அவர் உணர்ந்து இருந்ததும் பிடிபடுகிறது.

நிச்சயமாக, செய்தி ஊடகங்கள் இந்த விஷயம் குறித்து மிகப்பெரிய விவாதத்தையே நடத்தலாம்.

அதில் பேசப்படும் விஷயங்கள், கேமிராவுக்கு முன்னும் பின்னும் தன்னைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக நினைத்துக் கொள்பவர்களுக்கு உண்மையை விளங்க வைக்கும்.

இன்னொன்று, இந்த உலகை ஏய்ப்பதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களின் முகமூடி கிழியும்.

உண்மையா? பொய்யா?

பிரபலம் என்ற அந்தஸ்தை எட்டிய பிறகு, சர்ச்சைக்குப் பயந்தே வெளிப்படைத் தன்மையைத் துறந்தவர்கள் எண்ணிக்கை இவ்வுலகில் அதிகம்.

அதனாலேயே, சில பிரபலங்கள் சிக்கல்களில் மாட்டியதாக வரும் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கின்றன. ‘அவரா இப்படி செய்தார்’ என்று முனுமுனுக்க வைக்கின்றன.

ரசிகர்களை அப்படியொரு அதிர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது என்று மிகச்சிலர் தங்களது இயல்பைப் பொதுவெளியில் வெளிப்படுத்த முனைவார்கள். ‘நான் இப்படித்தான்’ என்று அவர்கள் வெளிக்காட்ட முயற்சிப்பதே, அவர்களுக்கென்று தனிப்பட்ட பிம்பத்தை உருவாக்கிவிடும்.

அப்படியொரு இடியாப்பச் சிக்கலில் தற்போது விநாயகன் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

‘என்னோட இயல்பு இதுதான்’ என்று காட்டிக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள், இன்னும் பெரிய இடியாப்பச் சிக்கல்களில் அவரை மாட்டிவிடுகின்றன.

அது குறித்துக் கேட்டால், ‘நான் ஏன் நடிக்கணும். இதுதான்ங்க என்னோட குணம்’ என்று விநாயகன் பதிலளிக்கலாம்.

இயல்பை வெளிப்படுத்துவதில் தவறில்லை; அதேநேரத்தில், பிரபலம் என்பதாலேயே நாம் செய்யும் தவறுகளையும் முன்மாதிரிகளாகக் கொள்ள ரசிகக் குஞ்சுகள் தயாராக இருப்பார்கள் என்பதையும் நினைவில்கொண்டு, பொதுவெளியில் கண்ணியம் காக்க வேண்டும்.

சர்ச்சைகளில் சிக்கியவர்கள் என்றில்லை, ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருக்கும் பிரபலங்களுக்கும் கூட இது முற்றிலுமாகப் பொருந்தும

– உதய் பாடகலிங்கம்

You might also like