‘ரத்தக் கண்ணீர்’ வெளிவந்து 70 ஆண்டுகள்!

எம்.ஆர்.ராதா நடித்து வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் வெளியாகி 69 ஆண்டுகள் கழிந்து 70 ஆம் ஆண்டு துவங்கி விட்டது. வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ‘ரத்தக் கண்ணீரை’ நாடகமாகத் தமிழகத்திலும், மற்ற நாடுகளிலும் நிகழ்த்தியிருக்கிறார் எம்.ஆர்.ராதா.

இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர் திருவாரூர் தங்கராசு. இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் நாடகத்தை நிகழ்த்துகிற போது, உள்ளூர் விஷயங்களை நாடகத்தில் விமர்சிப்பது ராதாவின் வழக்கம்.

பெருபாலும் நாடகங்களை முடித்துவிட்டு இரவு வேளையில் தான் ‘ரத்தக் கண்ணீர்’ படப்பிடிப்பிற்கு வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் எம்.ஆர்.ராதா.

படத்தின் பிற்பகுதியில் தன்னைக் குரூரமாக‍க் காட்டும் தோற்றத்திற்காக மிக‍க் குறுகிய நேரத்தில் ராதா மேக்கப் போட்டுக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறார் அவருக்கு ஒப்பனை செய்தவரான கஜபதி.

அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனம் இதோ;
****

பகுத்தறிவைப் பதியம் போட்ட ‘ரத்தக் கண்ணீர்’!

ஏற்கனவே மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றை மீளுருவாக்கம் செய்யும்போது வெற்றிக்கு நெருக்கமாகத் தோல்வியும் காத்திருக்கும். பல மேடைகள் கண்ட ஒரு நாடகத்தைத் திரைப்படமாக உருவாக்கும்போது அந்தக்கால இயக்குனர்களும் அப்படியொரு அபாயத்தைத் தான் சுமந்திருப்பார்கள்.

தோல்வியைத் துரத்தும் அளவுக்கான உள்ளடக்கம் திரைப்படத்தில் இருந்தாலொழிய வெற்றி சாத்தியமில்லை. ‘ரத்தக் கண்ணீர்’ படத்தை இயக்கிய கிருஷ்ணன் – பஞ்சுவும், தயாரித்த பெருமாள் முதலியாரும் அப்படிப்பட்ட கணங்களைப் படப்பிடிப்பு நாட்களில் சந்தித்தாகச் சொல்லப்படுவதுண்டு.

சினிமா வேண்டாம் என்று விலகி நாடக மேடையே கதி என்று கிடந்த எம்.ஆர்.ராதாவை அழைத்து நடிக்க வைத்து, அவரைத் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக மாற்றிய படம் இது.

பெண் மறுமணம், வர்க்க வேறுபாடு, சமூக நீதி என்று பல விஷயங்களைப் பிரச்சாரமாக அல்லாமல் கதையோடு கலந்து மக்களுக்கு ஊட்டிய கலைப் பொக்கிஷம்.

பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா உட்படப் பல படங்களை ராதாவுக்காகப் பார்த்திருந்தாலும், ரத்தக்கண்ணீர் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் இதனை எழுதும் முன்பு வரை தோன்றவே இல்லை. அவரது கதாபாத்திரம் என்னவென்று தெரிந்ததே இதற்குக் காரணம்.

ஆனால், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தங்கமான தருணங்களைத் தவறவிட்டது புரிந்தது.

தொடக்கத்தில் செல்வச் செருக்கில் ஊறிப்போன கனவான் மோகனசுந்தரமாகவும், பின்பாதியில் தொழுநோயால் அவதிப்பட்டு செய்த பாவங்கள் அனைத்தையும் நினைத்து வருந்துபவராகவும் நடித்திருப்பார் எம்.ஆர்.ராதா.

இந்த மாற்றத்துக்கு இடைப்பட்ட காலத்தை அவர் தன் நடிப்பில் வெளிப்படுத்திய விதம்தான் இன்றுவரை போற்றச் செய்கிறது.

கண்ணீர் ததும்பும் கதை!

வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்ற மோகனசுந்தரம், இந்தியாவுக்குத் திரும்பி வந்த பின்னர் கலையே கதி என்று கிடக்கிறார். அவரைப் பொறுத்தவரை காதலையும் காமத்தையும் வெளிப்படுத்துபவை மட்டுமே கலை என்ற கணக்கில் வருகின்றன.

இதைச் சாதகமாக்கும் சிலர், அவரைத் தீய வழியை நோக்கி செலுத்துகின்றனர்.

அதன் காரணமாக, பணத்துக்காக மட்டுமே உறவு பாராட்டும் காந்தாவைச் சந்திக்கிறார் மோகன். சில சந்திப்புகளிலேயே ‘உனக்காகவே நான்’ எனும் அளவுக்கு களியாட்டத்தில் இருவரும் திளைக்கின்றனர்.

இடையே, மோகனுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார் அவரது தாய். இதனால், வேண்டா வெறுப்பாகத் தன் மாமன் மகளான சந்திராவை மணக்கிறார்.

கிராமத்துப் பெண்ணான சந்திராவின் தொட்டாச்சிணுங்கி குணம் அவருக்குச் சிறிதும் பிடிப்பதில்லை. காந்தாவே கதி என்று கிடக்க, அதனைக் கண்டிக்கும் தாயை எட்டி உதைக்கிறார்.

காயம்பட்டு மரணத் தருவாயில் இருக்கும்போதும் அவரை உதாசீனப்படுத்துகிறார். தாயின் இறுதிச்சடங்குக்கு வராமல் காந்தாவின் வீட்டில் அடைந்திருக்க, மோகனை காந்தாவின் பிடியில் இருந்து மீட்க முயல்கிறார் அவரது நண்பர் பாலு.

ஆனால், பாலுவுக்கும் சந்திராவுக்கும் இடையே உறவு முளைத்துவிடும் என்று சொல்லி அவர் மனதில் நஞ்சைக் கலக்கிறார் காந்தா. பாலு கோபத்தில் விலகிச் செல்ல, மோகனால் தாக்குதலுக்கு உள்ளாகும் சந்திரா மருத்துவமனையில் இருக்க, நிலைமை கைமீறிப் போகிறது.

செல்வத்தை இழந்து, தொழுநோயால் பாதிக்கப்பட்டு, காந்தாவின் வீட்டில் மதிப்பிழந்து கிடக்கிறார் மோகன். நோய் மீதான அருவெருப்பு அதிகரிக்க, காதல் குறைய, மெல்ல விலகத் தொடங்குகிறார் காந்தா.

அதன்பின் மோகன் சந்திக்கும் துன்பங்கள் எவ்வாறு அவரது கடந்த காலத் தவறுகளைப் புரியவைக்கின்றன என்பது மீதிக் கதை.

‘உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்’ என்று மரபில் சொல்லப்பட்டு வரும் விஷயம்தான் அடிப்படை என்றாலும், எந்தவித மிகையும் இல்லாமல் மிகச்சரியான நடிப்பை வழங்கியதன் மூலம் ‘ரத்தக் கண்ணீர்’ படத்தை என்றென்றைக்குமானதாக மாற்றியிருக்கிறார் எம்.ஆர்.ராதா.

எத்தனை விஷயங்கள் சிறப்பானதாக இருந்தாலும், நம் மனதில் நிலைப்பதென்னவோ அவர் மட்டும் தான்.

ராதாவின் நடிப்பாளுமை!

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா ஆகும். சிறு வயதிலேயே நாடக கம்பெனிகளில் சேர்ந்து நடிப்பு பயின்ற இவர், சிறு வேடங்களில் தொடங்கி மெல்ல நாயக வேடத்தைத் தாங்கியவர்.

1937இல் ‘ராஜசேகரன் என்ற ஏமாந்த சோனகிரி’ படத்தில் அறிமுகமான ராதா, அதன்பின் ‘சந்தனத் தேவன்’, ‘சத்தியவாணி’ ஆகிய படங்களில் நடித்தார்.

படத்தில் கிடைத்த சிறு வேடங்களில் அவருக்குத் திருப்தி இல்லை. இதனால், 1940க்குப் பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி நாடகங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

‘பராசக்தி’யின் வெற்றி சமூக அக்கறை கொண்ட கதைகள் மீது நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியாருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

அப்படி அவரைக் கவர்ந்த நாடகம் தான் ‘ரத்தக்கண்ணீர்’. பல நூறு முறை மேடையேறிய ஒரு படைப்பைத் திரைப்படமாக்குவது என்ற எண்ணம் எழுந்தவுடனேயே, நாடகத்தில் நடித்த ராதாவையே படத்திலும் நடிக்க வைப்பதில் தீர்மானமாக இருந்தார் பெருமாள்.

இதற்காக அவர் மிகப்பெரிய விலை கொடுக்க நேர்ந்தது. 1 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து ராதாவை அவர் அழைத்து வந்தார். அதோடு, கேமிராவை நான் பார்க்கமாட்டேன் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்.

இன்றளவும் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்துவதுதான் மிகக்கஷ்டமான காரியம் என்பது விவாதிக்க வேண்டிய வேறொரு விஷயம்.

கூடவே, நாடக இடைவெளியில் மட்டுமே நடிப்பேன் என்றும் பெருமாளிடம் தெரிவித்திருக்கிறார் ராதா. அதற்குச் சம்மதம் தெரிவிக்கப்பட, ரத்தக்கண்ணீர் தொடங்கியிருக்கிறது.

படப்பிடிப்பின்போது நடிப்பு தத்ரூபமாக இருக்க வேண்டுமென்று நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் ராதா. புதுமுகமான எம்.என்.ராஜம் எட்டி உதைக்கும் காட்சியில் மாடிப்படிகளில் உருண்டு விழுவார்.

இந்த காட்சி எடுக்க ராஜம் மறுக்க, ‘கேமிராவுக்கு முன் நான் மோகன், நீ காந்தா அவ்வளவுதான்’ என்று அவரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார். ஆனால், ராஜம் எட்டி உதைத்தாலும், படிகளில் தாறுமாறாக உருண்டு படப்பிடிப்புத்தளத்தையே பதற வைத்திருக்கிறார்.

இதேபோல, கிளைமேக்ஸில் மனைவி சந்திராவை நண்பன் பாலு மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுப்பது போல வடிவமைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

ஆனால், தமிழ் மரபுக்கு எதிராக அது கருதப்படும் என்று படக்குழுவினர் சொல்ல, அதனால் ஏற்பட்ட இழுபறி படத்தை முடிப்பதில் தாமதத்தை உண்டாக்கியிருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து இந்த படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

அற்புதமான உடல் மொழி, வசனங்களை உச்சரிக்கும் பாங்கு, குரலில் ஏற்ற இறக்கம் என்று ராதாவின் நடிப்பை ரசிகர்கள் சிலாகிக்க, தொடர்ச்சியாகப் பல படங்களில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஏவிஎம் ராஜன் என்று அந்தக் கால முன்னணி நட்சத்திரங்கள் அனைவரோடும் நடித்தார்.

சித்தி போன்ற படங்களில் கதை நாயகனாக வந்து போனார். ஆனாலும், நாடகங்களுக்கு தந்த முக்கியத்துவத்தினால் சுமார் 125 படங்களில் மட்டுமே இவர் நடித்தார்.

‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படம் எவ்வளவு காலம் கழிந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்று சொல்ல, இவர் மட்டுமே காரணம்.

அமோக வரவேற்பு!

தீபாவளியை ஒட்டி ரிலீஸ் ஆனாலும், ஆரம்பத்தில் பெரிதாக வரவேற்பில்லாத சூழலே இருந்திருக்கிறது. ஆனால், சில காட்சிகளுக்குப் பின்னர் அந்த நிலைமை அடியோடு மாறியிருக்கிறது.

பார்த்தவர்கள் படத்தைப் பாராட்ட, மெல்ல எல்லா இடங்களிலும் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. பல ஊர்களில் நடத்தப்பட்ட நாடகம் படமாகி இருக்கிறது என்ற காரணமும் அதோடு சேர்ந்து கொண்டது. படம் சூப்பர்ஹிட் வரிசையில் இணைந்தது.

வழக்கத்தை உடைத்த திரைக்கதை!

படம் தொடங்கும்போதே, நாயகன் இறந்துபோனது ரசிகர்களுக்குத் தெரியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. கூன் விழுந்த உருவம் தாங்கிய நாயகன், ப்ளாஷ்பேக்கில் கோட் சூட் அணிந்து டிப்டாப்பாக இறங்கும்போது அவர்களது எதிர்பார்ப்பு கண்டிப்பாக அதிகமாகி இருக்கும்.

அதற்கேற்றவாறு, அலட்சியத் தொனியும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத பேச்சுமாகப் பின்னியெடுத்திருப்பார் எம்.ஆர்.ராதா.

ஆங்கில வார்த்தைகளும் தமிழும் கலந்து அவர் பேசுவது, இன்றைய நமது பேச்சுவழக்கை அன்றே அவர் கிண்டல் செய்ததாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேண்டாவெறுப்பாகத் திருமணம் செய்வது கணவன் மனைவியை ஜோடியாக புகைப்படம் எடுக்கும்போதே உணர வைக்கப்படும். வேசியாக இருந்தாலும், காந்தாவுக்கு இருந்த காதல்தான் மோகனை வீட்டில் தங்கவைக்கக் காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும்.

தொழுநோயின் அறிகுறிகள் தெரியும் வகையில், இடையில் ஒரு காட்சியில் பாலுவிடம் பேசும்போது மோகன் காலைச் சொறிவது காட்டப்படும்.

முக்கியமாக, முடிவில் மோகன் தன்னை உணர்கிறார் என்பதை உணர்த்தும்விதமாக அவரது சிலைக்கு எதிரில் புத்தர் தியானத்தில் இருக்கும் சிலை காட்டப்படும்.

‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது’ பாடல் ஒலிக்க, அதற்கு இடையிடையே எம்.ஆர்.ராதா விளக்கமளிப்பது போல வசனம் பேசுவார். கிட்டத்தட்ட அவரது மனசாட்சி பாடுவது போலவே இந்த பாடல் அமைந்திருக்கும்.

போலவே, சில வசனங்களைக் கேட்டபின்னர் தனது முந்தைய பாவங்களை அவர் உணர்வது போலவும் சில காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்துமே கிருஷ்ணன் – பஞ்சு என்ற இயக்குனர்களின் மேதைமையைக் காட்டுகிறது. நாடகம் பார்த்தவர்களும் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற அவர்களது எண்ணமே, பெரும்பாலான காட்சிகளில் கேமிராவின் நகர்வைக் கட்டாயமாக்கி இருக்கிறது

கிரீடத்தில் இன்னொரு இறகு!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குனர்களாக கிருஷ்ணன் பஞ்சு அறியப்பட்டனர். அதற்குக் காரணம், அவர்களது திறமையும் உழைப்பும் மட்டுமே.

மழையில் நனைந்தவாறே துடிக்கும் காட்சியின்போது, மின்னலினால் மோகனின் கண்கள் பறி போவதாகக் காட்டப்படும். அப்போது பின்னணி இசை, எம்.ஆர்.ராதாவின் குரல், இதற்கு நடுவே மழையின் ஓசையையும் கேட்க வைத்திருப்பது இயக்குனர்களின் சாமர்த்தியம் தான்.

‘அந்த நாள்’ போலவே இயக்குனராக விரும்புபவர்களுக்கு ‘ரத்தக்கண்ணீர்’ படமும் ஒரு பாடம். முக்கியமாக, ட்ராலியை எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும், பாடல் காட்சிகளில் தொடர்ச்சி விட்டுப்போகாமல் எவ்வாறு கேமிரா கோணங்கள் வைக்கலாம் என்பதையும் இதில் இயக்குனர்கள் இருவரும் வெளிப்படுத்தியிருப்பர்.

இருவரில் பஞ்சு ஒரு படத்தொகுப்பாளர் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரன் அவர்களது கற்பனைக்கு ஒளியூட்டியிருப்பார்.

சந்திரபாபு எனும் அபூர்வக் கலைஞன்!

எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் ஏற்கனவே ‘பராசக்தி’ படம் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர்கள். இவர்களோடு புதுமுகமாக எம்.என்.ராஜம் இணைய, அவருடைய தாயாக அங்கமுத்து நடிக்க, அவர்களோடு இருப்பவராக எம்.என்.கிருஷ்ணன் நடித்திருந்தார்.

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த சந்திரபாபு இதில் விபச்சாரத் தரகராக நடித்திருப்பார்.

மோகனுக்கு தொழுநோய் இருப்பது தெரிந்து அதிர்ச்சியடையும் காட்சிக்காக, மாடிப்படி ஏறியவர் தாவிக் கீழே இருக்கும் சோபாவில் விழுவதென்பது அவ்வளவு இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இது, அந்தக்காலத்தில் நடிப்புக்காகக் கலைஞர்கள் எவ்வளவு மெனக்கெட்டனர் என்பதைக் காட்டுகிறது.

அதேபோல, புதிதாக வரும் வட இந்தியரிடம் கை குலுக்க முயற்சிக்கும்போது அவர் கண்டுகொள்ளாமல் சென்றுவிட, தனது கையைத் தானே குலுக்கிக் கொள்வார்.

இது போன்ற விஷயங்கள் காலத்தை மீறியவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இதே போன்ற வேடத்தைத் தாங்கி நாகேஷும் அசத்தியிருப்பார்.

வயதுக்கு மீறிய வேடங்கள்!

அந்த காலத்தில் நடிகர்களின் முதுமையைவிட, அவர்களது தோற்றமே வேடங்களை நிர்ணயிக்கும். வி.கே.ராமசாமி, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.என்.லட்சுமி, காந்திமதி என்று பெரிய பட்டாளமே இந்த வரிசையில் இடம்பிடிக்கும்.

ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதாவின் தாயாக நடித்த எஸ்.ஆர்.ஜானகி தான், 80களில் தமிழ்நாட்டையே கலக்கிய ‘ஊமை விழிகள்’ படத்தில் மர்ம மூதாட்டியாக வந்து திகில் கிளப்பியிருப்பார்.

ஆனால், அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் வயதானவராக நடித்தது காலக்கொடுமை தான்.

நாடகத்தில் இருந்து வந்த சினிமா!

ரத்தக்கண்ணீர் நாடகத்தை எழுதிய திருவாரூர் கே.தங்கராசு, இப்படத்திற்கும் வசனம் எழுதினார். பின்னாளில் இவர் திரைக்கதை வசனகர்த்தாவாகவும் பரிமளித்தார்.

‘பொண்ணு பெரிய இடமா’ என்ற கேள்விக்கு, ‘ஆமா முந்நூறு அடி உயரம்’ என்று சொல்வது.

சிகரெட் பிடிக்கக்கூடாது என்று சொல்லும் டாக்டரிடம் ‘5 சிகரெட்டை ரெண்டா பிய்ச்சு பத்தா பிடிச்சுக்கலாமா’ என்று கேட்பது, ‘கடவுள் உங்களை டாப்ல வச்சிருக்காரு எங்களை அண்டர்கிரவுண்ட்ல வச்சிருக்காரு, போடா’ என்று நக்கலடிப்பது என்று ராதா வசனம் பேசும் இடம் முழுக்கவே இன்றுள்ள சூழலுக்கும் பொருந்திப் போகும்.

சமூகத்தின் நிலைமை இன்னும் மாறவில்லை என்று இதற்கு விளக்கமளிப்பதா அல்லது எக்காலத்திற்கும் பொருந்தும் எழுத்தை தங்கராசு தந்திருக்கிறாரா என்று சொல்லத் தெரியவில்லை.

ஆனால், பெரியார் மீது அவர் கொண்டிருந்த பற்று எழுத்திலும் பிரதிபலித்தது. ‘சோறு திங்கறதுக்கு ஒரு கட்சியாடா’, ‘மூணு வருஷமானாலும் ரோடு போட மாட்டேங்கிறான்’ என்பது போன்ற வசனங்கள் அரசியல் சூழலைப் பேசுபவை.

அற்புதமான இசை!

சி.எஸ்.ஜெயராமனின் இசையில் ‘குற்றம் புரிந்தவன்’, ‘தட்டிப் பறித்தார் என் வாழ்வை’, ‘தன்னை அறிந்து’ பாடல்கள் மனதைக் கனக்கச் செய்பவை.

தத்துவ விசாரத்தை வெளிப்படுத்துபவை. இதற்கு மாறாக, ‘ஆளை ஆளை பார்க்கிறாய்’, ‘கதவைச் சாத்தடி’ பாடல்கள் காம இன்பத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும்.

பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கும் ஜெயராமன், தொடர்ந்து இசையமைக்காமல் போனது இசை ரசிகர்களின் இழப்புதான்!

இந்தப் படத்தில் பின்னணி இசை அமைத்தவர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்பது இன்னொரு ஆச்சர்யம்.

நகலெடுக்க முடியாத அசல்!

அந்த காலத்தில் வேறு மொழிகளில் எவரும் ‘ரத்தக்கண்ணீர்’ படத்தை எடுக்கத் துணியவில்லை.

படத்தின் கதை சமூக நியதிகளை மீறியது என்ற எண்ணமா அல்லது மோகனசுந்தரமாக ராதாவின் நடிப்பைப் பிரதி எடுக்க முடியாத இயலாமையா என்று தெரியவில்லை.

2003இல் இப்படம் கன்னடத்தில் உபேந்திரா நடிப்பில் ‘ரக்தகண்ணீரு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அது காலத்துக்குத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அசலை ஈடு செய்ய முடியவில்லை என்றே கருதப்படுகிறது.

தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவது மட்டுமல்லாமல், சமூகத்தின் மடமைகளை மீறி நீதியை நிலைநாட்டுவது என்பதையும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததாலேயே இன்றுவரை ‘ரத்தக் கண்ணீர்’ கொண்டாடப்படுகிறது.

24 கலைகளும் ஒன்றிணைந்த ஒரு படைப்பாக அமைந்த ‘ரத்தக் கண்ணீர்’ காலத்தை மீறி நிற்கும் காவியம். அப்படிப் புகழ விருப்பப்படாதவர்கள் ஒரே மூச்சாய் படத்தைப் பார்த்துவிட்டு மேற்கொண்டு பேசுவது நல்லது.

படத்தின் பெயர்: ரத்தக்கண்ணீர்,

கதை, வசனம்: திருவாரூர் கே.தங்கராசு,

தயாரிப்பு: நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள்,

இயக்கம்: கிருஷ்ணன் – பஞ்சு,

இசை அமைப்பு: சிதம்பரம் ஜெயராமன், பின்னணி இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி,

பாடல்கள்: பாரதியார், பாரதிதாசன், உடுமலை நாராயணகவி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி,

கலை: ஏ.கே.சேகர், ஒளிப்பதிவு: ஆர்.ஆர்.சந்திரன், ஒலிப்பதிவு: வி.எஸ்.ராகவன், வி.எஸ்.ரங்காச்சாரி, எம்.ராமச்சந்திரன், லேபரட்டரி: ஏவிஎம் சார்துல்சிங் சேத்தி,

படத்தொகுப்பு: எஸ்.பஞ்சாபி, ஸ்டூடியோ: ரேவதி, நரசு

நடிப்பு: எம்.ஆர்.ராதா, ஸ்ரீரஞ்சினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சந்திரபாபு, எம்.என்.ராஜம், எம்.என்.கிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜானகி, கே.எஸ்.அங்கமுத்து மற்றும் பலர்.

– உதய் பாடகலிங்கம்

You might also like