பகவந்த் கேசரி – ‘பெர்பெக்ட்’ பாலகிருஷ்ணா படம்!

தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், ராஜசேகர், ராஜேந்திர பிரசாத் உட்படப் பல நாயகர்கள் தொண்ணூறுகளில் கோலோச்சியிருக்கின்றனர்.

அவற்றில் பல படங்கள் ‘லாஜிக் என்ன விலை’ என்று கேட்கும்விதமான திரைக்கதையைக் கொண்டிருக்கும்.

குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் நம்பகத்தன்மை என்பது சுத்தமாக இருக்காது. அப்படிப்பட்ட நாயகர்களில் ஒருவரால் கூட பாலகிருஷ்ணா ஸ்டைலை ‘ரீகிரியேட்’ செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

காரணம், மற்ற நாயகர்களைக் கேலிக்கு உள்ளாக்கும் விஷயங்கள் அனைத்தும் அவரது ஸ்டைலில் அங்கம் வகிக்கும்.

உதாரணமாக, ‘ஹை வோல்டேஜ்’ மின்சாரக் கம்பியின் மீது கயிறு அல்லது நீளமான துணியை வைத்துக்கொண்டு சறுக்கிச் செல்லும் காட்சியில் யார் நடித்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஆனால், ‘பாலய்யா நடித்தால் பார்க்க ரெடி’ என்பார்கள் அவரது ரசிகர்கள். அதேநேரத்தில், அவர் நடித்த படங்களைக் கிண்டலடித்துக் கொண்டே ரசிக்கவும் ஒரு பெருங்கூட்டம் தயாராக இருக்கிறது.

பாலகிருஷ்ணா படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம், இவ்விரு வகையான ரசிகர்களும் சேர்ந்து தியேட்டருக்கு வருவார்கள்.

‘ஜெய் பாலய்யா’ என்று கரகோஷமிடுவார்கள். அவ்வாறு வரும் இரு வேறு வகையான ரசிகர்களையும் ஒருசேர திருப்திப்படுத்த முடியுமா?

‘அது என்னால் முடியும்’ என்று களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி. அவரது இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ தற்போது வெளியாகியிருக்கிறது.

தந்தை – மகள் பாசம்!

சிறை அதிகாரியான ஸ்ரீகாந்த் (சரத்குமார்), புதிதாக ஒரு சிறைக்கு மாற்றலாகி வருகிறார். அன்றைய தினம், தொழிலதிபர் சுக்லாவைக் (ஜான் விஜய்) கொலை செய்யச் சில ரௌடிகள் சிறைக்கு வருகின்றனர்.

அவர்களைத் தடுத்து சுக்லாவின் உயிரைக் காப்பாற்றுகிறார் நெலகொண்ட பகவந்த் கேசரி (பாலகிருஷ்ணா). அவர் சம்பந்தப்பட்ட கோப்புகளைப் பார்க்கும் ஸ்ரீகாந்த், அவரைத் தண்டனை காலத்திற்கு முன்னரே விடுவிக்கும்படி பரிந்துரைக்கிறார்.

அதன்படியே பகவந்த் கேசரி விடுதலையாகிறார். நேராகச் சென்று ஸ்ரீகாந்தைச் சந்திக்கிறார்.

அப்போது, மகள் விஜயலட்சுமி குறித்தும், எதிர்காலத்தில் ராணுவத்தில் அவர் வேலைக்குச் சேர வேண்டுமென்ற தனது விருப்பம் குறித்தும் உரையாடுகிறார் ஸ்ரீகாந்த்.

‘அது நிச்சயம் நடக்கும். அதற்கு நான் பொறுப்பு’ என்று உறுதி தருகிறார் பகவந்த் கேசரி.

வீட்டிலிருந்து ஒரு வேலையாகத் தலைமை அலுவலகம் செல்ல வேண்டிய நிலைமையால், மகள் விஜயலட்சுமியை பகவந்த் கேசரி வசம் விட்டுவிட்டுக் கிளம்புகிறார் ஸ்ரீகாந்த். ஆனால், திரும்பி வருகையில் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைகிறார்.

ஸ்ரீகாந்திடம் தந்த வாக்குக்காக, விஜயலட்சுமியை வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறார் பகவந்த் கேசரி.

அதற்கேற்ப, அக்குழந்தையும் கேசரியிடம் பாசத்தை வெளிப்படுத்துகிறது. ஆனாலும், தந்தையின் மறைவு, விஜயலட்சுமியைப் பயந்த சுபாவம் கொண்டவராக மாற்றுகிறது. வளர வளர அது அதிகமாகிறது.

கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில், தன்னுடன் பயிலும் கார்த்திக்கை (ராகுல் ரவி) திருமணம் செய்துகொண்டு இல்லத்தரசியாக மாற வேண்டுமென்று நினைக்கிறார் விஜயலட்சுமி.

ஆனால், அவரை ராணுவத்தில் சேர விண்ணப்பிக்குமாறு வற்புறுத்துகிறார் பகவந்த். இதனால், பெண் கேட்டு வரும் கார்த்திக்கின் குடும்பத்தினரையும் துரத்தியடிக்கிறார். இது விஜயலட்சுமிக்கும் பகவந்துக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், சம்பந்தமே இல்லாமல் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரான ராகுல் சாங்க்வியின் (அர்ஜுன் ராம்பால்) அடியாட்கள் விஜயலட்சுமியைக் கொலை செய்ய வருகின்றனர்.

அந்தக் கணம், மீண்டும் அவரது மனதைப் பயம் ஆக்கிரமிக்கிறது. அப்போது, அங்கு வரும் பகவந்த் அந்த அடியாட்களை துவம்சம் செய்கிறார்.

அந்தக் காட்சியை சிசிடிவி வழியாக ‘லைவ்’வாக பார்க்கும் ராகுலிடம் ‘பஞ்ச்’ டயலாக் பேசுகிறார்.

‘உன்னைப் பழி வாங்கணும்கற வெறியை இல்லாம போக்குனது இந்த மகள் தான். இப்போ, இவளுக்காகத்தான் உன்னை நான் திரும்பவும் தேடி வரப் போறேன்’ என்று ராகுலிடம் கர்ஜிக்கிறார் பகவந்த். அதைக் கேட்டதும், ராகுல் கொஞ்சம் ஆடித்தான் போகிறார்.

பகவந்தின் பின்னணி என்ன? சிறையில் இருந்து விடுதலையான ஒரு கைதிக்கும் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபருக்கும் இடையே என்னதான் பிரச்சனை?

அனைத்தையும் மீறி, அதிகார பலம் கொண்ட ஒருவரை எப்படி ஒரு சாதாரண நபரால் எதிர்க்க முடியும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொருத்தமாகப் பதிலளித்து ‘பெர்பெக்டான பாலகிருஷ்ணா படம்’ என்ற பாராட்டைத் தட்டிச் செல்கிறது ‘பகவந்த் கேசரி’.

இந்த படத்தில் 50 வயதுடையவராகத் தோன்றியிருக்கிறார் பாலகிருஷ்ணா. தந்தை – மகள் பாசம்தான் இதில் ஹைலைட்.

ஆதலால், அவரது ரசிகர்கள் கண்ணீரில் நனையவும், கலகலவென்று சிரிக்கவும், நரம்புகள் புடைக்க வெறியேறவும் இதில் பல ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’கள் இருக்கின்றன.

பாலகிருஷ்ணாவின் கர்ஜனை!

வசனகர்த்தாவாக, திரைக்கதையாசிரியராக இருந்து இயக்குனர் நாற்காலியை எட்டிப் பிடித்தவர் அனில் ரவிபுடி. காமெடியும் ஆக்‌ஷனும் சரியான விகிதத்தில் கலந்து நிற்பது அவரது படங்களுக்கான ஸ்டைல்.

அது சரியாக அமைந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. மகேஷ்பாபுவுடன் அவர் கைகோர்த்த ‘சரிலேக்கு நீக்கெவரு’ படத்தில் அது லேசாகப் பிசகியிருந்தது.

அதேநேரத்தில், ‘ஃபன் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன்’ இரண்டு பாகங்களும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருந்தன.

அந்த அனுபவத்தோடு பாலகிருஷ்ணாவின் படங்களில் எதையெல்லாம் ரசிப்பார்கள், கிண்டலடிப்பார்கள் என்பதை நன்றாக உணர்ந்து, இப்படத்தைத் தந்திருக்கிறார் அனில் ரவிபுடி.

தெனாவெட்டான உடல்மொழி, கர்ஜனை போன்ற வசனங்கள், ரத்தன் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், கூடவே உடன் நடிக்கும் நாயகிகளோடு கிளுகிளுப்பான ஆட்டம் உட்படச் சில விஷயங்கள் பாலகிருஷ்ணா படங்களில் மாறாமல் இருக்கும்.

அதுவே, அவரது படங்களைக் கொண்டாடுவதற்கான, கவனிப்பதற்கான காரணங்களாகவும் இருக்கின்றன.

அவற்றில் தனக்குத் தேவையான சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு, வழக்கமான கமர்ஷியல் படமொன்றை வேறுவிதமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி.

இந்த படத்தில் பாலகிருஷ்ணாவின் பாத்திரம் பெண்களைக் கண்ணியமாக நோக்குகிறது.

மிக முக்கியமாக, இதில் அவருக்கு டூயட் பாடல்கள் இல்லை. காஜல் அகர்வால், ஸ்ரீலீலா என்று இரு நாயகிகள் இருந்தும், முடிந்தவரை அவர்களை ஆபாசமாகக் காட்டுவதைத் தவிர்த்திருக்கிறார் இயக்குனர்.

போலவே, குழந்தைகள் கண்களை மூடும் அளவுக்குக் கொடூரமான வன்முறையைச் சண்டைக் காட்சிகளில் திணிக்காமல் விட்டிருக்கிறார்.

அனைத்துக்கும் மேலே, நரம்புகள் புடைக்க ‘பஞ்ச்’ வசனம் பேசும் பாலகிருஷ்ணாவை ‘ப்ரோ, ஐ டோண்ட் கேர்’ என்று ‘கூலாக’ படம் முழுக்க வலம் வர வைத்திருக்கிறார்.

அதனால், ‘குடும்பத்தோடு சேர்ந்து படம் பார்க்க நான் கியாரண்டி’ என்ற உத்தரவாதத்தைத் தந்திருக்கிறார் அனில்.

ஒரு தெலுங்கு மசாலா படத்தில் நாம் என்னென்ன விஷயங்களை எதிர்பார்ப்போமோ, அவை அனைத்தும் சரியான கலவையில் இதில் உள்ளன.

அவற்றை அடிக்கோடிட்டுக் காட்டவும், திரையை விட்டுக் கண்களை அகற்றாமல் இருக்கவும் இரண்டு பேரின் உழைப்பு உதவியிருக்கிறது.

அதில் முதலிடம் பிடிப்பது தமன் அமைத்துள்ள பின்னணி இசை. இரண்டாவது, ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு.

பின்னவரின் பங்களிப்பினால் திரை முழுக்க வண்ணமயமாக ஜொலிக்கிறது என்றால், தமன் தந்துள்ள இசை நம்மை உற்சாகத்தில் தொடர்ந்து திளைக்க வைத்திருக்கிறது. அவரது இசையில் அமைந்துள்ள மூன்று பாடல்களும் அதே ரகத்தில் அமைந்துள்ளன.

ஒவ்வொரு பிரேமும் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதிலும், ஸ்டைலான மேக்கிங்கை ரசிகர்கள் உணர்வதிலும் பங்களிப்பைத் தந்திருக்கிறது ராஜீவனின் தயாரிப்பு வடிவமைப்பு.

இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றைக் கதையோட்டத்தோடு கனகச்சிதமாகப் பொருத்திப் பார்வையாளர்கள் எந்தக் குழப்பமும் இன்றிப் படம் பார்க்க உதவியிருக்கிறது தம்மிராஜுவின் படத்தொகுப்பு.

வேறுபட்ட நடிகர் தேர்வு!

தெலுங்கு ரசிகர்களுக்கு ‘பகவந்த் கேசரி’ முற்றிலும் புதிதாகத் தெரியவும், புத்துணர்வைத் தரவும் வாய்ப்புண்டு. அதற்கு முழுமுதற் காரணமாக இருப்பது ‘காஸ்ட்டிங்’.

எந்த தெலுங்குப் படமானாலும் குறிப்பிட்ட நடிகர் நடிகைகளைத் திரையில் பார்க்க முடியும். இதில் தேவையான அளவுக்கு மட்டுமே அவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

சரத்குமாரோடு சேர்ந்து விடிவி கணேஷ், ஆடுகளம் நரேன், ஜான் விஜய் மற்றும் சீரியல் நடிகரான ராகுல் ரவி உட்படச் சில தமிழ் முகங்கள் இருப்பதும் அதற்கான காரணங்களில் ஒன்று.

அதேநேரத்தில் சுபலேக சுதாகர், பரத் ரெட்டி, ஜெயசித்ரா, ரவிஷங்கர் என்று அரிதாகச் சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைகாட்டும் நடிப்புக் கலைஞர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

அனைத்துக்கும் மேலே, அர்ஜுன் ராம்பாலின் இருப்பு இப்படத்தின் பெரும்பலம்.

வழக்கமான பாத்திரம் என்றபோதும், அவர் அதில் நடித்திருப்பது ‘ப்ரெஷ்’ஷாக தெரிகிறது.

இந்த படத்தில் சிறு குழந்தைகளிடம் ‘குட் டச் பேட் டச்’ குறித்து பாலகிருஷ்ணா பாடமெடுக்கும் காட்சி உண்டு.

பெண் குழந்தைகளைத் தைரியமாக வளர்ப்பதுடன் நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்று வசனம் பேசும் இடங்களும் உண்டு.

இந்தக் காட்சிகள் அனைத்தும் துருத்தலாகத் தெரியாதவாறு கனகச்சிதமாகச் செதுக்கப்பட்ட திரைக்கதையைக் கொண்டிருக்கிறது ‘பகவந்த் கேசரி’.

‘இத்தனையும் இருக்குறப்போ கில்லி மாதிரி சொல்லியடிக்க மாட்டேன்’ என்று களமிறங்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. அதைவிட வேறென்ன வேண்டும்?!

– உதய் பாடகலிங்கம்

You might also like