ஜும் லென்ஸ்:
வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் அதிர்ச்சி தரப்பட்ட அளவிலும் இருக்கிறது – தமிழ் நாட்டில் திரைப்படத்தை பார்ப்பதற்கென்று உருவாகியிருக்கிற ரசிகர்களின் மனநிலையைப் பார்க்கும்போது.
முன்பு திரைப்படத்தை ரசித்து பார்ப்பதற்கென்றே ரசனை மிக்க பார்வையாளர்களை கொண்ட பிலிம் சொசைட்டிகள் இருந்திருக்கின்றன. சற்றே ஆரோக்கியமான ரசிகர் மன்றங்கள் கூட இருந்திருக்கின்றன.
ஆனால், எப்போது திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் மட்டும் முக்கியத்துவப் படுத்தப்பட்டார்களோ அப்போதிருந்தே அதற்கென்று வித்தியாசமான குணாம்சங்களைக் கொண்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. ஊருக்கு ஊர் ரசிகர் மன்றங்களின் கிளைகள் பரவிவிட்டன.
இத்தகைய ரசிகர் மன்றங்களின் பெரும்பாலும் அதிக வசதிப்படைத்த ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகவும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ரசிகர்கள் அதிகமாகவும் இருப்பதே கண்கூடான விஷயம். ரசிகர்கள் மன்றத்தில் இருப்பது அவர்கள் தனக்குத்தானே கொடுக்கும் மதிப்பைப் போல.
தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது அதை பெரும் கொண்டாட்டமான நிலையில் எதிர்கொள்கிறார்கள் தற்போதைய ரசிகர்கள்.
இதற்கு முன்பும் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்திலிருந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, அடுத்து ரஜினி, கமல், என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களுக்குப் பிடித்த பிரதான நடிகர்களின் படங்கள் திரையிடுவதைக் கொண்டாடும் ரசிகர்கள் எப்போதுமே இருந்திருக்கிறார்கள்.
ஆன்லைன் டிக்கெட் அட்வான்ஸாக புக் செய்வது இருந்திராத காலத்தில் டிக்கெட் திரையரங்குகளில் டிக்கெட் எடுப்பதே ஒரு சாகசத்தைப் போல அப்போது மாறியிருந்தது.
சில நகரங்களில் முதல் காட்சி பார்ப்பது ரசிகர்களே தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்கின்ற ஒரு எனர்ஜியைப் போல ஆகியிருக்கின்றது.
அந்த முயற்சியில் திரையரங்குகளுக்குள்ளேயே சில ரசிகர்கள் உயிரிழந்து மறுநாளைய செய்தித் தாள்களில் தலைப்புச் செய்திகளாகி இருக்கிறார்கள்.
எப்போது நவீன மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் அதிகப்பட்டதோ அப்போது திரைப்படங்களுக்கான ரசிகர்களும் அதிநவீனப்பட்டு மிகவும் முன்னேறி விட்டார்கள். படம் வெளிவருவதை ஒரு திருவிழாக் கொண்டாட்டமாகவே மாற்றி விட்டார்கள்.
படம் வெளிவருவதற்கு முன்பே பலரிடம், அப்டேட் கேட்டபடியே இருக்கிறார்கள் – அது அரசியல் விழாக்களாக இருந்தாலும்கூட.
அண்மைக்காலத்தில் ஒரு முக்கியமான நடிகரின் திரைப்படம் வெளியான போது திரையரங்குக்கு முன்னால் ஆர்ப்பரித்த ஒரு இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
சில நடிகர்களின் திரைப்பட டிரெய்லர்கள் வெளிவரும்போது தியேட்டர்களை நாசப்படுத்துவது கூட ரசிகர் மன்ற நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகி விட்டது.
தற்போதுவரை இந்த ரசிகர்மன்ற மனோபாவம் அதிதீவிரமடைந்திருக்கிறது.
அண்டை மாநிலங்களில் தேடப்பட்ட அதிகாலை காட்சிகளுக்காக நள்ளிரவே குடும்பத்துடன் போய்க் காத்திருந்து அந்தத் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே காத்திருக்கும் தொலைக்காட்சி கேமிராக்களுக்குமுன் ஆரவாரமாகக் கத்திக் கொண்டாடுகிறார்கள்.
திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக கூடுதலாக என்ன விலை நிர்ணயிக்கப்பட்டாலும் அந்த டிக்கெட்டுகளை ரசிகர் மன்றத்திற்கே உரித்தான கடமையுணர்ச்சியோடு வாங்கிப் பொறுப்பாக படத்தைப் பார்க்கிறார்கள்.
சமயங்களில் தியேட்டர் சீட்களையும் உணர்ச்சிவசப்பட்டு கிழிக்கிறார்கள். திரையரங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் போர்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள். சூடம், சாம்பிராணி எல்லாம் கொளுத்துகிறார்கள்.
ரசிகர்களின் அதீத களேபரங்களால் அதே திரைப்படத்தைப் பார்க்க வரும் சாதாரண பார்வையாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். திரையரங்குக்கு வர அச்சப்படுகிறார்கள்.
இந்த ரசிக மன்றங்களின் இந்த விநோதமான மனநிலையை உருவாக்கியவர்கள் யார்? எந்தத் திரைப்பட நடிகருக்கும் ஏற்றத்தைக் கொடுக்கிற காலம், ஏன் சரிவையும் கொடுத்திருக்கிறது.
ஏற்றத்தின்போது கொண்டாட வைத்து அவரை தங்கத்தட்டில் சாப்பிடும் அளவிற்கு கொண்டுபோன நடிகர்கள் வீழ்ச்சியடைந்த யதார்த்தமும் நமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.
இப்படிப்பட்ட ரசிகர்களுக்கு தங்களைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு என்று குடும்பம் இருக்கிறது, அவர்களுக்கென்று வேலையோ அல்லது பொருளாதார பின்புலமோ இருக்கிறது.
அதையலெ்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு திரைப்படத்திற்கு தங்கள் உயிரை கொடுக்கும் அளவிற்கு அல்லது தங்களையே சேதப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் செல்ல வேண்டுமா? என்பதுதான் இன்றைய கதாநாயக நடிகர்களுக்கு முன் காலம் எழுப்பும் கேள்வி.