பயணங்கள் சொல்லித் தந்த பாடம்!

கண்ணதாசனின் அனுபவம்

கவிஞர் கண்ணதாசன் ‘இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா’ ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.

வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்று அவருக்கு அழைப்பு வந்ததிலிருந்து தொடங்கி, உடன் யாரை அழைத்துச் செல்வது என்று முடிவெடுத்தது, விசாவுக்காக அலைந்து, விமானப் பயண அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தாலும், எளிய நடையில் எழுதியிருப்பதால் படிக்கும்போது அலுப்பூட்டவில்லை.

யாழ்ப்பாணத் தமிழர்கள் மறந்து கூட ஓர் ஆங்கில வார்த்தையை உபயோகப்படுத்தமாட்டார்கள்.

இலங்கையில் ஆசிரியரை படிப்பவர் என்று கூறுகிறார்கள், சீதை சிறையிருந்த குன்று இப்போதும் இலங்கையில் இருக்கிறது, கோடைக்காலத்தில் அமெரிக்காவில் இரவு 9 மணிக்குத்தான் சூரியன் மறைகிறது என்பன போன்ற தகவல்கள் நூல் முழுவதும் உள்ளன.

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் எல்லைகாந்தி கான் அப்துல் கபார்கானை பார்க்க கவிஞர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போனது நமக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

ரஷ்யாவில் தொழிற்சாலைகளில் ஒவ்வோராண்டும் சிறப்பாக பணிபுரிந்த தொழிலாளர்களின் படங்களை மாட்டுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார்.

இந்நூலைப் படிக்கும்போது நாமே கவிஞருடன் இந்நாடுகளைச் சுற்றிப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

இலங்கைப் பயணம் 1955
ரஷ்யப் பயணம் 1968
மலேசியப் பயணம் 1972
அமெரிக்கா 1981

அந்தக் காலகட்டங்களில் அவருக்கு அங்கே ஏற்பட்ட பயண அனுபவங்களை ஆசிரியர் அப்பொழுதே இதழ்களில் எழுதியிருக்கிறார்.

அதன் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு நாட்டிலும் இருந்த தமிழர்களும் அவர்கள் தந்த விருந்தோம்பலையும் விவரித்தே சொல்லியிருக்கிறார்.

இலங்கை, ரஷ்ய, மலேசியப் பயணங்களில் நம்மாலும் எழுத்துடன் இணைந்து சில இடங்களைக் காண முடிகிறது. இந்த அமெரிக்காவில் மட்டுந்தான் சுற்றிச் சுற்றி விருந்தோம்பலிலே நாம் நனைய வேண்டியதாக இருக்கிறது.

எல்லாப் பயணங்களும் அவர்தம் சொற்பொழிவிற்காக நடந்ததுதான். அது போக அங்கே இருக்கும் கலாச்சார பண்பாடு செயல்பாடுகளை அந்தந்தக் காலகட்டத்தில் நம் நாட்டோடு ஒப்பிடுவதைக் காணும் பொழுது இன்றைக்கு இருப்பது போலவே மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது.

அமெரிக்காவில் வைத்தியம் பார்க்க நேர்ந்தபிறகு கண்ணதாசன் சொல்கிறார், நம் சென்னையின் மருத்துவ வசதி எவ்வளவோ மேன்மை என்று.

ஆம். வசதி இல்லாதவர்களுக்கும் கூட மருத்துவம் எளிதாகப் பெற முடிகிறதென்று. அது போக அமெரிக்காவில் பெரும் வசதி படைத்தவர்கள் தான் மருத்துவத்திற்காக தாராளச் செலவு செய்ய முடியும் என்கிறார். இது நடந்தது 1981.

ஆனால் இன்றைக்கும் கூட அங்கிருப்பவர்கள் பேசுவது நம் நாட்டு மருத்துவ வசதிதான். எளிய அணுகல் முறையும், அரசு மருத்துவமணைகளில் அனைவருக்குமான சுகாதார வசதியையும் மெச்சிப் பேசுகிறார்கள்.

அன்றைக்கு வாழ்ந்தவர்கள் கண்களில் அன்றைய நிலைமையைக் காண்பது என்றைக்கும் சலிப்பதே இல்லை. வாசியுங்கள்.

நூல் : கண்ணதாசன் பயணங்கள்
ஆசிரியர் : கண்ணதாசன்
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
விலை: ₹67

You might also like