அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம்
’வறுமையில் வாடினேன்’ என்று சொல்வோர் எண்ணிக்கை, இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது.
கல்வியும் சுகாதாரமும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையிலும், சமூகத்தில் வளமை என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெருகி வருகிறது.
ஆனாலும், இன்றைக்கும் வறுமை என்பது நம்மிடையே தொடர்ந்து கொண்டிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பினை அடுத்து ஒரு குடும்பம் தங்க முடியாத அளவுக்குச் சிறு பரப்பில் கட்டப்பட்ட குடிசை வீட்டையும் காண முடிகிறது.
இந்த ஏற்றத்தாழ்வுதான், இன்று உலகில் பெரும் அபாயமாக உருமாறிக் கொண்டிருக்கிறது.
வறுமைக்கு அளவுகோல்!
உணவு, உடை, உறைவிடம், குறைந்தபட்ச கல்வி, சீரான ஆரோக்கியம், நல்ல குடிநீர், வேலைவாய்ப்பு ஆகியன கிடைத்தால் மட்டுமே ஒரு தனிமனிதரோ அல்லது அவரது குடும்பமோ வறுமை நிலைக்கு உட்படவில்லை என்று அர்த்தம்.
கடந்த 50, 100 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த நிலைக்கு ஆட்பட்ட மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.
2021ஆம் ஆண்டு உலகளவில் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, சுமார் 9% பேர் மிகவும் வறுமையான நிலையில் வாழ்கின்றனர்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1.90 அமெரிக்க டாலர் பெற இயலாத நிலையில் உள்ளனர்.
அமெரிக்க டாலருக்கான இந்திய மதிப்பு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இதனை சுமார் 170 முதல் 200 ரூபாய் வரை என்று மதிப்பிடலாம்.
2017ஆம் ஆண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இத்தகைய நிலையில் சுமார் 13.6% பேர் இருப்பதாக கண்டறியப்பட்டது.
2022க்கான உலக வறுமை நிலை பட்டியலில் உள்ள 121 நாடுகளில் இந்தியா 107ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகியன நமக்கு முந்திய இடங்களை வகிப்பது நம் நாட்டில் நிலவும் வறுமை எத்தகையது என்பதை ஒப்பீட்டளவில் வெளிப்படுத்துகிறது.
தென்னிந்திய மாநிலங்களில் நிலவும் கல்வி, சுகாதார வசதிகளை கணக்கில் கொண்டால், இப்படியொரு வறுமை நிலை இங்கு இல்லை என்று சொல்லிவிடலாம்.
வட மாநிலங்களில் இருந்து தென்னகத்துக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், அங்கு அப்படியொரு நிலை இல்லை என்று கருத இடமுண்டு.
கீழே தள்ளிய கொரோனா!
கொரோனா தொற்றுக்கு முன்னும் பின்னும் இருந்த நிலைமையை ஒப்பிட்டால், 2022இல் உலகளவில் சுமார் 75 முதல் 90 மில்லியன் பேர் மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று சில தரவுகள் கூறுகின்றன.
2019இன் இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா அலை 2020இல் இந்தியாவை கடுமையாகப் பாதித்தது. 2021இல் அதன் தாக்கம் அடங்கி ஓரளவுக்கு இயல்பு நிலை மக்களின் வாழ்வில் நிலவுகிறது.
2015 முதல் 2018 வரை இந்தியாவில் மிக வறிய நிலை என்பது 10.1 சதவிகித்த்தில் இருந்து 8.6 சதவிகிதமாக குறைந்ததாகவும், கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்த விகிதம் 9.2 ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புள்ளிவிவர அட்டவணைகளைத் தாண்டி, கொரோனா கால அனுபவமே நம் மீதும் சுற்றியிருப்பவர்கள் மத்தியிலும் எத்தகைய அழுத்தம் சுமத்தப்பட்டது என்பதைத் தெளிவாகச் சொல்லும்.
இந்த காலகட்டத்தில் சுகாதார வசதிகள் கிடைக்காமல் கோவிட்-19 தவிர்த்த பல்வேறு நோய்களால் மக்கள் அல்லாடியதையும் கல்வி நிலையங்களில் பணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் படிப்பைக் கைவிட்டு வெளியேறியதையும் கேள்விப்பட நேர்ந்தது.
வறுமையான மனோபாவம்!
இந்தியாவிலேயே முதன்முறையாக இளம்தலைமுறையினர் ஆரம்பக் கல்வியைத் தேடி வருவதற்கு வகை செய்தவற்றில் ஒன்று, காமராஜர் அறிமுகப்படுத்திய ‘மதிய உணவுத் திட்டம்’.
வெறுமனே இலவசமாக அல்லாமல், மாணவ மாணவியரிடம் கல்வி ஊக்கத்தை அதிகப்படுத்தும் வழியாகவும் அது திகழ்ந்ததை இம்மாநிலம் அறியும்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, அது மேலும் வலுப்பெற்று ‘சத்துணவுத் திட்டமாக’ உருமாறியது.
இன்று, பல்வேறு மாநிலங்கள் இதனைப் பிரதியெடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்துகின்றன.
வறுமையை ஒழித்து மக்களின் வாழ்வில் வளமையைப் பெருக்கும் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் வெவ்வேறு காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றால் பலன் அடைந்தோரும் அதிகம். ஆனால், இன்றும் அத்திட்டங்களைப் பெறுவதற்கான தகுதியை தாண்டியபிறகும் பலர் அதனைப் பெறுவதற்கான வரிசையில் நிற்கின்றனர்.
மாதம் சில ஆயிரங்களில் வருமானம் ஈட்டுவோரும் லட்சக்கணக்கில் பொருளீட்டுவோரும் இந்த வரிசையில் ஒருசேர நிற்பது மக்களின் மனநிலையில் படிந்திருக்கும் வறுமையைக் காட்டுகிறது.
அதனைத் துடைத்தெறியும் வழிகளைக் கண்டறியாமல் தவிர்ப்பது ‘இலவசங்களால் இந்நாடு சீரழிகிறது’ என்ற வாதத்தையே வலுப்படுத்தும்.
சில முன்னெடுப்புகள் மூலமாக வறுமை நிலையில் இருப்பவர்களை மேல்நோக்கி இழுக்கும் செயல்பாட்டையும் பலவீனப்படுத்தும்.
இன்றைய சூழலில் வறுமை நிலவுவதற்கு ஆளும் அரசுகளைக் குறைகள் சொல்லப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
தொலை நோக்கு அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்தாமை அவற்றில் ஒன்று.
அதையெல்லாம் மீறி, வசதி படைத்தோருக்கும் வறிய நிலையில் இருப்போருக்குமான இடைவெளி சமீபகாலத்தில் அதிகரித்திருப்பது மிக முக்கியமான பிரச்சனையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
உலகின் மொத்த பொருளாதார வளத்தை மதிப்பிட்டால், செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பெற்ற 20% பேரிடம் 80%மும், மீதமுள்ள 80% மக்களிடம் 20% வளமும் இருப்பதை என்னவென்று சொல்வது?
இந்த ஏற்றத்தாழ்வு, நிச்சயம் வறுமையால் உருவாகும் வன்முறையை அதிகப்படுத்தவே செய்யும்.
அதோடு, உடலுழைப்பையும் மன ஈடுபாட்டையும் செலவழிக்காமலேயே சொகுசான வாழ்வை அனுபவித்துவிட வேண்டுமென்ற துடிப்பும் சமூகத்தில் வேர் விட்டிருக்கிறது.
இதனை முழுமையாக அகற்றுவது இயலாது எனினும், கல்வி கற்கும் இளைய தலைமுறையிடையே இத்தகைய மனோபாவத்தை ஒழிப்பது அவசியம்.
வறுமையைத் துரத்துவோம்!
1987 முதல் அக்டோபர் 17ஆம் தேதியானது ‘உலக வறுமை ஒழிப்பு தினமாக’ ஐ.நா. சபையால் கொண்டாடப்படுகிறது.
‘நடைமுறையில் அனைவருக்குமான மாண்பு’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வறுமையில் இருப்போரைக் காணும்போது ஒவ்வொருவரிடமும் கீழான பார்வை வெளிப்படும்.
அதனை இல்லாமல் ஆக்க, அனைவரும் ஒரே தளத்தில் இருக்குமளவுக்கு வாழ்வில் செழுமை பூக்க வேண்டும்.
சீரான மனநிலையோடு தினசரி வாழ்வை எதிர்கொள்ளும் வகையில் அடிப்படை வசதிகள் உட்பட குறைந்தபட்சத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியை உலகப் போர்கள் சிதைத்து சின்னபின்னமாக்கிய நிலையைப் போலவே, தற்போது நோய்த்தொற்றுகள் வறுமையைப் பெருக்க காத்துக் கொண்டிருக்கின்றன.
அதற்கு அடிபணிவது ஆப்பிரிக்க நாடுகள் சில எதிர்கொள்ளும் வறுமைச் சூழலை இங்கும் உருவாக்கும்.
இது தவிர்த்து, எங்கோ நிகழும் உக்ரைன் – ரஷ்ய போரும் கூட நம்மூரில் விலைவாசி உயர்வுக்கு வித்திட்டிருக்கின்றன.
இது போன்ற தடைகளை எதிர்கொண்டு வெற்றி பெற, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க, நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். அது மட்டுமே வறுமை ஒழிப்புக்கான நிரந்தரத் தீர்வாகவும் இருக்கும்!
– உதய் பாடகலிங்கம்