“அய்யய்யோ… ஆனந்துக்கு என்ன ஆச்சு?”
“இவரு பேரு ஆனந்துன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“எத்தன தூக்க மாத்திர சாப்ட்டான்?”
“இவரு தூக்க மாத்திரதான் சாப்ட்டானு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“ஏன்மா, இப்ப உன் பக்கத்து வீட்டுக்காரன காப்பாத்துனுமா? வேணாமா?”
“அய்யோ! இவரு பக்கத்து வீட்டுகாரர் இல்ல. என்னோட சொந்த வீட்டுக்காரர்.”
“தெரியும். ஆனா அத நானே சொன்னா, அது உங்களுக்கு எப்படி தெரியும்னு என்னையே மடக்குவ. அதனாலதான் மாத்தி சொன்னேன்.
“பம்மல் K சம்பந்தம்” படத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் வரும் இந்த ஒரு வசனம் போதும் இந்த மனிதரை பற்றிய அறிமுகத்திற்கு. காமெடி பெயரில் வரும் பெரும்பாலான முழு திரைப்படமும், இந்த ஒரு டைமிங் வசனத்திற்கு இணையாக சொல்வது கடினம்.
ஒரு காட்சியில் பார்வையாளன் சிரிக்க வசனத்தை மட்டுமே பிரதானமாக்கியவர்களில் மிகமுக்கியமானவர் இவர். ஒரு காட்சியில் ரசிகனை சிரிக்க வைக்கவும். தனது எழுத்தில் வாசகனை சிரிக்க வைப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எழுத்தில் எவ்வாறு அதை கையாண்டுள்ளார் என்ற பெரும் ஆவலுடன் நாம் வாசிக்க துவங்கினால் காட்சிகளில் உங்களை ஆச்சர்யபடுத்திய சாதுர்யம் அவரது எழுத்திலும் மிளிர்வது நிச்சயம் உங்களை ஆச்சர்யபடுத்தும்.
நம் உதட்டோரம் அரும்பும் புன்னகையை ஒவ்வொரு பத்தியிலும் கடைசி பக்கத்தின் இறுதி பத்திவரை கடைபிடித்துள்ளார். ஜூனியர் விகடன் இதழ் தொடங்கப்பட்ட வருடத்தில், பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் எந்த மனநிலையில் இருப்பினும் முதல் பக்கத்தை தாண்டுவதற்கு முன்னே நம்மை அவர் வசமாக்கி விடுவார்.
நூல் : பலகாரகடை
ஆசிரியர் : கிரேசி மோகன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
பக்கங்கள் : 134