அக்கு – ரசிக வெறிக்கான சத்தியசோதனை!

’குறைஞ்ச பட்ஜெட்ல ஒரு படம் எடுக்கணும்.. ஏதாவது சப்ஜெக்ட் இருக்கா’

‘அதுக்குதான் பேய்க்கதைகள் நிறைய கைவசம் இருக்கே.. அதுல ஒண்ணை அடிச்சு விட்டுரலாம்’

’அதுக்காக முழுக்க ஹாரர் படம் மாதிரி இருந்துடக் கூடாது. நடுநடுவுல ஆக்‌ஷன், த்ரில்லர், ரொமான்ஸ், கொஞ்சம் காமெடியும் கலந்தா நல்லாயிருக்கும்’

‘ஐயோ, நீங்க காஞ்சனா, அரண்மனை சீரிஸ்லாம் பார்க்குறதில்லையா எல்லா பேய்க்கதையுமே அப்படித்தாங்க இருக்கும்’

‘அதெல்லாமே ஹை பட்ஜெட் ஆச்சே’

’பட்ஜெட்டை விடுங்க, அதே டைப்ல ஒரு ஹாரர் படம் பண்றோம். குறைஞ்ச செலவுல.. என்ன ஓகேதானே’

மேற்சொன்ன உரையாடலோடு தமிழ் திரையுலகில் பல படங்கள் ‘பேய்த்தனமாக’ தயாராகி, அவற்றில் சில வெளிவராமல் ஹார்ட் டிஸ்குக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

அதிலொன்றை உசுப்பிவிட்டால் என்னவாகும்? அந்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறது ‘அக்கு’ திரைப்படம்.

இந்த டைட்டிலை ‘ஃ’ என்றும் குறிப்பிடலாம். படம் முடியும்போது, ரத்தத்தில் மூன்று புள்ளிகள் வைத்து அதற்கான விளக்கம் தனியே தரப்பட்டுள்ளது

ஒரு கதை சொல்லட்டுமா..?

ஒரு இயக்குனரின் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அவர் கொலை செய்யப்பட்டபின்னர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதாக போஸ்ட்மார்ட்டத்தில் தெரிய வருகிறது.

அந்த பெண்ணின் பெயர் ஸ்வேதா (காயத்ரி ரெமா). காவல்துறைக்குத் தகவல் தெரியவரும்போது, இயக்குனர் ருத்ரன் (ஸ்டாலின்) மற்றும் அவரது உதவியாளர்கள் நான்கு பேர் அலுவலகத்தில் இல்லை.

ருத்ரனைப் பற்றி விசாரிக்கையில், அவர் மனநல மருத்துவர் குணசீலனிடம் (ராமநாதன்) சிகிச்சை பெற்று வந்தது தெரிய வருகிறது.

காவல்துறையினர் அவரைச் சந்திக்கையில், ருத்ரன் தொடர்ச்சியாகச் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு மோசமான மனநிலையுடன் இருந்தது தெரிய வருகிறது.

அந்த மருத்துவமனையில் ஒரு சிறுமி இருக்கிறார். அவரை அங்கு சேர்த்தவர் தாய்மாமா ஹரிஷ் (பிரஜன்).

அந்த ஹரிஷின் நண்பர்களில் இரண்டு பேர், ருத்ரனிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றுகின்றனர்.

நடிக்க வாய்ப்பு கேட்டு ஹரிஷ் உடன் வந்த ஸ்வேதாவை, இயக்குனர் ருத்ரனிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் அவர்கள்தான்.

இந்த நிலையில், ருத்ரன் இருக்குமிடத்தை அறிந்து நேரில் செல்கிறார் ஹரிஷ். அவர் தாக்காமலேயே ருத்ரன் உயிரிழக்கிறார்.

ஆனால், அவரது கழுத்தில் துளையிட்ட காயம் இருக்கிறது.

ஸ்வேதா ஏன் கொலை செய்யப்பட்டாள் என்று அறிய முயற்சிக்கும் ஹரிஷுக்கு, ருத்ரன் கொலையானது அதிர்ச்சியளிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, ஸ்வேதா கொலை நிகழ்ந்த இடத்தில் இருந்த நான்கு உதவி இயக்குனர்களும் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்.

அது எல்லாமே ஹரிஷ் கண் முன்னே நிகழ்கிறது. அது ஏன்? ஹரிஷுக்கும் அந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்று சொல்கிறது ‘ஃ’.

’ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்பது போன்று தொடக்கம் அமைந்தாலும், அதனைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்டாலின் வடித்திருக்கும் திரைக்கதை நம்மை அயர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

இந்த படத்தில் அடுத்த காட்சி என்ன என்று யூகிப்பது கடினமில்லை; அதுவே பரவாயில்லை என்பது போல, அடுத்து வரும் வசனம் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லும் அளவுக்குத் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்புறமென்ன, ‘ப்ளீஸ்பா, கதைய சொல்லுங்கப்பா’ என்று நாம் திரையைப் பார்த்துக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.

சத்திய சோதனை!

இதில் நாயகனாக பிரஜன் நடித்துள்ளார். அவரது நடிப்பில் குறை சொல்ல ஏதுமில்லை; ஆனால், சில காட்சிகளில் ‘இது போதும்’ என்பது போல அவரது உடல்மொழி அமைந்துள்ளது.

நாயகியாக காயத்ரி ரெமா நடித்துள்ளார். சாதாரணமாகத் தோன்றும்போது அழகாகத் தெரிபவர், சிரிக்கும்போது நம்மைச் சோதிக்கிறார். அதேநேரத்தில், அழுகைக் காட்சிகளில் பின்னியெடுக்கிறார்.

இதில் கேபிஒய் சரத், வினோத், ராமநாதன் உட்பட ஒரு டஜன் நடிகர்கள் நடித்துள்ளனர்.

அதிலும், இன்ஸ்பெக்டராக நடித்தவர் ‘அமெரிக்க ஜனாதிபதி வாழ்க’ என்று சொல்லாத குறையாக ’ஓவர் ஆக்டிங்’கை கொட்டியுள்ளார்.

‘அது என்ன பெரிய விஷயம்’ என்பது போல, வில்லனாக இயக்குனர் ஸ்டாலின் வந்து போயிருக்கிறார். அதற்காகவே, மனிதர் அந்த பாத்திரத்தைச் சுற்றியே திரைக்கதையைப் பின்ன நினைத்திருக்கிறார்.

ஆனால், அதற்கேற்ற கதையைத் தான் தேர்ந்தெடுக்காமல் கோட்டைவிட்டிருக்கிறார்.

இவர்கள் போதாது என்று இரண்டாம் பாகம் எடுப்பதற்கு ஏதுவாக, இறுதிக் காட்சியில் ஜெய் ஆகாஷை திரையில் நடமாட விட்டிருக்கிறார் இயக்குனர். நமக்குத்தான் ‘ஐசியுல அட்மிட் ஆகி அரைமணி நேரம் ஆச்சே’ என்றிருக்கிறது.

பிரேம்களில் நிறையாத பரபரப்பைப் பின்னணி இசை மூலமாக ஊட்டிவிட வேண்டுமென்று பிரயத்தனப்பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம். பாடல்களும் கூட ஒருமுறை கேட்டால் முனுமுனுக்கும் ரகமாக உள்ளன.

ஒரு காட்சிக்குத் தேவையான ஷாட்களை விட, திரையில் பாதி இருந்தாலே போதுமானது என்பது போல அமைந்திருக்கிறது தேவசூர்யாவின் ஒளிப்பதிவு.

’விதவிதமாகப் பரிசோதித்துப் பார்ப்போமா’ எனும் தொனியில் உள்ளது படத்தொகுப்பாளர் அரவிந்தன் ஆறுமுகத்தின் பணி.

மையக்கதைக்குத் தேவையில்லாத காட்சிகள் வேண்டாம் என்று முடிவு செய்தால் கால்வாசிதான் தேறும் என்ற எண்ணத்தோடு கத்திரியைக் கையில் எடுக்காமல் விட்டிருக்கிறார்.

இயக்குனர் ஸ்டாலின் இப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறார். ஒரே படத்தில் பேய், அசாதாரண மனசக்தி, சைக்கோத்தனமான வில்லன் என்று பலவற்றைப் புகுத்தியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் சிந்தித்தவர், கதை என்கிற வஸ்துவை வலுவானதாகக் கொள்ள வேண்டும் என்பதை மட்டும் மறந்து போயிருக்கிறார்.

அதனால், ஒவ்வொரு காட்சியின் முடிவிலும், கவுண்டமணி பாணியில் ‘சத்தியசோதனை’ என்று பற்களை நறநறக்க வேண்டியிருக்கிறது.

ரசிக மனோபாவத்தோடு செல்லும்போது எத்தனை தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

’சரி, மொத்தத்தில் ஃ படம் எப்படியிருக்கிறது’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதனை நன்கு உள்வாங்கியபிறகும், ‘ம்க்கும்’ என்ற சத்தத்தைத் தவிர வேறெதுவும் சொல்ல இயலவில்லை!

  • உதய் பாடகலிங்கம்
You might also like