உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவின் சாதனைகள்!

2023-க்கான ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்டோபர்-11) நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ்வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 272 ரன்களை எடுத்தது.

பின்னர் 273 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணி,  பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்து வெற்றியும் பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார்.  

இந்தப் போட்டியில் அவர் அடித்த 5 சிக்சர்கள் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் (554 சிக்ஸர்கள்) சாதனையை உடைத்த ரோகித் சர்மா (555) புதிய உலக சாதனை படைத்தார்.

அதோடு, 7 சதங்கள் அடித்து உலகக் கோப்பையில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (6 சதங்கள்) சாதனையை உடைத்து புதிய உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

அத்துடன், உலகக் கோப்பையில் வேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற கபில்தேவின் (72 பந்துகள்) சாதனையை 63 பந்துகளில் உடைத்த அவர் புதிய வரலாறு படைத்தார்.

இதேபோல், இப்போட்டியில் அடித்த சதத்தின் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வயதில் சதமடித்த கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரோகித் சர்மா உடைத்துள்ளார்.

அந்தப் பட்டியல்படி ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். அதாவது ரோகித் சர்மா 36 வயது 164 நாட்கள் ஆன நிலையில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியா அணி வீரர் ரிக்கி பாண்டிங் 36 வருடம் 95 நாட்களில் 2011-ல்  இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் அதிக வயதில் சதமடித்த சாதனையைப் படைத்திருந்தார்.

இதேபோல், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை உடைத்த ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியலில், 28 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா முதலிடத்திலும் 27 சிக்ஸர்களுடன் சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும், 25 சிக்ஸர்களுடன் சௌரவ் கங்குலி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தச் சாதனைகளுடன், உலகக் கோப்பையில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 3 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங், வெஸ்ட் இண்டீஸின் கோர்டன் கிரீனிட்ஜ், பாகிஸ்தானின் ரமேஷ் ராஜா ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவரில் சதமடித்த இந்திய வீரர் என்ற சேவாக்கின் சாதனையும் அவர் தகர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் அவர் 17.2 ஓவரிலேயே 100 ரன்கள் தொட்ட நிலையில் இதற்கு முன் 2009இல் நியூசிலாந்துக்கு எதிராக வீரேந்திர சேவாக் 18.4 ஓவரில் சதமடித்ததே முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

இதேபோல், சாம்பியன்ஸ் ட்ராபி, உலகக் கோப்பை போன்ற வெள்ளைப்பந்து ஐசிசி தொடர்களில் அதிக சதங்கள் (8) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் ரோகித் படைத்துள்ளார்.

இதற்கு முன் சவுரவ கங்குலி, கிறிஸ் கெயில், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

You might also like