குழந்தைகளைக் கவர விரும்பும் அமீர்கான்!

உலகளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது அமீர்கான் நடித்த ‘டங்கல்’. அதன்பிறகு, அவர் நடித்த ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது.

ஆனாலும் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’, ‘லால் சிங் சத்தா’ படங்களின் பெருந்தோல்வியால், அவரது அடுத்த படம் எப்படிப்பட்டதாக இருக்குமென்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

தற்போது, ’சிதாரே ஜமீன் பர்’ எனும் குழந்தைகளுக்கான படத்தில் அவர் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

2007இல் வெளியான ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் இன்னொரு பதிப்பாக இருக்குமென்றும் தெரிவித்திருக்கிறார் அமீர்கான்.

முதன்முறையாக அந்தப் படத்தில்தான் அவர் இயக்குனர் அவதாரமெடுத்தார் என்பதால், ’சிதாரே ஜமீன் பர்’ மீது ரசிகர்களின் கவனம் திரும்பத் தொடங்கியிருக்கிறது.

பூமிக்கு வந்த நட்சத்திரம்!

ஒரு உயர் நடுத்தரவர்க்கக் குடும்பம். பெற்றோர் இருவரும் நன்றாகப் படித்தவர்கள்.

மூத்த மகன் படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டியாக இருக்க, இளைய மகனோ பள்ளியில் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் வேண்டாவெறுப்பாக நோக்கப்படுகிறார்.

அவரது குறும்பு அனைவரையும் எரிச்சலுக்கு ஆளாக்குகிறது. அதனால், வீட்டிலும் வெளியிலும் அவமானத்திற்கு ஆளாகித் தாழ்வு மனப்பான்மையில் கூனிக் குறுகுகிறார். பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் நிலைமைக்கு ஆளாகிறார்.

அதையடுத்து, அவரை வெளியூரிலுள்ள பள்ளியொன்றில் சேர்க்கின்றனர் பெற்றோர். அந்தப் பள்ளியில் இருக்கும் ஓவிய ஆசிரியர், அம்மாணவருக்கு ‘டிஸ்லெக்சியா’ எனும் கற்றல் குறைபாடு இருப்பதை அறிகிறார்.

அதற்குத் தீர்வு காணும் சிகிச்சைகளையும் பயிற்சிகளையும் பெற வைத்து, அந்தச் சிறுவனை அனைவரும் மெச்சக்கத்தக்கவராக, வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டவராக, குடும்பத்தின் மீது பற்று மிக்கவராக மாற்றுகிறார்.

அந்தச் சிறுவனின் குடும்பத்தினர் அந்த உண்மையை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதைச் சொல்வதே ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் கதை. அந்த டைட்டிலுக்கு ‘பூமியில் நட்சத்திரங்கள்’ என்று அர்த்தம்.

அதில், இஷான் அவஸ்தி எனும் எட்டு வயதுச் சிறுவனாக தர்ஷில் ஜபரியும், ஓவிய ஆசிரியராக அமீர்கானும் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தைப் பெருவெற்றி பெற வைத்தன.

அப்படத்தின் திரைக்கதையில் ரசிகர்களை நெகிழ்ச்சியூட்டும் விதமாகப் பல காட்சிகள் உண்டு. அதனைக் கண்டு ரசிகர்கள் கண் கலங்கினர். அதுவே, அப்படத்தின் பெருவெற்றிக்கும் காரணமானது.

தேசிய விருதுகள் உட்படப் பல விருதுகளை அள்ளியது இப்படம். இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் போட்டியிலும் பங்குபெற்றது.

அப்படியொரு படத்தைப் பிரதியெடுப்பது போல ஒரு டைட்டிலை அமீர்கான் அறிவித்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயமா?

அமீர்கான் பதில்!

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான், லால் சிங் சத்தா படங்கள் ‘டீசன்டான’ வெற்றி பெறாதது அமீர்கானை எதிர்மறை விமர்சனங்களில் உழலச் செய்தது.

அதையடுத்து, சில காலம் படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவரது படங்கள் வெளியாகிவந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

தற்போது மகன் ஜுனைத் கான் நாயகனாக அறிமுகமாகும் படம், முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கும் படம் மற்றும் சன்னி தியோல் நடிப்பில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் ‘லாகூர் 1947’ ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார் அமீர்கான்.

அந்த வரிசையில் ‘சிதாரே ஜமீன் பர்’ திரைப்படமும் இடம்பெறுகிறது.

‘தாரே ஜமீன் பர் படம் ரசிகர்களை அழ வைத்தது என்றால், இந்த ‘சிதாரே ஜமீன் பர்’ அவர்களைச் சிரிக்க வைப்பதாக இருக்கும்’ என்று அமீர்கான் விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

முந்தைய படத்தில் தர்ஷில் ஜபரி பாத்திரத்தின் குறைகளை அமீர்கான் சரி செய்வது போல, இப்படத்தில் அமீர் பாத்திரம் எதிர்கொள்ளும் குறைபாட்டை ஒன்பது சிறுவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளே தீர்த்து வைப்பதாகக் கதை அமைந்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.

‘காஞ்சனா’, ‘அரண்மனை’ பட சீரிஸில் ஒரே கதைக் கட்டமைப்பில் வெவ்வேறு பேய்கள் வலம் வருவது போன்று, இந்த படத்தில் நாயக பாத்திரத்தின் குறைகளுக்குத் தீர்வு காண்பது எனும் விஷயத்தையே அமீர் மீண்டும் கையிலெடுத்திருப்பதையே அவரது பதில் உணர்த்துகிறது.

வித்தியாசமான திரையனுபவம்!

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த அமீர்கான், தனது பதின்ம வயதிலேயே உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

அதாகப்பட்டது, சினிமா வாரிசுகள் நாயகனாகவோ அல்லது நாயகியாகவோ அறிமுகமாவதற்கு முன்னதாக கேமிரா பின்னே இருந்து சில அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நியதிக்குத் தொடக்கப்புள்ளி இவர் தான்.

அதனைப் பின்பற்றி ஹ்ரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர், சோனம் கபூர் உட்படப் பலர் இந்தித் திரையுலகில் அறிமுகமாகியிருக்கின்றனர். தமிழிலும் ஜெயம் ரவி, விஷால் உட்படச் சில சினிமா வாரிசுகள் அதனைப் பின்பற்றியவர்கள் தான்.

‘லகான்’ முதல் ‘லால் சிங் சத்தா’ வரை, அமீர்கான் நடித்த ஒவ்வொரு படத்திலும் ரொமான்ஸ், ஆக்‌ஷன், காமெடி, சென்டிமெண்ட் என்று அனைத்து அம்சங்களும் குறிப்பிட்ட விகிதத்தில் அமைந்திருக்கும்.

அவற்றின் திரைக்கதைகள், அவை வெளியான காலகட்டத்தில் ‘ட்ரெண்ட்செட்டராக’ இருந்தன. அந்த வகையில், தனது படங்களுக்கென்று ஒரு ‘பார்முலா’வை ரசிகர்கள் கண்டறியும் நிலையையும் உருவாக்கினார் அமீர்கான்.

‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ போன்ற மனதை நெகிழச் செய்யும் படங்களைத் தந்ததுடன் ‘கஜினி’, ‘தூம் 3’ மாதிரியான ஆக்‌ஷன் படங்களிலும் அவர் தூள் கிளப்பியிருப்பார்.

அந்த கதைத் தேர்வில் உச்சம் தொட்டது ‘டங்கல்’. ஏனோ, அதன்பிறகு அவரது படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

நிச்சயமாக, அமீர்கானின் கதைத் தேர்வு தனித்துவமானது. லகானுக்கு முன்பும் கூட, தனது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான காட்சியனுபவத்தை ரசிகர்களுக்குத் தர வேண்டுமென்பதில் உறுதியாக நின்றவர் அமீர்கான்.

ராஜா ஹிந்துஸ்தானி, எர்த், குலம், சர்பரோஷ், ரங்கீலா, அந்தாஸ் அப்னா அப்னா, தில் ஹை கே மான்தா நஹி படங்களும் கூட, அக்காலகட்டத்தில் வெளியான படங்களில் இருந்து வேறுபட்டிருப்பதைக் காண முடியும்.

கிட்டத்தட்ட ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு ‘பதான்’, ‘ஜவான்’ என்று இரண்டு ஆக்‌ஷன் படங்கள் மூலமாக மீண்டும் தான் ஒரு முன்னணி நட்சத்திரம் என்று நிரூபித்திருக்கிறார் ஷாரூக் கான்.

அதே போன்று அமீர்கானும் தனது பழைய இடத்தை அடைவாரா என்பதை ‘சிதாரே ஜமீன் பர்’ தீர்மானிக்கும்.

நல்லதொரு ஆக்‌ஷன் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கு ‘பான் இந்தியா படம்’ என்ற முலாமை பூசி ‘கல்லா’ கட்ட விரும்பாமல், குழந்தைகளுக்கான படமொன்றை அமீர்கான் தரவிருப்பது நல்ல விஷயம்.

ஒன்று மட்டும் நிச்சயம். வெற்றி தோல்வியைத் தாண்டி, ‘சிதாரே ஜமீன் பர்’ நல்லதொரு திரையனுபவமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அந்த நம்பிக்கையை ரசிகர்கள் இழக்காமல் இருப்பதே, அமீர்கானுக்கு தனிப்பட்ட வகையில் வெற்றி தான்!

– உதய் பாடகலிங்கம்

You might also like