உறவுகளுக்கு பாலமாக இருந்ததை நினைவுகூறும் தினம்!

உலகில் மனிதன் தன்னுடைய தகவல்களை தூரத்தில் இருக்கும் நபர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் தகவல்களை நாம் அறிய பயன்பட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சியில் ஒன்று, தபால் போடுவது, கடிதப் போக்குவரத்தினை மேற்கொள்வது.

நலம்.. நலமறிய ஆவல் என தனது குடும்பத்தினருக்கோ, தனக்குப் பிடித்தமானவருக்கோ அஞ்சல்போடுவதில் அத்தனை உயிரோட்டம் இருந்தது. உறவுகள் இதனால் பலப்பட்டிருந்தன.

ஒரு பெரிய போர் கூட நின்றது. நிறைய பேருக்குப் பணி வாய்ப்புகள் தபால் மூலம் கிடைத்தன. இவற்றுக்கான அங்கீகாரமாக, அதனை சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கும் விதமாக உலக அஞ்சல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டில் பேர்ன் மாநகரில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் விதமாக, உலக அஞ்சல் தினம் உருவானதாக கூறப்படுகிறது.

இந்த தினத்தை உலகளவில் தபால் வழி தகவல் தொடர்பை கடைப்பிடிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்டாடி மகிழ்கின்றன.

இவ்வாறு ஒரு தினத்தைக் கொண்டாடலாம் என அனைத்துலக அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் 1969ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.

அந்த மாநாடு நடைபெற்ற இடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே எண்ணற்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில், இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. எனவே, அதன் தேவை அதிகம் என்பதை உணர்ந்து 1764ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான், இந்திய தபால் துறை.

இதனையடுத்து இந்தத் துறை பிரிட்டிஷ் அரசின் கீழும், விடுதலைக்குப் பின் தற்போது இந்திய அரசின் கீழும் செயல்பட்டு வருகிறது.

இந்திய முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக இதுவரை 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் மக்களுக்கான கடிதப் போக்குவரத்துக்கு சேவையாற்றி வருகின்றன.

இதில் பெரும்பான்மையானவை கிராமங்களில் தான் செயல்படுகின்றன.

தற்போது கையில் பேனா பிடித்து கடிதம் எழுதும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டாலும் அஞ்சல் துறை, பல்வேறு வேறு சில பணிகளுக்கும் உதவி வருகிறது.

குறிப்பாக, தபால் மூலம் பணம் அனுப்புவது, பார்சல் சர்வீஸ், விரைவு தபால் சேவை, வெளிநாட்டு தபால் சேவை, வீட்டு உபயோகப் பொருட்களை அனுப்பும் லாஜிஸ்டிக் சேவை, வார – மாத இதழ்கள் அனுப்பும் பணி,

பில் தொகை செலுத்துதல், கோயில் பிரசாதம் பெறும் சேவை, புத்தகங்கள் விற்பனை, தபால் சேமிப்புக் கணக்கு, வங்கிக் கணக்கிற்கான சேவைகளை தபால் மூலம் பெறும் பணி, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் பணி,

தங்கப் பத்திரம் பெறும்பணி, அரசுப்பணியில் பணி நியமன ஆணைகளை அனுப்புவது என எண்ணற்ற சேவைகளை இந்திய தபால் துறை செய்து வருகிறது.

என்னதான் போனில் வாட்ஸ்அப், இ – மெயில் போன்றவற்றை விரல்நுனியில் தட்டி தகவல்களை பரிமாறினாலும் உணர்வுப்பூர்வமாக உறவுகள் வளர்ந்த கதை, காதல் வளர்ந்த கதை,

பலருக்கு அரசுப்பணி கிடைத்த நாள், மணி ஆர்டர் மூலம் பணம் பெற்றநாட்கள் ஆகியப் பல நினைவுகள் நீங்காமல் பசுமை மாறாமல் நமது மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

தபாலுடன் நமக்குள் இருக்கும் பந்தத்தை, உலக அஞ்சல் தினமான இன்று நினைத்துப் பார்ப்போம்.

– நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ் 

You might also like