தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்திருக்கும், ரா.கனகலிங்கம் அவர்களின் ‘என் குருநாதர் பாரதியார்’ எனும் நூல் அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியது.
இந்நூலை 1947 இல் எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அந்த நூல் நவீன முறையில் ஒளியச்சுச் செய்யப்பட்டு, அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.
வையாபுரியார் திருவனந்தபுரத்தில் பாரதியைத் தாம் சந்தித்த நிகழ்வைப் பதிப்புரையில் குறிப்பிட்டு ரா. கனகலிங்கம் அவர்கள் எழுதிய இந்நூலின் சிறப்புகளை எடுத்துப் பேசுகிறார்.
‘அன்புத் திறவுகோல்’ எனும் தலைப்பில், பி. ஸ்ரீ அவர்களும் ஓர் அணிந்துரையைத் தந்திருக்கிறார்.
மொத்தம் 14 தலைப்புகளில் அரிய புகைப்படங்களுடன் ரா. கனகலிங்கம் தனக்கும் பாரதிக்கும் இடையே நிலவிய அன்புறவை, நெகிழ்ச்சிமிகு நடையில் விளக்கிச் செல்கிறார்.
நூலின் மையப் பகுதியாக அமைவது, பாரதி, கனகலிங்கம் அவர்களுக்குப் பூணூல் அணிவித்து, காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுத்து, அவரைப் பிராமணர் ஆக்கிய நிகழ்வு ஆகும்.
எல்லோரும் கனகலிங்கம் என்றால் இந்த நிகழ்வைப் பற்றி மட்டுமே கவனம் கூர்வார்கள்.
இந்த நூலில், கனகலிங்கம், பாரதியார் பாடிய, புதுவை உப்பளத்து, தேசமுத்து மாரியின் கோயிலில் பூசாரியாகப் பணிபுரிந்த, தாழ்த்தப்பட்டவர் ஆகிய நாகலிங்கம் எனும் வள்ளுவப் பண்டாரத்துக்கு, பாரதியார் பூணூல் மாட்டி, காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுத்து, பிராமணர் ஆக்கிய நிகழ்வையும் கூறுகிறார்.
பாரதி, புதுவையில் புகழ்பெற்ற கோயில்களையோ தெய்வங்களையோ பாடவில்லை; மாறாக, தாழ்த்தப்பட்டோர் வாழ்ந்த பகுதிகளில் இருந்த கோயில்கள், தெய்வங்களையே நாடிச்சென்று பாடினார் என்று கனகலிங்கம் கூறுகிறார்.
அன்றைய நாளில் புதுவைப் பகுதியில் அடிதடி வம்பு வழக்குகளுக்குப் பேர்போன ‘தம்பலா’ எனும் தோட்டிச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, பாரதி விரும்பிச் சென்று பார்த்து உரையாடிவிட்டுத் திரும்பினார் எனும் ஒரு பதிவும் நூலில் உள்ளது (இந்தச் சந்திப்பைக் களமாக வைத்துப் புதுவை எழுத்தாளர் பாரதி வசந்தன் அவர்கள் ‘தம்பலா’ எனும் அருமையான நெடுங்கதை ஒன்றை எழுதியுள்ளார்).
பாரதி தம் வீட்டுக்கு விருந்துண்ண வந்த நிகழ்வை, கனகலிங்கம் விளக்கியுள்ளார்.
இவ்விருந்துக்கு, பாரதி வீட்டில் இருக்கும் தம் மனைவி செல்லம்மாவையும் அழைத்து ஆள் மேல் ஆள் அனுப்ப, செல்லம்மா மறுத்துவிடுகிறார்.
இப்படி, பல்வேறு நிகழ்வுகளை, கனகலிங்கம் தம் நூலில் எழுதிச் செல்கிறார்.
பாரதி திருவல்லிக்கேணியில், முயன்று தேடி அவரைச் சுதேசமித்திரன் பத்திரிக்கை அலுவலகத்தில் சந்தித்ததையும் அவர் இறக்கும்போது அவர் அருகில் இருக்கமுடியாது போனதால் ஏற்பட்ட துயரத்தையும் கனகலிங்கம் நெகிழ்ச்சியோடு கூறிச் செல்கிறார்.
நூலை நெருக்கமாக வாசிப்பவர்க்கு, கனகலிங்கம் அவர்கள் தம் குருநாதர் பாரதியார் மீது கொண்ட பக்தி உணர்வுடன், கனகலிங்கம் அவர்களிடம் காணப்படும், சாதி, தீண்டாமை ஆகியவை சார்ந்த ஓர் எதிர்ப்பு உள்ளத்தையும் கண்டுணர முடியும்..
நூல் : ‘என் குருநாதர் பாரதியார்’,
ஆசிரியர் : ரா. கனகலிங்கம்,
வெளியீடு : தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
பதிப்பு : சனவரி : 2015.
விலை : உரூ. 120.