– இதய சிகிச்சை நிபுணர் தணிகாசலம்
“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை, ஏதாவது ஒரு வகையில் தன்னுடைய இளம்பருவத்தில் அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
நான், என்னுடைய இளவயதில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே அவரின் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் அறிந்து, ‘இப்படி ஓர் அறிவுப் பெட்டகமா!’ என்று அதிசயித்திருக்கிறேன். பின்னாட்களில் அதை நேரிலும் அனுபவத்திருக்கிறேன்.
1972-ஆம் ஆண்டுவாக்கில், நான் சென்னை பொது மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நான் இதயம் சார்ந்த மேற்படிப்பு முடித்துவிட்டு அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தேன்.
அவரது உறவினர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் எதிரில், கலைஞர் அவர்களுடன் எனது மூத்த மருத்துவர்கள் பேராசிரியர் அண்ணாமலை, பேராசிரியர் கிருட்டிணகுட்டி ஆகியோரும் மற்ற மூத்த மருத்துவர்களும் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, “உங்களில் யார் இதயநோய் நிபுணர்?” என்று அவர் கேட்டதும் அவர்கள் என்னை அழைத்தனர்.
கலைஞர் என்னிடம் “என் உறவினருக்கு என்ன பாதிப்பு? என்ன சாப்பாடு கொடுப்பது?” எனக்கேட்டார்.
நான் அவரது உடல் நலம், சிகிச்சை அனித்துள்ள விவரம் ஆகியவற்றை விளக்கியதுடன், அவருக்கான ‘டயட்’ உணவுக்கும் ஏற்பாடு செய்ததில் திருப்தியடைந்தார்.
அன்று அவருக்கு முக்கியமான வேலை இருந்தது. “அண்ணா சாலையில் தந்தை பெரியார் சிலை திறப்புவிழாவுக்குச் செல்ல வேண்டும். எனது கண்மணியை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அன்றிலிருந்து தொடர்ந்து அவரது உறவினர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் என யாருக்கு மருத்துவச் சிகிச்சை என்றாலும், என்னைச் சந்நிக்க அனுப்பி வைப்பார்.
நானும் அவர்களைச் சந்தித்துவிட்டு அது தொடர்பான விவரங்களைச் சம்பந்தப்பட்டவருக்குச் சொல்லுவதைப் போலவே கலைஞரிடமும் சொல்வேன். அவர்கள் மீது கலைஞர் கொண்டுள்ள அக்கறை அப்போது வெளிப்படும்.
என்றும் மாறாத நம்பிக்கை
ஒருவர் மேல் நம்பிக்கை வைத்துவிட்டால், எந்தக் காரணத்தினாலும், யார் சொன்னாலும், கலைஞர் அந்த நம்பிக்கையை மாற்றிக் கொள்ளமாட்டார்.
சில நேரங்களில் சிகிச்சையின் போது பிற மருத்துவர்கள் தங்களது ஆலோசனைகளைச் சொன்னாலும், கடைசியாக என் ஆலோசனையைக் கேட்டுக் கொள்வார்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு, அவரது சந்தேகத்தைத் தீர்ப்பதுபோல நான் பதில் சொல்லிவிட்டால், அந்த மருத்துவர்களின் யோசனைப்படி சிகிச்சை அளிக்க ஓகே சொல்லி விடுவார்.
அவர் என் மேல் கொண்டிருந்த இந்த நம்பிக்கை காரணமாக அவர்மீது பல மடங்கு மரியாதை உருவானது.
தவிர, அவரது உடல்நலம் மீது அவரை விடவும் அதிக அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அப்படியான நம்பிக்கையைத்தான் கொடுத்தது.
திரு.முரசொலி மாறன் அவர்களுக்கு சிகிச்சையின் போது அவர் என்மேல் கொண்ட நம்பிக்கையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
நான் அவ்வப்போது கலைஞர் அவர்களை நேரில் பார்க்கச் செல்வேன். அதற்காக அவரது உதவியாளர் சண்முகநாதனுக்கு போன் செய்வேன். அவரும் கலைஞரிடம் கேட்டறிந்து குறித்த நேரத்துக்கு வரச் சொல்லுவார்.
நான் பொதுவாக ஐந்து நிமிடத்துக்கு முன்பாகவே சென்றுவிடுவேன். ஆனால், அதற்கு முன்பே “டாக்டர் வந்துவிட்டாரா?” என்று கேட்பாராம்.
நானும் அந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என இன்றும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
மருத்துவக் குழுவில் பங்களிப்பு
கலைஞருக்கு முதுகுத்தண்டு கோளாறின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இதய நல நிபுணராக அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் கணக்கும்.
சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் செல்லும் முன்னர், ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வலியுறுத்தினர்.
அப்போது மாலை நேரத்தில் பூங்காவுக்குச் செல்வதை விரும்பியதால், அவருடன் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைத் துறையில் இருந்தவர்கள் செல்வார்கள்.
நான் அவர்களுடன் செல்லாத ஒருநாளில் பூங்காவில் “ஹார்ட் எங்கே?” என்று கேட்டுள்ளார். மற்றவர்கள் விழித்தபோது “தணிகாசலத்தைக் கூப்பிடுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதுபோன்ற நேரங்களை நினைத்தால், இப்போதும் நான் நெகிழ்ந்து விடுவேன். அப்படி அவருடன் செலவிடும் நேரங்களில், அவருடைய இளமைக் காலங்கள், போராட்டங்கள், திரை அனுபவங்கள் மற்றும் பல விவரங்களைப் பகிர்ந்து கொள்வார்.
மனவலிமையின் உச்சம்
அவருடன் செலவிடும் நேரங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை. சரளமாக ‘பஞ்ச்’ வசனங்கள் சொல்வதில், கலைஞருக்கு நிகர் கலைஞரே.
உடல்நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் இருந்தபோதும் தனது நகைச்சுவைப் பேச்சால் எங்களைச் சுண்டி இழுப்பார்.
முதுகுத்தண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது அது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்து பெற வேண்டும். அதாவது நோயாளியின் சம்மதம் பெற வேண்டும்.
அந்த நோயின் பெயர், தன்மை, சிகிச்சை அளிக்க வேண்டிய விவரம் ஆகியவற்றுடன் சிகிச்சையின்போதோ அல்லது அதற்குப்பிறகோ பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற நுணுக்கங்களை நோயாளியிடம் விளக்கி, அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இது உலகளாவிய நடைமுறை. அந்த ஆவணத்தைக் கொடுத்து அவரிடம் ஒப்புதல் வாங்க மருத்துவர்கள் தயங்கி நின்றதுடன், என் கையில் திணித்து கலைஞரைப் பார்க்க அனுப்பினர்.
என்னைப் பார்த்ததும் ‘என்ன?’ என்று கேட்டவரிடம், “இந்தத் தாளை படித்துப் பார்த்து உங்கள் ஒப்புதல் தேவை” என்று திணறினேன்.
இது எதற்கு என வாங்கி வரிக்கு வரி படித்துவிட்டு சில வினாடிகள் என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
பிறகு சிரித்தவர், “என்ன ஆபத்து ஏற்படும் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டாயே? நடத்து.. எங்கே கையொப்பம் இடவேண்டும்?” என்று கேட்டு கையொப்பமிட்டார்.
அவருக்குப் பிடிக்காத ஒன்று
பிறகு அறுவை சிகிச்சை முடிந்து தொடர் கண்காணிப்பில் இருந்த போது, நரம்பியல் நிபுணர், பரிசோதிக்கும் போது “உங்களுக்கு உணர்ச்சி இருக்கிறதா” என்று கலைஞரிடம் கேட்டார்.
டாக்டரைப் பார்த்து, “எந்த உணர்ச்சி என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்” என்றார். நாங்கள் அனைவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டோம்.
பிறகு மருத்துவர் ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் காட்டி “தெரிகிறதா?” என்று கேட்டார்.
அதற்கு கலைஞர் “தெரிகிறது இரண்டு விரல்கள்” ஆனால், இந்த இரண்டு விரல்கள் எதையோ குறிப்பதால், அது எனக்குப் பிடிக்காத ‘ஒன்றை’ குறிக்கிறது” என்றார்.
இப்போது எங்களின் சிரிப்பை மேலும் அடக்க முடியவில்லை.
அவருடைய நகைச்சுவைத் திறன் மட்டுமல்ல, வலிகளைத் தாங்கிக்கொண்டு, அதையும் தாண்டி தனது இயல்பை நிரூபிக்கும் அந்த மனவலிமை அசாத்தியமானது.
அவர் ஒரு சிறந்த மனிதநேயம் கொண்டவர், சிறந்த செயல்வீரர். இதனை என் சிறுவயது முதலே கண்டும், கேட்டும் இருக்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட கலைஞரை நினைக்கும்போது, ஐயன் திருவள்ளுவரின் வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
– என்கிற குறளுக்கேற்ப வாழ்ந்தும் செயல்படுத்தியும் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
– நன்றி: முரசொலி இதழ்