குடும்பத்தைக் காப்பாற்றி உயிர் நீத்த செல்லப் பிராணி!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப் பாம்பை, தடுக்க முயன்ற வளர்ப்பு நாய், பாம்பு தீண்டியதில் உயிரிழந்ததால் அந்த வீடு சோகமயமானது. குடும்பத்தைக் காப்பாற்றி, உயிர் நீத்த நன்றியுள்ள பிராணியின் கடைசி நொடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ராஜு பாய் நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மதிவாணன். சிவில் எஞ்சினியரான இவரது வீட்டின் பின்புறம் நாகப் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது.

இதைக் கண்ட அவரது வீட்டு வளர்ப்பு நாய்களான டாம் என்ற சிப்பிப் பாறை நாயும், மேக் என்ற பாக்சர் ரக நாயும் தடுக்க முயன்றன.

அதற்குள்ளாக அந்த நாகப் பாம்பு, பாக்சர் நாயை தீண்டியது. இதை அடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே விரைந்து வந்த அவர்கள் பாம்பை பத்திரமாக மீட்டனர்.

பாம்பு பிடிபடும் வரை, அதை விட்டு விலகாமல், அங்கேயே நின்ற இரு நாய்களும் பாம்பை பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தன.

இதனால், பாம்பையும் பத்திரமாக பிடிப்பதுடன், நாய்களையும் காப்பாற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் வன அலுவலர் உயிரை பணயம் வைத்து பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டார்.

பாம்பு பிடிபட்ட சிறிது நேரத்தில், பாக்சர் ரக நாய், மயங்கி விழுந்தது.

பாம்பு தீண்டி நீண்ட நேரம் ஆகி விட்டதால் விஷம் உடல் முழுவதும் பரவி, அந்த நாய் அங்கேயே உயிரிழந்தது.

ஆசையாக வளர்த்த நாய் தங்களைக் காப்பாற்றி விட்டு அது உயிரை விட்டு விட்டதே என நினைத்து, அதன் உரிமையாளர்கள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.

பொதுவாக 2 நாய்களும் போராட்ட குணம் கொண்டது எனக் கூறிய அதன் உரிமையாளர் மதிவாணன், குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருந்து வந்த மேக் தங்களை விட்டு போய் விட்டதே என கண்ணீர் வடித்தார்.

– தேஜேஷ்

You might also like