பெண் உரிமையை உரக்கப் பேசிய பைத்தியக்காரன்!

கலைவாணர் ஒருமுறை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அவரது மனைவி டி.ஏ.மதுரம், என்.எஸ்.கே. பெயரில் நாடகக் கம்பெனி ஆரம்பித்து நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார்.

திராவிடர் கழகம் கலைவாணரின் வழக்கை நடத்த பொருளதவி செய்ய முன்வந்தும் மதுரம் ஏற்கவில்லை. தனது கணவருக்கு தானே உதவ வேண்டும் என்ற நோக்கில் நாடகங்கள் நடத்தினார்.

சகஸ்ரநாமம் எழுதி, நடித்த நாடகங்களே பெரும்பாலும் அரங்கேற்றப்பட்டன. அப்படி அவர் எழுதி, நடித்து அரங்கேற்றப்பட்ட நாடகங்களுள் ஒன்று, பைத்தியக்காரன்?.

விதவை மறுமண மறுப்பு, குழந்தைத் திருமணம் போன்ற சனாதனக் கருத்துக்களை எதிர்த்து பைத்தியக்காரன் போதித்தது.

வ.சாந்தாராம் 1937 இல் எடுத்த துனியா நா மேன் திரைப்படத்தைத் தழுவி பைத்தியக்காரன் கதையை சகஸ்ரநாமம் எழுதியிருந்தார்.

சாந்தாராமின் திரைப்படம் நாராயண் ஹரி ஆப்தே எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.

டி.ஏ.மதுரம் என்எஸ்கே ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி பைத்தியக்காரன்? நாடகத்தை திரைப்படமாக்க முடிவு செய்தார். அவர் இரு வேடங்களில் நடிக்க சகஸ்ரநாமம் உள்பட நாடகத்தில் நடித்தவர்கள் படத்திலும் நடித்தனர்.

எம்.ஜி.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் இருவரும் சின்ன வேடத்தில் தோன்றினர்.

ஒப்பீட்டளவில் எஸ்.எஸ்.ராஜேந்திரனைவிட பெரிய வேடம் எம்ஜிஆருக்கு. பட வேலைகள் நடந்து கொண்டிருக்கையில் கலைவாணர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்காக படத்தில் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு, டி.ஏ.மதுரம் அவரது ஜோடியாக நடித்தார். ஜெயிலுக்கு போய் வந்த கதையை, அங்கு சந்தித்த மனிதர்களை வைத்து ஒரு பாடலும் கலைவாணர் பாட படத்தில் இடம்பெற்றது.

பைத்தியக்காரன்? படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இயக்கினர். சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ். ஞானமணி ஆகியோர் இசையமைத்தனர்.

உடுமலை நாராயண கவி, கே.பி.காமாட்சி, டி.ஆர்.சம்பந்தமூர்த்தி ஆகியோர் பாடல்கள் எழுதினர்.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதிய,  “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா, அவன் பாட்டை பண்ணோடுயொருவன் பாடினானடா…” கவிதையை பாடலாக்கி படத்தில் பயன்படுத்தியிருந்தனர்.

பெண் உரிமையை உரக்கப் பேசிய பைத்தியக்காரன்? நமது நாடு விடுதலை அடைந்ததற்கு அடுத்த மாதம் வெளியானது.

படத்தை மக்கள் ஆரவாரமுடன் வரவேற்றனர். படம் பம்பர் ஹிட்டாகி, கலைவாணர் சிறைக்குச் சென்றுவந்த சம்பவத்தை மறக்கடித்தது. இதில் கிடைத்த லாபத்தில் டி.ஏ.மதுரம் நான்கு படங்களைத் தொடங்கினார்.

கலைவாணரின் முற்போக்குச் சிந்தனையும், மதுரத்தின் முன்னெடுப்பும், திராவிட கழகத்தினரின் ஆதரவும் சிறைமீண்ட கலைவாணரை மீட்டெடுத்தன.

அவரது வாழ்நாளின் சிறந்த படங்களை அதற்குப் பிறகு தந்தார். அதன் தொடக்கமாக பைத்தியக்காரன் அமைந்தது.

நன்றி: முகநூல் பதிவு

You might also like