பொன்னீலனுக்குப் படைப்புச் சங்கமம் விருது!

ஒவ்வொரு வருடமும் நாவல் முதல் கொண்டு அனைத்து வகை இலக்கிய நூல்களையும் பதிப்பு செய்து ‘படைப்பு சங்கமம்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான விழா எடுத்து மூத்த எழுத்தாளர், வளரும் எழுத்தாளர் என்ற பாரபட்சம் இன்றி அங்கீகரித்து வருகிறது படைப்புக் குழுமம்.

இந்த வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான படைப்பு சங்கமம் விழா மிகச் சிறப்பான முறையில் சென்னை தி நகரில் உள்ள சர்ப்பிடி தியாகராஜர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இளம் கலைஞர்களின் பறையிசையில் அரங்கம் அதிர தொடங்கிய படைப்பு சங்கமத்தில் எழுத்தாளர் பொன்னீலன், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன், சிறைத்துறை DIG திரு முருகேசன், எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி உள்ளிட்ட மூத்த இலக்கியவாதிகளும் திரளாக வந்திருந்த இளம் இலக்கியவாதிகளும் சங்கமிக்க விழா இனிதே தொடங்கியது.

இந்த ஆண்டு படைப்புச் சங்கமத்தில் சுமார் 40 இலக்கிய நூல்கள் வெளியிடப்பட்டன.

தனியார் தொலைக்காட்சி விருது விழாவிற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் மிகச் சிறப்பான காணொளிகள் மூலம் எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.

இந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த எழுத்தாளர் பொன்னீலன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தழுதழுத்த குரலில் அவர் தன்னுடைய தாயைப்பற்றியும், தன் இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்யும் தனது மகள்கள் மற்றும் பேத்தியை பற்றியும் பேசியது அரங்கத்தை நெகிழ வைத்தது‌.

இந்த வருடத்திற்கான படைப்புச் சுடர் விருது எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களுக்கும் மலையாள எழுத்தாளர் ஷாஃபி சிறூமா விலாயி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அதேபோல கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களுக்கும் கவிஞர் தேன்மொழி தாஸ் அவர்களுக்கும் இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் வெளியான கவிதை, கட்டுரை, சிறுகதை உள்ளிட்ட அனைத்து இலக்கிய வகைகளுக்கான படைப்பு இலக்கிய விருதுகள் இந்த வருடமும் வழங்கப்பட்டன.

இலக்கியத்தோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் சிறந்து விளங்கும் நபர்களைத் தேர்ந்தெடுத்து சிறப்பு விருதுகள் வழங்குவது படைப்பின் வாடிக்கை.

இந்த வருடத்திற்கான இயல், இசை, நாடக விருதை தன்னை எங்கும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக சேவை செய்து வரும் நாடகவியாளர் மு.ராமசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சினிமாவை இலக்கியம் போலவே படைக்கும் இலக்கியவாதி, உள்ளூர் கதைகளை உலகப் படங்களாக திரையாக்கும் விந்தை பெற்ற, வாத்தியார் பாலு மகேந்திராவின் முதன்மைச் சீடர் திரு.சீனு ராமசாமி அவர்களுக்கு இந்த வருடத்திற்கான கலை இலக்கிய விருது வழங்கப்பட்டது.

தனக்கு பரிசாக வந்த 25 லட்ச ரூபாயை தன்னுடைய கிராமத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கழிவறை கட்டித் தந்த அரசு பள்ளி மாணவி ஜெயலட்சுமிக்கு மாண்புமிகு மகளிர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதே போல சிறந்த சமூக அக்கறையாளர், சிறந்த பதிப்பகம், சிறந்த கலை உள்ளிட்ட 10 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

You might also like