பாப் உலகின் முடிசூடிய மன்னன் மைக்கேல் ஜாக்ஸன்!

இசையுலகில் கிங் ஆஃப் பாப் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூடப் பதில் சொல்லி விடும் “ஜாக்ஸன்” என்று. நாடு, மொழி, இனம் எல்லாம் கடந்து சீனா முதல் அலாஸ்கா வரை மக்களிடம் மிகக் குறைந்த வயதிலேயே புகழ் பெற்று விளங்கினார் ஜாக்ஸன்.

அவர் ஒரு பிராஜிடி. அதாவது குழந்தை மேதை. சின்ன வயதிலேயே பெரும் சாதனைகளைப் புரிந்து விட்டதாலோ என்னவோ காலன் அவரைச் சீக்கிரமே கூப்பிட்டுக் கொண்டு விட்டான், மிகப் பெரும் திறமைசாலிகள் பலர் மிக இளம் வயதிலேயே அகால மரணமடைந்திருக்கிறார்கள்.

ஆமடியஸ் மொஸார்ட், பாப் மார்லே, மகாகவி பாரதி, எல்விஸ் பிரஸ்லி, ஜான் லென்னன், ஃப்ரெட்டி மெர்குரி என்று அது பெரிய லிஸ்ட். அதில் ஒருவர் உலகையே தன் அழகால் வசீகரப்படுத்திய மர்லின் மன்றோ. அவர் மனம் கலக்கமுற்றிருந்த ஒரு சமயத்தில் சொன்னார்.

“தயவு செய்து உங்கள் குழந்தைகளை அழகில்லாத பிறவி என்று எப்போதும் சொல்லித் திட்டாதீர்கள். அது அவர்களின் சின்ன மனதைக் காயப்படுத்தி எதிர்காலத்தில் மனநோயாளிகளாக்கி விடும்.

நான் என் சிறுவயதில் என் தந்தையால் அப்படித்தான் தூற்றப்பட்டேன்.” உலகின் மிக அழகான பெண் என்று பிற்காலத்தில் புகழப்பட்ட மர்லின் மன்றோ இப்படிச் சொன்னது ஆச்சர்யமாக                                                                                                                       இருக்கலாம்.

ஆனால் மர்லினின் ஆளுமையைக் குதறிப் போட்டது அவருடைய தந்தை பற்றிய அந்த மனச்சித்திரம்தான். அது கடைசியில் ஒரு மர்மமான மரணத்தில் இந்த உலகத்தை விட்டு அவரைத் துரத்தியது.

மைக்கேல் ஜாக்ஸனுக்கும் அதுதான் நடந்தது. ‘ஜாக்ஸன் 5’ இசைக்குழுவில் ஐந்து வயது மழலை மேதையாக அவர் ஆடிப்பாடிய போது என்ன ஒரு அழகான, திறமைமிக்கச் சிறுவன் என்று அமெரிக்காவே வியந்தது.

ஆனால் வீட்டில் அப்பா “ஏய் குரூபியே என்றுதான் அழைத்தார். சகோதரர்கள் “நீள மூக்குக்காரா” என்று சொல்லி கேலி செய்தார்கள். “ஜாக்லன் 5” இசைக்குழுவின் மூலம். அந்தச் சின்ன வயதிலேயே இசை நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுக்க நடத்தி நிறைய பணம் சம்பாதித்தாலும், அதற்கான விலையாக அவருடைய பாலப் பருவம் குரூரமாகப் பிடுங்கப்பட்டது.

ஒரு சராசரி குழந்தைக்கான விளையாட்டுப் பொழுதுபோக்குகள், கதை கேட்டல், அன்புச் சீராட்டல்கள், பெற்றோரின் கதகதப்பில் தூங்குதல், பொம்மைகளோடு விளையாடுதல் போன்ற இன்பங்கள் அவருக்குக் கிடைக்கவே இல்லை.

அந்தக் குழுவின் மானேஜர் பதவியில் உட்கார்ந்து கொண்ட அவருடைய தந்தை தினமும் கொடுமையான தண்டனைகளைக் கொடுத்தபடி இருந்தார், மறுபக்கம் சிறுவன் சம்பாதித்துக் கொடுத்த பணத்தை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, ஜாக்ஸனின் அப்பாவைப் பற்றி இருவேறு விதமான கருத்துக்கள் உண்டு.

அவர் ஒரு கொடுமைக்கார அப்பா என்பது ஒன்று, இரண்டாவது தன்னுடைய கடுமையான பயிற்சியினால்தான் அவர் ஒரு இசை மேதையை உருவாக்கினார் என்பது. இரண்டுமே உண்மையாக இருக்கக் கூடும்.

இந்தக் குடும்பம், வீடு, அப்பா எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி விட வேண்டும் என்று ஜாக்ஸன் விரும்பினார். ஒரு கட்டத்தில் அது சாத்தியமாகவே லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குத் தன் சகோதரர்களுடன் இடம் மாறினார்.

அங்கேதான் “டயானா ராஸ்” என்கிற கறுப்பின பாப் இசைப் பாடகி நல்ல தோழியாக ஏன் ஒரு வளர்ப்புத் தாயாகவும் கிடைத்தார். ஒரு பெண்மணியின் அரவணைப்பு அவருக்குப் புதிதாக இருந்தது.

இசை உலகில் ஜாக்ஸனின் பெயரை சிபாரிசு செய்தபடி இருந்தார் ராஸ், ஜாக்ஸன் சற்று நிம்மதியாக மூச்சு விட்ட போது பால்ய பருவம் கடந்து போய் விட்டிருந்தது. ஒரு வசீகரமான கறுப்பு இளைஞனாக அவர் மாறியிருந்தார்.

‘அழகில்லாதவன்” என்று விளிக்கப்பட்டதாலும், தந்தையின்  குரூரமான தண்டனைகளாலும் மனரீதியான அழுத்தத்தில் இருந்த அந்த இளைஞன், அடுத்து மற்றொரு சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது.

குவின்ஸி ஜோன்ஸ் என்கிற தொலைநோக்கு மிக்க கறுப்பின இசைத் தயாரிப்பாளர் மற்றும் கம்போஸரின் நட்பு கிடைத்த போது ஜோன்ஸ் சொன்னார். “ஸ்மெல்லி, (ஜாக்ஸனுக்கு  அவர் வைத்த செல்லப் பெயர்) உன்னுடைய திறமைக்கு நீ எங்கேயோ போக வேண்டியவன்.

ஆனால் அமெரிக்க மீடியாவும் இசை உலகமும் கறுப்பர்களை அவ்வளவு சீக்கிரம் மேலே வர விடாது. உன்னுடைய அடுத்த போராட்டம் நிறவெறியை எதிர்த்து இருக்கும்”. ஜாக்ஸன் அப்படி ஒரு புறக்கணிப்பை எதிர்பார்க்கவில்லை.

ஜோன்ஸ் தயாரிப்பில் “ஆஃப் தி வால்” இசை ஆல்பம் வெளியான போது ஜாக்ஸனுக்கு வயது 21. ஆல்பம் பெரிய ஹிட் என்றாலும் மீடியா அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை.

அமெரிக்காவின் சமூக வாழ்வில் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் கறுப்பு நிறம் கொண்டிருந்தால் பல அவமானங்களைச் சந்திக்க வேண்டும். “நிக்கர்” என்கிற வார்த்தை கறுப்பின மக்களைக் கேவலப்படுத்தும் ஒரு சொல். ஜாக்ஸன் அதை அடிக்கடி கேட்க நேர்ந்தது.

அதிகம் பேசாத, தான் உண்டு தன் வேலை உண்டு என்கிற மனோபாவம் கொண்டவராக அவர் மாறினார். ஸ்டூடியோவில் வேலை முடிந்ததும், தன் அறைக்குத் திரும்பிக் கதவைத் தாளிட்டுக் கொண்டார்.

அந்தத் தனிமை வாழ்வில் இசைப் பயிற்சி மற்றும் நடன ஒத்திகைகள் மட்டுமே ஒரே வடிகாலாக இருந்தன. இசைக் கலைஞர்களின் தவிர்க்க முடியாத பழக்கங்களாகக் கருதப்பட்ட புகை, மது, போதைப் பொருட்கள், பொருட்கள், பெண்கள் போன்றவற்றை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

‘அழகின்மைக்கு’ அடுத்து அவருடைய தாழ்வு மனப்பான்மையாக கறுப்பு நிறம் மாறியது. 1984ம் வருடம் வெளிவந்து உலகையே உலுக்கி எடுத்த போது அமெரிக்கா விழித்துக் கொண்டது.

கடைக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே 50 மில்லியன் இசைக் காப்பிக்களை ஒருவன் விற்கிறான் என்றால் அவன் சாதாரண ஆளாக இருக்க முடியாது என்கிற உண்மை புரிய மீடியா நெருங்கி வந்தது.

தனிமை விரும்பியான அவரை பாப்பராஸிகள் துரத்த ஆரம்பித்தார்கள். “எம்டிவி” மியூசிக் சானல் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. ஹிட் பாடல்களை வீடியோ படங்களாக எடுத்து அந்தச் சானல் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

“வெள்ளை ஆதிக்கம்” கொண்டிருந்த அதில் கறுப்பினப் பாடகர்களின் இசை வீடியோக்கள் எப்போதாவதுதான் ஒளிபரப்பாகும். ஜாக்ஸனின் திரில்லர் பெரிய ஹிட் ஆனதும் அவர்கள் வேறு வழி இல்லாமல் அவரை வீடியோவுக்காக அணுகினார்கள்.

“திரில்லர்” பாடலுக்காக இறந்த மனிதர்கள் (ஜோம்பிஸ்)  நடனமாடுவதைப் போல் ஒரு பாடல் காட்சியை வடிவமைத்தார் ஜாக்ஸன். மற்றொரு சூப்பர் ஹிட் பாடலான பீட் இட் சேரிப் பகுதியில் நடக்கும் கறுப்பு மற்றும் வெள்ளை இன மக்களுக்கிடையேயான மோதலைப் பின்னணியாகக் கொண்டிருந்தது.

இந்த இரண்டு மியூசிக் வீடியோக்களும் எம்டிவியில் வெளியான அடுத்த நிமிடமே அமெரிக்காவையே கலங்கடித்தது. ரசிகர்களின் தொடர்ந்த டிமாண்டுகளால் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தப் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன.

இருபதாம் நூற்றாண்டு வீடியோ இசையின் பிதாமகன் ஜாக்ஸன் தான். அடுத்தடுத்து வந்த ‘பில்லி ஜீன்’ போன்ற இசை வீடியோக்களும் சூப்பர் ஹிட். உலகிலேயே அதிக விற்பனையாகும் இசை ஆல்யம் என்கிற சாதனையைப் படைத்தது திரில்லர்.

“சோனி” நிறுவனம் அடுத்த ஆல்பத்தைத் தயாரிக்க ஓடோடி வந்தது. ராயல்டி மூலமும், ஓவாத இசை நிகழ்ச்சிகள். மற்றும் விளம்பரங்கள் மூலமும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. “கிங் ஆஃப் பாப்’ என்கிற பட்டத்தைச் சூட்டினார் தோழி எலிஸெபத் டெய்லர்.

ஜாக்ஸனின் முன் பக்கம் தீயில் எரிந்த தலைமுடி, கறுப்புக் கண்ணாடி, மிலிட்டரி யூனிஃபார்ம் போன்ற உடைகள், கிறிஸ்டல்கள் மின்னும் கையுறைகள், ஆபரெஷன் செய்யப்பட்ட கூரான மூக்கு என்பது இளைஞர்களிடையே ஒரு கல்ட்டாகவே மாறியது.

குறிப்பாக வேகமான அசைவுகளைக் கொண்ட அவருடைய மேடை நடனம், ஒரு கான்சப்டைக் கொண்டிருந்த இசை வீடியோக்கள் எல்லாம் இளைஞர்களை வெறி பிடிக்கச் செய்தன.

ஏராளமான பணம், எங்கு சென்றாலும் துரத்தும் புகழ் வெறி பிடித்த ரசிகர்கள், ஏதாவது கிசுகிசு கிடைக்காதா என்று அலைந்த மீடியா. இதெல்லாம் ஜாக்ஸனுக்கு பயத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே தனிமை விரும்பியான இவர் மறுபடி எங்காவது ஓட விரும்பினார். அங்கேதான் அவருடைய வினோதமான நடவடிக்கைகள் ஆரம்பமானது. அவர் மனதில் புதைந்திருந்த ‘சிறுவன் விழித்துக் கொண்டான்.

தன் பால்ய கால ஏக்கங்களை நிறைவேற்றக் கூடிய ஒரு ஃபேண்டஸி மாளிகையை அவர் தன்னுடைய 33ம் வயதில், மிகப் பெரும் கற்பனாசக்தியில், கலிபோர்னியா பள்ளத்தாக்கில் “நெவர்லேண்ட்” என்கிற பெயரில் நிர்மாணித்தார்.

அதை ஒரு மிகப் பெரிய சிறுவர் பூங்கா என்றே சொல்லலாம்.. 2600 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட மாளிகையில் ஏழு பாடும் குள்ளர்கள் இருந்தார்கள். சிம்பன்ஸி, மலைப்பாம்பு, மூன்று ஒட்டகைச் சிவிங்கிகள், மான்கள், வாத்துக்கள், வரிக்குதிரைகள், நெருப்புக்கோழிகளைக் கொண்ட மினி ஜூ இருந்தது.

சிகப்பிந்தியர்களின் கிராமக் குடிசைகளைக் கொண்டிருந்த  அட்மாஸ்பியரில் சில்வர் ஓக் மரக்காடுகளில் பறவைகள் பாடின. காமிக்ஸ் பாத்திரங்களின் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன.

வீட்டின் வாசலில் இருந்து அந்த ஆனந்த பூமியைச் சுற்றி ஒரு சிக்குபுக்கு ரயில் புகை விட்டுக் கொண்டு ஓடியது. நடுநடுவே குட்டி ஸ்டேஷன்கள் அதில் சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் விற்கும் கடைகள்.

2 மில்லியன் டாலர்கள் செலவில் ஒரு குழந்தைகளுக்கான சினிமா தியேட்டர். “இன்று இரவு சிறப்புக் காட்சி ‘காம்ப் ஃடையர் ” திரைப்படம்” என்கிற போஸ்டர் அதன் முன்னால் ஒட்டப்பட்டிருக்கும். அங்கேயிருந்த ஏரியில் பொம்மை வடிவிலான படகுகள் காத்திருக்கும்.

இரவுகளில் வெள்ளை விளக்குகள் ஓக் மரங்களில் ஒளிரும். அந்த வெளிச்சத்தில் காட்டின் நடுவே போடப்பட்டிருக்கும் மஞ்சள் பெயிண்ட் அடித்த செங்கல் சாலை பளீரென்று மின்னும். குழந்தைகளுக்குப் புரியும் வகையிலான படங்கள் இட்ட ஏராளமான புத்தகங்கள் கொண்ட லைப்ரரி அங்கே இருந்தது.

ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஸ்பெஷல் படுக்கை வசதிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உண்டு. முழுக்க முழுக்க பொம்மைகளால் நிரப்பப்பட்ட பெரிய ஹால் என்று குழந்தைகளின் சொர்க்கமாகவே இருந்தது அந்த மாளிகை.

இந்த பிரமாண்டமான ‘பீட்டர் பேன்’ மாளிகையில் அவர் பெண்களைக் கொண்டு வந்து கூத்தடிக்கவில்லை. மாறாக ஏகப்பட்ட குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் கூட்டி வந்தார்.

அவர்களுடன் ரயிலில் அந்த மாளிகையைச் சுற்றிச் சுற்றி வந்தார். பொம்மைகளை வாரி இறைத்தார். தியேட்டரில் அவர்களுடன் அமர்ந்து பல காமிக்ஸ் படங்களைக் கண்டுகளித்தார். ரோஸ்வுட் பியானோவில் இசை கற்றுக் கொடுத்தார்.

குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைத்த அந்த ஒண்டர்லாண்டில் அவர்களூடன் ஒரு சிறுவனாக சில காலமே வாழ்ந்தார் ஜாக்ஸன். அவர்களுடனான பொழுதுகளில் தன்னுடைய பால்ய காலத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி அது.

ஒருநாள், அவருடன் விளையாடத் தன்னுடைய மகனை அனுப்பி வைத்த ஒரு தந்தை, ஜாக்ஸன் தன் மகனை பாலியல் ரீதியாக முறைகேடு செய்தார் என்று மீடியாவில் திடீரென்று புகார் செய்தார். தீ பற்றிக் கொண்டது. வெலவெலத்துப் போன ஜாக்ஸன் அதை மறுத்தார்.

ஆனால் ஜாக்ஸன் அதைச் செய்தது உண்மைதான் என்று மீடியாவில் ஆதாரமின்றிப் பேசப்பட்டது. அப்போதுதான் அவருக்குத் தோழியாக மாறியிருந்த எல்விஸ் ப்ரஸ்லியின் மகள் லிஸா மேரி பிரஸ்லி, பிரச்சனையை வளர்க்க வேண்டாம், கோர்ட்டுக்கு வெளியே பணம் கொடுத்து தீர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

அதை ஏற்ற ஜாக்ஸன் 26 மில்லியன் டாலர் பணம் கொடுத்து பஞ்சாயத்தைத் தீர்த்தார். சிறுவனின் தந்தையும் பெரும் பணத்தோடு குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றார். குழந்தைகள் மீதான ஜாக்ஸனின் அளவற்ற அன்பை சில பேராசைக்காரர்கள் பணம் பறிக்கப் பயன்படுத்திக் கொண்டதாக அறிக்கை விட்டார் எலிஸபெத் டெய்லர்.

குற்றம் நிரூபிக்கவே படாத இந்தப் பிரச்சனையில் தான் அநியாயமாகப் பணம் பிடுங்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டதாக மனம் நொந்தார் ஜாக்ஸன். இக்கட்டான காலகட்டத்தில் தனக்கு ஆறுதலாக இருந்த லிஸா மேரியிடம் ‘என்னைத் திருமணம் செய்வாயா? என்று கேட்டார். அவரும் ஒப்புக் கொண்டார். திருமணம் நடந்து அது 19 மாத காலமே நீடித்தது. ஜாக்ஸனின் செக்ஷவல் ஆளுமையைப் பற்றி மீடியா திரி கிள்ளிப் போட்டது.

“அது ஒரு செக்ஷுவலி ஆக்டிவ் திருமணம்தான்” என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார் லிஸா மேரி. மைக்கேலை அவர் பிரிந்தாலும் கடைசிவரை நட்புணர்வுடனேயே இருந்தார்.

தான் மிகவும் ஆசைப்பட்டு கட்டிய “நெவர்லேண்ட்” மாளிகையில் மொத்தம் நான்கு ஆண்டுகளே வாழ்ந்தார் ஜாக்ஸன். கட்டற்ற செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அந்தக் கனவு மாளிகை மூடப்பட்டது.

தன்னைக் குதறிக் காயப்படுத்திய மீடியாவிடமிருந்து தப்பிக்க தன் வாழ்க்கையை மீண்டும் ஒரு கூட்டுக்குள் மர்மமாகச் சுருக்கிக் கொண்டார் ஜாக்ஸன்.

விடிலிகோ என்கிற தோல் நோயினால் தோலின் நிறம் வெளிறிப் போக ஆரம்பித்தது. பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரிக்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்தன.

வலி…வலி… தாங்க முடியாத வலி…இதற்கு நடுவிலும் ஓயாமல் இசைப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார் ஜாக்ஸன். டேஞ்சரஸ் ஹிஸ்டரி, இன்வின்ஸிபிள் என்று பல்லாண்டு இடைவெளிகளில் ஆல்பங்கள் வெளிவந்தன. எல்லாமே ஹிட்தான் என்றாலும் எதுவுமே மாஸ்டர் பீஸ் “திரில்லர்”க்கு ஈடாகவில்லை. ஆனாலும் காலத்தால் என்றும் அழிக்க முடியாத பாடல்களை அவர் உலகிற்கு அளித்திருந்தார்.

மீண்டும் ஒருமுறை சிறுவர் முறைகேட்டில் சிக்கியதும், வீல் சேரில் அமர்ந்து கோர்ட்டில் அதை மறுத்ததும் அவரை சின்னாபின்னப்படுத்தின. அந்தக் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்தது கோர்ட். அதற்குள் மீடியா தன்னுடைய மாக்ஸிமம் டேமேஜை செய்து முடித்திருந்தது. மைக்கேலின் உளவியல் முற்றிலுமாக உடைந்து போயிருந்தது.

கடும் மன அழுத்தம், வாட்டி வதைத்த தோல் நோய் (தோல் கான்ஸராகக் கூட இருந்திருக்கக் கூடும்) தொடர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரிக்களால் ஏற்பட்ட உபாதைகள், கடுமையான நடனப் பயிற்சிகளால் ஏற்பட்ட முதுகுவலி, வழக்குகளால் ஏற்பட்ட அவமானம் தந்த மனவலி, பெரும் கடன் சுமை போன்றவற்றிலிருந்து தப்பிக்க விரும்பிய அந்த இசை மேதை வலி நிவாரணி மருந்துகளிடம் சரணடைந்தார். “ஓவர் டோஸான” அது ஒரு கட்டத்தில் தன்னுடைய கட்டணமாக அவர் உயிரை எடுத்துக் கொண்டது.

“இந்த உலகிலேயே மிகவும் தனிமையானவன் நான்தான். ‘என் அன்பு உனக்கு உண்டு மகனே’ என்று எப்போதுமே என் அப்பா சொன்னதில்லை” என்றார் கண்ணீர் மல்க ஒரு பேட்டியில், மிகப் பெரிய சிறுவர் மாளிகை கட்டி அதில் தானும் ஒரு சிறுவனைப் போல் வாழ நினைத்த அந்த இசை அரசனின் கனவு பாதியிலேயே கலைந்து போனது. “இசை மேடைதான் என் வீடு என்று கடவுள் தீர்மானித்து விட்டார்.

அதனால் அதுதான் எப்போதும் என் வீடாக இருக்கும்” இதுவும் ஜாக்ஸன் சொன்னதுதான். அதுதான் கடைசி வரை நடந்தது.

மைக்கேல் ஜாக்ஸன் அதிரடி இசையில்தான் பெரிய கில்லாடி என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மெலடியிலும் அவர் கிங்தான். “லேடி இன் மை லைஃப், கேர்ள் ஃப்ரண்ட், ஹியூமன் நேச்சர், கான் டூ சூன், ஷீ ஈஸ் அவுட் ஆஃப் மை லைஃப்’ போன்ற பாடல்களை இரவின் தனிமையில் கேட்டுப் பாருங்கள்.

அவருடைய மேதைமை தெரியும், “ஐ வில் பீ தேர்” என்பது அவருடைய இன்னொரு புகழ் பெற்ற பாட்டு. அந்தப் பாடலைப் போலவே என்றென்றும் நம் கூடவே இருக்கும் ஜாக்ஸனின் மறக்க முடியாத குரல்.

– நன்றி கிருஷ்ணா டாவின்ஸி இசையாலானது என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.

You might also like