கமர்ஷியல் மசாலா படங்களை பார்ப்பதில் இருக்கும் ஒரு சவுகர்யம், இரண்டரை மணி நேரம் இவ்வுலகில் இருந்து விடுபட்டு அப்படம் காட்டும் கனவுலகில் சஞ்சரிப்பது.
அதுவும் தெலுங்கில் வெளியாகும் அந்த வகைமைப் படங்கள் அளிக்கும் அனுபவங்களுக்கு ஈடிணையே கிடையாது. ‘லாஜிக் இல்ல ஒன்லி மேஜிக்’ என்பதில் நம்பிக்கை இருந்தால், தாராளமாக அப்படிப்பட்ட படங்களைப் பார்த்து ரசிக்கலாம்.
ஆனால், அப்படிப்பட்ட கமர்ஷியல் பட விரும்பிகளையே கதிகலங்க வைப்பவை நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்கள். அந்த அளவுக்கு பாட்டு, பைட்டு, பஞ்ச் டயலாக், சென்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.
அவரது சமீபத்திய ஹிட்டான ‘அகண்டா’வை இயக்கிய பொயபட்டி சீனு இப்போது ‘ஸ்கந்தா’ தந்திருக்கிறார்.
இப்படத்தில் அவர் இளம் நட்சத்திரமான ராம் போத்தினேனி உடன் கைகோர்த்திருக்கிறார். தமிழிலும் ‘டப்’ செய்யப்பட்டு இப்படம் வெளியாகியிருக்கிறது.
சரி, எப்படியிருக்கிறது ‘ஸ்கந்தா’?
ஓடும் ரத்த ஆறு!
மாபெரும் ஐடி நிறுவன உரிமையாளரான ராமகிருஷ்ண ராஜுவுக்கு (ஸ்ரீகாந்த்) நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவதில் இருந்து கதை தொடங்குகிறது.
ராமகிருஷ்ணாவின் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் கொடூரமாகக் கொலையானதற்கு அவரே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
எந்தப் பதிலும் சொல்லாமல் அவர் அதனை ஒப்புக்கொள்கிறார். அவரது மகள் பரினீதாவோ (சாயி மஞ்ச்ரேகர்) டெல்லியில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆந்திர முதலமைச்சர் ராயுடுவின் மகளை தெலங்கானா முதலமைச்சர் ரஞ்சித் ரெட்டியின் மகன் கடத்திச் செல்கிறார். அதனால், நண்பர்களான இருவருக்குள் பகைமை முளைக்கிறது.
ரஞ்சித்தின் மகள் ஸ்ரீலீலா (ஸ்ரீலீலா) சேரும் அரசியல் பகுப்பாய்வு படிப்பில் பாஸ்கர் (ராம்) எனும் மாணவர் புதிதாக வந்து சேர்கிறார்.
‘முதலமைச்சர் மருமகன் நானே’ என்று சொல்கிறார். இது ஸ்ரீலீலா – பாஸ்கர் இடையே மோதலை உண்டாக்குகிறது. அவர் தன்னைப் பற்றிய உண்மையை உடைப்பதற்காக, தனது சகோதரரின் திருமணத்தில் கலந்துகொள்ளுமாறு பாஸ்கரை அழைக்கிறார்.
அதேநேரத்தில், தனது மகளை மீட்க ஸ்கந்தா எனும் முரட்டு மனிதனின் உதவியை நாடுகிறார் ராயுடு. தோற்றத்தில் அவர் பாஸ்கரைப் போலவே இருக்கிறார்.
திருமண நாளன்று ராயுடுவின் ஆட்கள் ரஞ்சித் வீட்டை முற்றுகையிடப் போவதாகத் தகவல்கள் வருகின்றன. அதனை எதிர்கொள்ள தெலங்கானா போலீசார் தயாராக இருக்கின்றனர்.
ஆனால், அவர்களுடன் மோதி ராயுடுவின் மகளை இழுத்துச் செல்லும் ஸ்கந்தா, கூடவே ஸ்ரீலீலாவையும் கூட்டிச் செல்கிறார்.
மூவரும் நேராக ருத்ரராஜபுரம் எனும் ஊருக்குச் செல்கின்றனர். அது, சிறையில் இருக்கும் தொழிலதிபர் ராமகிருஷ்ணாவின் சொந்த ஊர். அங்குதான் அவரது நண்பரும் பாஸ்கரின் தந்தையுமான மணிகண்ட ராஜு (ராஜா) தனது உறவினர்கள் சூழ வாழ்ந்து வருகிறார்.
ஸ்கந்தா ஏன் இரண்டு முதலமைச்சர்களின் மகள்களைக் கடத்திச் செல்ல வேண்டும்? ஸ்கந்தாவுக்கும் பாஸ்கருக்கும் என்ன தொடர்பு? இதையெல்லாம் ரொம்பவே நீட்டி முழக்கிச் சொல்கிறது ‘ஸ்கந்தா’.
பொயபட்டி சீனு இயக்கும் படங்களில் கோரமான வீடியோகேம்களை மிஞ்சும்விதமாகச் சண்டைக்காட்சிகள் இருக்கும்.
இந்த படமோ, பாலகிருஷ்ணாவை வைத்து அவர் தந்த படங்களையே ‘பச்சைக்குதிரை’ தாண்டுகிறது. அந்த அளவுக்குத் திரையில் ரத்த ஆறு ஓடுகிறது.
ஆனாலும், ஒரு சண்டைக்காட்சிக்குப் பிறகு கவிதைத்தனமான காதல், திகட்டும் அளவுக்கு குடும்ப சென்டிமெண்ட், கொஞ்சமாக மக்கள் நலன் பேசும் காட்சிகளை அடுக்கி, இப்படத்தை ‘அக்மார்க்’ கோங்குரா மசாலா படமாக தர முயன்றிருக்கிறார் சீனு.
வழக்கமான ‘மசாலா’ படம்!
இரு வேறு வேடங்களில் நடித்தாலும், அவற்றுக்கிடையே ராம் பெரிதாக வித்தியாசம் காட்டவில்லை.
‘இஸ்மார்ட் சங்கர்’ படத்தின் நீட்சி போலவே இதில் அவரது பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
‘பில்லா பயங்கர கருப்பா இருப்பான், நீ கருப்பா பயங்கரமா இருக்கே’ என்று தலைநகரம் படத்தில் ஒரு வடிவேலுவிடம் மனோபாலா சொல்வாரே, அதேபோல இதில் பாஸ்கர், ஸ்கந்தா பாத்திரங்களை வேறுபடுத்தி நடித்திருக்கிறார் ராம்.
வழக்கமாக, தெலுங்கு படங்களில் நாயகிகளுக்கு என்ன வேலையோ அதையே ஸ்ரீலீலாவும் இதில் செய்திருக்கிறார்.
நாயகனைக் கண்டு எரிச்சல் அடைந்து பின்னர் காதலில் விழுகிறார்; அவருடன் நடனமாடுகிறார்; கோபத்தில் பொங்குவதோடு குழந்தைத்தனத்துடன் கொஞ்சுகிறார்.
இன்னொரு நாயகியாக வரும் சாயி மஞ்ச்ரேகர் அழகாகத் திரையில் காட்டப்பட்டிருக்கிறார். ஒரு பாட்டு, இரண்டொரு செண்டிமெண்ட் காட்சிகளுடன் அவரது பங்களிப்பு முடிந்துவிடுகிறது.
இந்த படத்தில் வில்லன்களாக சரத் லோகித்சவா மற்றும் அஜய் புர்கர் வருகின்றனர். அவர்களது உறவினர்களாக பிரின்ஸ் சிசில், பிரபாகர் இருவரும் நடித்துள்ளனர்.
இவர்கள் நால்வரது ஆஜானுபாகுவான தோற்றம் வில்லத்தனத்தைத் திரையில் நன்றாகவே பிரதிபலிக்க உதவியிருக்கிறது.
இவர்கள் தவிர்த்து தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ‘வேதம் புதிது’ ராஜா, கௌதமி, இந்திரஜா, பப்லு பிருத்விராஜ் உட்படப் பெரும்பட்டாளமே இதில் நடித்துள்ளது.
விதவிதமான வண்ணக் கலவைகளில் அடுத்தடுத்து காட்சிகள் அமைந்தாலும், நம் மனதில் அனைத்து வண்ணங்களும் நிலைப்பது போல ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் சந்தோஷ் தேடகே.
‘இது எப்படி பாஸிபிள்?’, ‘ஐயோ, இது என்ன திடீர்னு வருது’ என்று கேள்விகளை அடுக்கும்விதமாக அமைந்துள்ளது தம்மிராஜுவின் படத்தொகுப்பு.
ஆனால், ‘ஒவ்வொரு காட்சியும் பார்க்கப் பார்க்க உற்சாகம் தருகிறதா என்பதை மட்டும் கவனியுங்கள்’ என்று சொல்லாமல் சொல்கிறது அவரது பணி.
‘வாரிசு’ படத்தில் ‘போடுறா பிஜிஎம்மை’ என்று விஜய் சொன்னவுடன் ஒரு அசத்தலான இசை பின்னணியில் ஒலிக்கும். அப்படிப்பட்ட தமன் தான் இப்படத்திற்கு இசையமைத்தாரா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே ‘சிவலிங்கா’வில் தந்த ‘ரங்கு ரக்கர’ பாடலின் பிரதிபலிப்பைப் படம் முழுக்கத் திரும்பத் திரும்ப ஒலிக்க விட்டிருக்கிறார்.
இப்படத்திற்காக அவர் தந்த பாடல்களில் ‘கல்ட் மாமா’ சட்டென்று நம்மைக் கவர்கிறது. மற்ற பாடல்களும் கிட்டத்தட்ட அதே தொனியிலேயே ஒலிக்கின்றன.
பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளில் நம்மைப் பிரமிக்க வைக்கிறது கலை இயக்குனர் ஏ.எஸ்.பிரகாஷ் குழுவினரின் பங்களிப்பு.
தெலுங்கு படங்களில் வரும் சண்டைக்காட்சிகளைப் பார்க்கப் பிடிக்கும் என்பவர்களுக்கு, இதில் ஸ்டன் சிவா குழுவின் உழைப்பு பிடிக்கும்.
என்ன, இதில் நிறைந்திருக்கும் வன்முறை நம் சகிப்புத்தன்மையைச் சோதிக்கும்விதமாக உள்ளது.
உடைகளின் அணிவகுப்பில் தொடங்கி படத்தொகுப்பில் பயன்படுத்தப்படும் ரேம்பிங் வரை பல விஷயங்கள் கண்களை உறுத்தும் அளவுக்கு, திரையில் ரொம்பவே ‘ஸ்மூத்’தாக காட்சியாக்கம் இருக்குமாறு தொழில்நுட்பப் பணிகள் பயன்படுத்தபட்டிருப்பது சிறப்பு.
‘ஸ்கந்தா’ திரைக்கதையில் காட்சிக்குக் காட்சி நிறைந்திருக்கும் லாஜிக் மீறல்களைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், கதையில் இருக்கும் பெரிய ஓட்டைகளை அப்படியே விட்டிருப்பதுதான் தியேட்டரில் சிரிப்பலையை உண்டாக்குகிறது. இல்லாவிட்டால், பொயபட்டி சீனுவின் இப்படைப்பு பெரிதாகக் கவனம் பெற்றிருக்கும்.
யார் இந்த ஸ்கந்தா?
கமர்ஷியல் படங்களில் லாஜிக் தேவையில்லை என்றாலும், அவற்றிலேயே திளைத்துக் கிடக்கும் ரசிகர்களே கேள்வி கேட்கும்படியாக ஒரு படத்தைத் தரக் கூடாது. இந்த படத்தில் அந்த தவறைச் செய்திருக்கிறார் சீனு.
படம் முழுக்கப் பலரை நாயகன் கொன்று குவிக்கிறார். அடுத்த நொடியே நாயகியோடு ‘டூயட்’ பாடுகிறார்.
பெற்றோரை மதிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, அதே வயதுடைய வில்லன்களைப் பார்த்து ‘டேய்’ என்று ஹை டெசிபலில் அலறுகிறார்.
‘கமர்ஷியல் மசாலா படத்துல இதெல்லாம் சகஜமப்பா’ என்பதற்கேற்ப இது போன்று பல விஷயங்களைக் கூட புறந்தள்ளிவிடலாம்.
ஆனால், நாயகன் இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் காட்டிவிட்டு அவர்களைப் பற்றிய விளக்கத்தை முழுவதும் சொல்லாமல் இருந்தால் என்னவாகும்? என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். காலம் தொட்டு தெலுங்கு சினிமாவில் பின்பற்றி வந்த வழக்கத்தை இதில் ‘டீலில்’ விட்டிருக்கிறார் இயக்குனர்.
இதில் ஸ்கந்தா, பாஸ்கர் என்று இரு வேறு பாத்திரங்களில் ராம் நடித்திருக்கிறார்.
பாஸ்கரின் பின்னணியைக் காட்டிய இயக்குனர் ‘யார் இந்த ஸ்கந்தா’ என்பதற்கு விளக்கமே சொல்லவில்லை.
கேட்டால், ‘ஸ்கந்தா 2வில் பார்த்து ரசியுங்கள்’ என்று சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.
‘அவ்விரு பாத்திரங்களின் சந்திப்பு தானே இக்கதையின் மையம்’ என்று நாம் உணர்ச்சிப் பிழம்பாக மாறுவதற்குள் படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடி நிற்கிறது.
அதனால், ரொம்ப சீரியசாக கமர்ஷியல் படம் பார்க்கும் விருப்பம் கொண்டவர்களை இந்த படம் நிச்சயம் திருப்திப்படுத்தாது.
கோங்குரா சட்டினியின் காரத்தை ருசிப்பதற்காகவே ஆந்திரா மெஸ்ஸுக்கு செல்வது போன்று பொயபட்டி சீனுவின் படங்களை ரசிக்கும் தனித்துவமான ரசிகர்களுக்கானது இப்படம்.
அதேநேரத்தில், தியேட்டரில் பாப்கர்ன் கொறித்தவாறு, திரையைப் பார்த்து கூக்குரலெழுப்பியவாறு, ஜாலியாக கேங்குடன் ஒரு படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு ‘ஸ்கந்தா’ சரியான சாய்ஸ்!
- உதய் பாடகலிங்கம்