சில படங்களைப் பார்க்கும்போது, ‘யதார்த்தத்தில் நடப்பதைக் காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்’ என்று தோன்றும். சில படங்களைப் பார்க்கையில், நேரில் பார்ப்பது போன்ற உணர்வே நம்மை மிரட்சியில் ஆழ்த்தும்.
அந்த வித்தியாசத்தை உணர்த்தும் படங்கள் மிகச்சிலவே. அவற்றுள் ஒன்றாக அமைந்திருக்கிறது ‘சித்தா’.
இதனைப் பார்க்கும் எவரும் நிச்சயம் கதையில் கண்ணுக்குப் புலப்படாத பாத்திரமாகவே மாறிப்போவார்கள். எதனால் அது நிகழ்கிறது? சரி, அப்படி நம்மை மிரட்சிப்படுத்தும் அளவுக்குப் படத்தில் என்ன விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது?
ஒரு சித்தப்பாவின் பாசம்!
பழனி நகராட்சியில் பணியாற்றும் ஈஸ்வரன் (சித்தார்த்) தனது அண்ணி (பாக்யாஞ்சலி), மகள் சுந்தரி (அக்ஷரா ஸ்ரீ) உடன் வசிக்கிறார்.
மகள் பிறக்கும் முன்பே, அவரது சகோதரர் மாரடைப்பினால் இறந்துவிட்டார். வாரிசுரிமை அடிப்படையில் அந்த வேலை ஈஸ்வரனுக்குக் கிடைத்துள்ளது.
’சேட்டை’ என்று சுந்தரியைக் கொஞ்சி விளையாடும் ஈஸ்வரனுக்கு, அச்சிறுமிக்குச் சிறிது கஷ்டம் என்றாலும் தாங்கிக்கொள்ள முடியாது. அப்பெண் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் அதீதக் கவனம் செலுத்துவது ஈஸ்வரனின் வழக்கம்.
அதேபோல, சதாசர்வகாலமும் ‘சித்தா’ என்று அழைக்காமல் சுந்தரியால் இருக்க முடியாது. சித்தப்பாவின் சுருக்கம் தான் ‘சித்தா’.
ஈஸ்வரனின் நண்பர் வடிவேலு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
அவரது சகோதரி மகள் பொன்னி, ஈஸ்வரன் உடன் கலகலப்பாகப் பேசிப் பழகுவார்.
அந்தச் சிறுமி படிக்கும் பள்ளியில் சுந்தரியும் பயில்கிறார்.
ஒருநாள் பொன்னி எதுவும் பேசாமல் வெறுமையுடன் இருக்க, ‘அது இயல்பாகத் தெரியவில்லையே’ என்று எண்ணுகிறார் ஈஸ்வரன். அவரை வீட்டில் இறக்கி விடுவதற்கு முன்பாக, அவரிடம் பேச முற்படுகிறார்.
ஈஸ்வரனை விலக்கிவிட்டு, வீட்டுக்குச் செல்கிறார் பொன்னி. இதனை யாரோ மொபைலில் வீடியோ எடுக்கின்றனர்.
அதற்கடுத்த நாள் காலையில் பொன்னியை மருத்துவமனையில் சேர்த்திருக்கும் தகவல் கிடைக்கிறது. சோதித்துப் பார்த்ததில், அவர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வருகிறது.
அதையடுத்து, பொன்னியின் உறவினர்கள் மற்றும் போலீசின் பார்வை ஈஸ்வரன் மீது படிகிறது. ஈஸ்வரன் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று சம்பந்தப்பட்டவருக்குத் தெரிய வருவதற்குள், சுந்தரி காணாமல் போகிறார்.
பேருந்து நிலையத்தில் கிடைத்த சிசிடிவி பதிவுகளில், அடையாளம் தெரியாத ஒரு நபரோடு அச்சிறுமி செல்வது தெரிகிறது.
அதேநேரத்தில், உடுமலைப்பேட்டை அருகே நெடுஞ்சாலையோரமாக ஒரு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடக்கும் தகவல் போலீசுக்கு கிடைக்கிறது. சுந்தரி கையில் இருந்த தண்ணீர் பாட்டில் அங்கே கிடைக்கிறது.
சுந்தரிக்கு என்ன நிகழ்ந்தது? உண்மை தெரியவரும்போது, ஈஸ்வரனும் அவரது அண்ணியும் எவ்வாறு ‘ரியாக்ட்’ செய்தார்கள் என்பதை ‘உணர்ச்சிக் குவியலாக’ நம் முன்னே வைக்கிறது ‘சித்தா’.
குழந்தைகள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாவதுதான் ‘சித்தா’வின் மையக்கதை. ஆனால், சமூகத்தில் மாறிவரும் குழந்தை வளர்ப்பு முறைகளே அதற்கு அடிப்படைக் காரணம் என்பதைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது இப்படம்.
முகத்திலறையும் யதார்த்தம்!
சித்தார்த் படங்களைப் பார்ப்பதில் சாதாரண ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, திரையில் அவர் ஏற்ற பாத்திரத்துடன் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியாமை. அந்தக் குறை ‘சித்தா’வில் இல்லை.
மிகச்சரியாக ‘டிகிளாமரைஸ்’ செய்து அவரைத் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் அருண்குமார்.
அதற்கேற்றவாறு, கொஞ்சமும் துருத்தலாக இல்லாத வகையில் நடித்திருக்கிறார் சித்தார்த்.
இதில் நாயகி நிமிஷா சஜயன் பாத்திரம் கொஞ்சம் ‘க்ளிஷே’வானது. ஆனால், அவரது நடிப்பு அதனை மறக்கடித்துவிடுகிறது.
அண்ணியாக வரும் பாக்யாஞ்சலியின் நடிப்பு, ஒரு சாதாரண பெண்ணை நம் கண் முன்னே காட்டுகிறது.
பொன்னியாக நடித்துள்ள அபியா தஸ்னீமும், சுந்தரியாக வரும் சஹஸ்ரஸ்ரீயும் நம்மைக் கதையின் சோக அடுக்குகளுக்குள் நம்மை மூழ்கடிக்கின்றனர்.
இவர்கள் தவிர்த்து சித்தார்த்தின் நண்பர்களாக நடித்தவர்கள், காவல் துறையினராக வருபவர்கள், குழந்தைகளின் உறவினர்கள் என்று அனைவருமே தமிழகத்தின் பெயர் தெரியாத ஊரொன்றில் நுழைந்து நம்மெதிரே கடப்பவர்கள் போன்று திரையில் தோன்றியிருக்கின்றனர்.
இதில் வில்லனாக நடித்த நபரைச் சில படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் பார்த்திருப்போம். படத்தில் காட்சிகள் குறைவென்றபோதும், கதையில் வரும் திடுக்கிடலை நமக்குள் எளிதாகக் கடத்த அவர் உதவியிருக்கிறார்.
பாலாஜி சுப்பிரமணியமின் ஒளிப்பதிவு, வெகு சில காட்சிகளிலேயே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறது. திரைக்கதையில் நிரம்பியிருக்கும் யதார்த்தமான ட்ரீட்மெண்டை சரியாகப் பிரதிபலித்திருக்கிறது.
இந்த படத்தைப் பார்த்து மனம் நெகிழ்வதற்கும் பயந்து நடுங்குவதற்கும் அவரது உழைப்பே காரணமாக உள்ளது.
சி.எஸ்.பாலச்சந்தரின் கலை வடிவமைப்பு, நம்மைக் கதை நிகழும் களத்திற்கு யதார்த்த சாயம் பூச உதவியிருக்கிறது.
சுரேஷ் பிரசாத்தின் படத்தொகுப்பு, கனகச்சிதமாகக் காட்சிகளை அடுக்கியிருக்கிறது.
அதன் வழியே, குழப்பமில்லாமல் கதை சொல்லப்படுகிறது.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, இடைவேளையின்போது ‘த்ரில்’ கூட்டும்போது நமக்குள் நிச்சயம் மிரட்சி பரவும். திபு நிணன் தாமஸ், சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
இன்னும் ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, ஒலியமைப்பு, டிஐ என்று பல துறைகளில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் இயக்குனர் மனதில் வரைந்த கற்பனைக்கு உருவம் கொடுத்திருக்கின்றனர்.
இயக்குனர் எஸ்.யு.அருண்குமார், பாலியல் அத்துமீறலுக்கு ஆளான குடும்பங்களின் கதறலை, துயரத்தைத் திரையில் காட்ட முனைந்திருக்கிறார்.
அந்த கதைக்கருவை ஏற்றுக்கொள்ளத் துணிந்தவர்கள் முகம் சுளிக்கா வண்ணம் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பாலியல் அத்துமீறலை மேற்கொள்பவர்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.
அதைவிட, பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலம் கருகாமல் காப்பாற்றுவதே முக்கியம் என்ற முகத்திலறையும் உண்மையைச் சொல்ல முனைந்திருக்கிறார்.
படத்தின் முடிவில், அதனைச் சரியாகக் கடத்துவதில் ஏதோ ’மிஸ்’ஸாகியிருக்கிறது.
சாதித்த இயக்குனர்!
பாலியல் ரீதியில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை, சிதைக்கப்படுவதைக் காட்டும் படங்கள் உண்மைக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும்.
வெறுமனே தகவல்களாக மட்டுமல்லாமல், காட்சியாக்கமும் கதாபாத்திர வடிவமைப்பும் வாழ்க்கையோடு ஒன்றியிருக்க வேண்டும்.
அதேநேரம், அந்த குரூரத்தை நேரடியாகவும் காட்டிவிடக் கூடாது. அதனைச் சாதித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார்.
ஏற்கனவே இவர் சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நம் கவனம் ஈர்த்தவர் தான். ஆனால், கடைசியாக இயக்கிய ‘சிந்துபாத்’ அப்படங்களை மறக்கடித்தது. அந்த சறுக்கலில் இருந்து மீண்டெழுந்து இப்படம் தந்திருக்கிறார்.
இந்தக் கதையில் நாயகியாக வரும் நிமிஷா சஜயன் பாத்திரம் கிளைமேக்ஸில் தனக்கு நேர்ந்த சோகத்தைப் பேசும் என்பதை முன்கூட்டியே யூகித்துவிட முடிகிறது.
சித்தார்த்தின் சகோதரர் ஏன், எப்படி இறந்தார் என்கிற விஷயம் போகிறபோக்கில் லேசாகச் சொல்லப்படுகிறது. அதனை உட்கிரகிப்பதில் பார்வையாளர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம்.
இந்த மொபைல் உலகில் குழந்தைகளை வளர்ப்பதில் என்னென்ன விஷயங்களை எல்லாம் பெற்றோர் பின்பற்ற வேண்டும்?
எவற்றை அனுமதிக்கக் கூடாது என்பதைத் துல்லியமாகச் சொல்லவில்லை.
அப்படிப் பாடம் எடுக்காதது இக்கதைக்கு ‘ப்ளஸ்’ ஆக மாறவில்லை.
முக்கியமாக, பெண் குழந்தைகளைத் தைரியமாக, தனியாக இந்த உலகை எதிர்கொள்பவர்களாக வளர்க்க வேண்டும் என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
இது போன்ற குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால், ‘சித்தா’ படம் நிச்சயம் நம் மனதில் தாக்கம் ஏற்படுத்தும். அதற்கு, குடும்பத்தோடு இப்படத்தைப் பார்க்கத் தயாராக இருக்க வேண்டும். அது நிகழ்ந்தால், இப்படம் வெற்றி பெறும்!
– உதய் பாடகலிங்கம்