மலைகளில் உலா வரும் ‘குதிரை நூலகம்’!

புதிய சிந்தனைகள் தான் இந்த உலகை வாழ்வித்து வருகின்றன. நெருப்பு பிறந்தது முதல் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது வரை, ஆதி மனிதர்களில் யாரோ சிலரது சிந்தனைகள்தான் அடுத்த தலைமுறையினரின் நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்கும் விதையிட்டன.

அப்படிப்பட்ட சிந்தனைகள் குறிப்பிட்ட துறை சார்ந்ததாக அமையும்போது, பெரும்பாலானவர்களின் கவனிப்பைப் பெறும் வாய்ப்புகள் குறைவு.

மாறாக, மிகச்சில சந்தர்ப்பங்களில் சில சிந்தனைகள் தினசரி வாழ்வையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வையே அடியோடு மாற்றும்விதமாக அமையும். அப்படியான ஒன்று ‘குதிரை நூலகம்’.

சமீபத்தில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் ‘குதிரை நூலகம்’ என்ற விஷயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிலாகித்துப் பேசியிருந்தார்.

அது என்னவென்று அறிந்துகொள்ள முயன்றபோது கிடைத்த தகவல்கள், அச்சிந்தனையின் வீச்சை உணர்த்துவதாக இருந்தன.

போக்குவரத்து வசதியின்மை!

அரசு, சில தனியார் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள், கலாசார அமைப்புகள், வெளிநாட்டு தூதரகங்கள் உட்படப் பலவற்றின் மூலமாக நடத்தப்படும் நூலகங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்; அவற்றைப் பயன்படுத்தியிருப்போம்.

அதற்காக, அந்த நூலகங்கள் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றிருப்போம். ஆனால், அவ்வாறு செல்ல இயலாதவர்களுக்காகவே ‘நடமாடும் நூலகங்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டன.

ஒருவரைத் தேடிச் சென்று சுகாதாரச் சேவைகள் மற்றும் இதர தேவைகளை வழங்குவது போல, ஒருவர் விரும்பும் புத்தகங்களை அளிப்பதுவே இதன் நோக்கம்.

நகரங்களில் போக்குவரத்து வசதி இருப்பதன் காரணமாக, இந்த நடமாடும் நூலகங்களுக்கான தேவை மிகக்குறைவு.

வயது முதுமையால் அவதிப்படுபவர்களுக்குக் கூட, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்துத் தந்து உதவுவார்கள். ஆனால், போக்குவரத்து வசதியற்ற இடங்களில் அதற்குச் சாத்தியமில்லை.

அதுவும் மிகச்சில பேர் மட்டுமே மலைப்பாங்கான கிராமங்களில் நூலக வசதியை நினைத்துப் பார்க்கவே முடியாது.

ஏனென்றால், இன்றும் கூட இந்தியாவின் பல மலைக்கிராமங்களில் அடிப்படைக் கல்வி, சுகாதார வசதிகள் கிடைக்காத நிலையே நீடிக்கிறது.

அங்கிருக்கும் குழந்தைகள் மத்தியில் பள்ளிக்குச் செல்லும் மனப்பான்மை அதிகரித்துள்ளது. ஆனாலும், பாடப்புத்தகங்கள் தவிர்த்து இதர புத்தகங்களைப் படிக்கும் சூழல் அறவே கிடையாது என்பதுதான் உண்மை.

அதனைப் போக்க, அவர்களைத் தேடிச் சென்று புத்தகங்களைப் படிக்கக் கொடுக்க வேண்டும். அந்த வாய்ப்பினை ஏற்படுத்துவதுதான் ‘குதிரை நூலகம்’ எனும் சிந்தனையின் நோக்கம்.

குதிரையின் மீது புத்தகங்கள்!

கோடைக் காலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது ஒரு மெல்லிய கூரையைப் போர்த்தி, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ‘சவால்’ அளிப்பவர்கள் நம் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அதேபோன்று குதிரை, கழுதை அல்லது ஒட்டகங்களின் மீது சுமைகளை ஏற்றுவதும் புதிய ‘ஐடியா’ கிடையாது தான்.

மலைப்பகுதிகளில் இருக்கும் வழிபாட்டுத்தலங்களில் முதியவர்களை அழைத்துச் செல்ல பல்லக்கு மற்றும் குதிரைகள் பயன்படுத்தும் வழக்கம் நெடுங்காலமாக உள்ளது.

அதனை முன்மாதிரிகளாகக் கொண்டு, மலைக்கிராம மாணவர்களுக்குக் குதிரைகளில் புத்தகங்களை எடுத்துச் சென்றால் என்னவென்று யோசித்தார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பதானி.

இவர், நைனிடால் பள்ளியொன்றில் நூலகராகப் பணியாற்றி வருகிறார்.

சங்கல்ப் இளையோர் அறக்கட்டளை, ஹிம்மோதன் அறக்கட்டளை என்ற இரு தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து, கடந்த ஜுன் மாதம் ‘குதிரை நூலகம்’ எனும் சிந்தனையைச் செயல்படுத்தத் தொடங்கினார் சுபம்.

இது பற்றிக் கேள்விப்பட்டவுடன், ஜல்னா கிராமத்தைச் சேர்ந்த திவான் சிங் ராவத் எனும் விவசாயி தனது குதிரையை சுபம் பதானிக்குக் கொடுத்திருக்கிறார்.

அதனைக் கொண்டு அக்கிராமத்திலுள்ள குழந்தைகளுக்குப் புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுத்திருக்கிறார் சுபம்.

ஒருமுறை புத்தகங்களைக் கொடுத்தால், அடுத்தமுறை செல்லும்போது அவற்றைப் பெற்றுக்கொண்டு வேறு புத்தகங்களைத் தருவார்.

இந்தச் செயல்முறை, அக்குழந்தைகளிடத்தில் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.

இந்த விஷயம் அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களுக்கும் பரவியிருக்கிறது. அதன் விளைவாக பக்னி, கவுண்டியா என்று 15 மலைக்கிராமங்களுக்குச் சென்று 600 புத்தகங்களுக்கும் மேல் விநியோகித்திருக்கிறது சுபம் குழு.

இதற்காகப் பத்து குதிரைகள் தற்போது அக்குழுவினரால் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த கிராமங்களுக்குச் சரியான சாலை வசதி கிடையாது; அது மட்டுமல்லாமல், அங்கு செல்லக் குதிரைகளை மட்டுமே பயன்படுத்தும் நிலையும் நிலவுகிறது.

இவையனைத்தும் சேர்ந்து, குதிரை நூலகத்தின் மீது அம்மாநில மக்களின் கவனம் திரும்பக் காரணமானது.

அதன் தொடர்ச்சியாகவே, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலும் அதனைப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார் மோடி.

விரிவுபடுத்தும் விருப்பம்!

தனது செயல்பாடு குறித்து பிரதமரே குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார் சுபம் பதானி.

அதன் தொடர்ச்சியாக, அருகாமை மாவட்டங்களில் உள்ள பல மலைக் கிராமங்களிலும் இவ்வசதியை விரிவுபடுத்த விருப்பதாகக் கூறியிருக்கிறார்; அப்பணியில் ஈடுபட உதவி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது நைனிடால், ருத்ரபிரயாக், தெஹ்ரி மாவட்டங்களில் சமூக நூலகங்கள் அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

நகர்ப்புறங்களைக் காட்டிலும், போக்குவரத்து வசதிகளற்ற மலைப்பாங்கான கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு வெளியுலகம் பற்றித் தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு.

‘ஏதேனும் ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலமாக, தங்களது வாழ்விடம் தாண்டி இந்த உலகுக்கான ஜன்னல் அவர்களுக்குத் திறக்கப்படலாம். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் அதிகமுள்ள குழந்தைகள் அங்கிருக்கின்றனர்.

அப்பகுதிகளில் சமூக ஊடகங்களோ, இணைய வசதியோ கிடையாது’ என்பதே சுபம் பதானியின் கருத்து.

குதிரை நூலகம் குறித்து அறிந்தபிறகு, நம் மனதில் மலைப்பு நிச்சயம் அதிகமாகும்.

சுபம் பதானியின் சிந்தனை முற்றிலும் புதியதல்ல; ஆனால், அதனைச் செயல்படுத்தியதன் மூலமாகப் பலரும் அதனைப் பின்பற்றும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட உழவர் சந்தை, அம்மா உணவகம் போன்ற திட்டங்களைப் பிற மாநிலங்கள் பிரதியெடுத்தது போல, குதிரை நூலகமும் பலருக்கு ஆசுவாசம் தருவது நிச்சயம்.

காரணம், எளிய மக்களின் மீது கரிசனமும் அக்கறையும் கொட்டும் எந்தவொரு சிந்தனையின் மீதும் புகழ் வெளிச்சம் விழத்தான் செய்யும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like