நாம் உட்கொள்ளும் உணவுகளில் ஒவ்வொரு நிற உணவுக்கும் தனித்துவமான ஊட்டச்சத்தும் மருத்துவ குணங்களும் இருக்கின்றன. ஆனால், நாம் பச்சை நிற உணவுகளைப் போல மற்ற நிற உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
குறிப்பாக வெள்ளை நிற உணவுகள் என்றாலே அவை கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளாகத் தான் இருக்கும் என ஒதுக்கிவிடுகிறோம். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுகள் பல வெள்ளை நிறத்தில் இருப்பது உண்மை தான்.
ஆனால், கார்போ ஹைட்ரேட் இல்லாத ஆரோக்கியமான வெள்ளை நிற உணவுகள் பல இருக்கின்றன.
அதில் சிலவற்றை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
முதலாவதாக, வெள்ளை வெங்காயத்தில் நிறைய மருத்துவப் பயன்கள் இருக்கின்றன.
இதனை நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதில் உள்ள சல்பர், க்ரோமியம் போன்ற மினரல்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
அடுத்ததாக, பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பண்பு புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.
இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், ஜிங்க், மாங்கனீசு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
மூன்றாவதாக, வெள்ளைக் கொண்டைக் கடலையில் புரதச்சத்துக்கள் அதிகம். ஜீரண ஆற்றலை மேம்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆற்றலை மேம்படுத்துவதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
நான்காவதாக, யோகர்ட்டில் [yogurt] ப்ரோ – பயோடிக் [Pro-biotic] பண்புகள் அதிகமாக இருக்கின்றன.
இதை எடுத்துக் கொள்ளும்போது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகரித்து ஜீரண ஆற்றலை மேம்படுத்தும்.
இதில் கால்சியம் மிக அதிகம் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும்.
அதேபோல இதிலுள்ள புரதச்சத்து தசை வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது.
ஐந்தாவதாக, காலிஃபிளவரில், [Cauliflower] எலும்பு ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாப்பது, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது என பல நன்மைகள் உள்ளன.
பன்னீரில் வைட்டமின் பி-12 அதிக அளவில் இருக்கிறது.
இந்த வைட்டமின் பி12 மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் உதவி செய்கிறது.
கடைசியாக, காளான் வெள்ளை நிறத்திலுள்ள மிக முக்கியமான உணவு. இதை நாம் பெரும்பாலும் எடுத்துக் கொள்வதே இல்லை.
ஆனால், காளானில் ஏராளமான மருத்துவப் பயன்கள் நிறைந்திருக்கின்றன. வாத நோய்களால் ஏற்படும் பக்க விளைவுகளையும் அறிகுறிகளையும் சரிசெய்வதில் காளானுக்கு முக்கிய இடமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
– சங்கீதா