பள்ளிக்கல்வித் துறை, மாணவர்கள் எப்படிப் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களையும் அளித்துள்ளது.
அதன்படியே பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை நடக்கக் கூறி வலியுறுத்தி பின்பற்றுகின்றனர்.
ஆனால், தலைமுடி குறித்தும் உடை குறித்தும் பிரச்சனைகள் வருவது பள்ளிகளில் தொடர்கிறது.
பெற்றோர்களுக்கும் இதில் பங்கு இருக்கின்றது. ஆனால், இதை காரணமாக வைத்து ஒரு மாணவன் தற்கொலை வரை செல்வதும் அதற்காக தலைமை ஆசிரியர் சஸ்பென்ட் செய்யப்படுவதும் எந்த வகையிலும் சரியான நீதியல்ல.
அதேபோல, பள்ளி வளாகத்தில் மது பாட்டில்கள் இருந்ததால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் உள்பட சிலரை சஸ்பென்ட் செய்துள்ளனர் என்ற செய்தி நேற்று பரவலானது.
குறிப்பிட்ட பள்ளியைப் பற்றி இன்னும் செய்தி விரிவாகத் தெரியவில்லை. ஆனால் மது விற்பனையை பரவலாக்கி மாணவர் கைகளுக்கு கூட சென்றடைய வைத்துள்ளது அரசு.
மேலும் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் உயரமாகக் கட்டாதது, இரவுக் காவலர் நியமிக்காதது, துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்காதது இவையெல்லாம் அடிப்படைக் காரணங்கள் பொறுப்பேற்க வேண்டியது அரசும் பள்ளி மேலாண்மைக் குழுக்களும்.
ஏனெனில், கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகளின் வளர்ச்சிகளில் சமூகப் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று மாதம்தோறும் கூட்டங்கள் நடக்கின்றன.
அதே போல் பல்லாயிரம் பள்ளிகளில் ஒழுக்கம் சார்ந்து தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டிய விளையாட்டு ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதும் மிக இன்றியமையாதது, இதையும் அந்தக் குழு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
எந்த வசதியுமே கொடுக்காமல் எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களைக் கேள்வி கேட்பது தண்டிப்பது எந்த வகையில் அறிவியல்பூர்வமான தீர்வு?
இந்தக் குழுவில் இருப்பவர்கள் ஒரு அரசுப் பள்ளியில் அடிப்படையாக இருக்க வேண்டியற்றை, அரசு செய்யவேண்டியவற்றை தீர்க்கமாக ஒரு புரிதலுடன் ஆய்வுக்கு சென்றால் நன்றாக இருக்கும்.
அடிப்படையில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பதில் சொல்லும் இடத்தில் கல்வி அமைச்சர் மற்றும் கல்விச்செயலாளர் இருவரும் இருக்கின்றனர். இவை சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய செய்தி அன்று.
சில வருடங்களாகவே பள்ளிகளில் மனநல ஆலோசகர் நியமனம் குறித்து பேசி வருகிறோம். மாதிரிப் பள்ளி (model school) ஒன்றில் பயிலும் மாணவரின் மனநிலையே தற்கொலை எண்ணத்திற்கு செல்கிறது என்றால் என்ன சொல்வது?
இதிலிருந்து புரிந்து கொள்ளலாம், எல்லா மாணவரும் இன்றைய கல்வி முறையில் சமூகக் கட்டமைப்பில் மனதளவில் ஒரே விதமான மனநிலையில்தான் இருக்கின்றனர் என்பது கண்கூடு.
இவற்றையெல்லாம் சரி செய்வதில்தான் கல்வித்துறையின் வெற்றி இருக்கிறது. கல்வித் துறையின் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும்.
– உமா, கல்வியாளர்