தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், வில்லன் வேடம் ஏற்பது முன்பெல்லாம் அபூர்வமான நிகழ்வாக இருந்தது.
45 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமார் வில்லன் கேரக்டரில் ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் நடித்தார். ஆனால், அதனை அவர் தொடரவில்லை.
மார்க்கெட் ஓய்ந்த நேரத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரை வில்லன் வேடங்கள் தேடி வந்தன. முரட்டுக்காளையில் ஜெய்சங்கரும், ஊமை விழிகளில் ரவிச்சந்திரனும் வில்லன்களாக நடிக்க ஆரம்பித்தனர்.
அந்த பாதையிலேயே சில ஆண்டுகள் பயணித்தனர். அவர்களுக்கு பிறகு ஹீரோக்களான பெரிய நடிகர்கள், வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் தாங்கள், ஹீரோக்களாக நடித்த படங்களில், வில்லன் கேரக்டரையும் அவர்களே ஏற்றுள்ளனர். ரஜினி (நெற்றிக்கண்) கமல் (ஆளவந்தான்) சத்யராஜ் (அமைதிப்படை) அஜித் (வரலாறு) போன்றோர் இதில் அடக்கம்.
கதாநாயகனாக கொடிகட்டிப் பறந்த கார்த்திக், தனது தளத்தை தவற விட்டதும் வில்லன் வேடத்துக்கு மாறினார்.
அதனைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூரியா, விஜய் சேதுபதி, அர்ஜுன் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்து, தொடர்கின்றனர்.
‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லன் வேடம் அணிந்து, அந்தப் படத்துக்கு புதிய கலர் கொடுத்தார். ரஜினிக்கு நிகராக அவர் வேடம் அமைந்தது. படம் சூப்பர் ஹிட்.
இதனால் மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியை வில்லனாக்கி விட்டனர். அவரை, ஜவான் மூலம் இந்தி வரைக்கும் அழைத்து சென்று விட்டார் அட்லீ.
தாறுமாறாக சம்பளம் கொடுப்பதால், விஜய் சேதுபதியால் வில்லன் வேடங்களை மறுக்க இயலவில்லை. சில நாள் கால்ஷீட்டுக்கு 10 கோடி ரூபாய்.
நிறைய வில்லன் வாய்ப்புகள் விஜய் சேதுபதியை தேடி வருகிறது. இப்போது பல கதாநாயகன்களுக்கும் வில்லன் ஆசை வந்து விட்டது.
கல்கி படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார். சம்பளம் ரூ.150 கோடியாம். வெறும் 30 நாள் கால்ஷீட்.
டான்ஸர், டான்ஸ் மாஸ்டர், படத்தில் ஒரே ஒரு நடனம், ஹீரோ என படிப்படியாக உயர்ந்து டைரக்ஷனையும் ஒரு கை பார்த்து விட்ட பிரபுதேவாவுக்கும் வில்லன் ஆசை வந்து விட்டது.
அவர், ஷங்கர் இயக்கத்தில் நாயகனாக நடித்த ‘காதலன்’ படம் தவிர வேறு படம் எதுவும், அந்த அளவுக்கு எடுபடவில்லை.
எனவே டைரக்ஷன் துறைக்கு ஜாகையை மாற்றினார். ஓரளவு வெற்றி கிடைத்தது. இப்போது இயக்கமும் கை கொடுக்காததால், வில்லனாக அடுத்த அவதாரம் எடுத்துள்ளார்.
‘படாஸ் ரவிகுமார்’ எனும் பெயரில் உருவாகும் இந்திப் படத்தில் வில்லனாக நடிக்க பிரபுதேவா ஒப்புக்கொண்டுள்ளார்.
இதில் ஹீரோவாக நடிப்பவர், ஹிமேஷ் ரேஷ்மையா. இவர் இசை அமைப்பாளரும் ஆவார். தசாவதாரம் படத்தின் பாடல்களுக்கு இவர்தான் இசை அமைத்தார். ஹீரோவாக ஹிமேஷ் நடிக்கும் இந்திப் படத்துக்கும் அவரே இசை.
இந்தியில் வில்லனாக நடிக்க பிரபுதேவாவுக்கு, பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. எனவே ஓ.கே.சொல்லி விட்டார்.
இன்னும் யார், யாருக்கு வில்லன் யோகம் இருக்கிறதோ?
-பாப்பாங்குளம் பாரதி.