மரணத்தையுமா ஊடகங்கள் பரபரப்பான தீனி ஆக்க வேண்டும்?

முன்பெல்லாம் கிராமங்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், மைக் செட் வைத்து ஒப்பாரி வைப்பார்கள். அதற்கென்று தனி மணிச் சத்தம் ஒலிக்கும். பெண்கள் மாரடித்துக் கொண்டு அழுகிற சத்தம் தெருவுக்கே கேட்கும்.

இப்போது அத்தனை வேலைகளையும் ஊடகங்களே சடங்குகளைப் போலச் செய்துவிடுகின்றன.

பிரபலமானவர்கள் யாராவது இறந்துவிட்டால் போதும், தொலைக்காட்சி காமிராக்கள் வந்து சடலத்தைச் சுற்றிலும் ஈக்களைப் போல மொய்த்து விடுகின்றன. 

சடலத்தைக் கீழிறக்கிக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைப்பதில் துவங்கி மயானத்தில் எரிப்பது வரை கூடவே பயணப்பட்டு – தொலைக்காட்சியைப் பார்க்கிற வீடுகளையும் துக்கத்தை அள்ளித்தெளித்து விடுகின்றன.

மரணம் நடந்த வீட்டிற்கு வருகிற ஒருவர் காமிராக்களைத் தாண்டி வருவதற்குள் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. ஒருவருடைய தனிப்பட்ட அழுகை கூடக் காமிராவுக்கு முன் தீனியாகிவிடுகிறது.

சமீபத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி மீடியாக்கள் நடந்து கொண்ட விதம் பற்றி இயக்குநர் பாரதிராஜா முதற் கொண்டு பலரும் கண்டனம்  தெரிவித்திருக்கிறார்கள்.

ஏதாவது ஊடகம் தொடர்பானவரின் வீடுகளில் இம்மாதிரியான உயிரிழப்பு நடந்தால், ஊடகங்களை இப்படித்தான் மயானம் வரை மோப்பம் பிடிக்க விடுவார்களா?

துக்க நிகழ்வில் ‘பிரைவஸி’யை அனுசரிக்கச் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு உரிமை இல்லையா? இதற்கான உரிமையை ஊடகங்களுக்கு வழங்கியது யார்? அல்லது ஊடகங்களுக்குக் கட்டுப்பாட்டை விதிக்கப்போவது யார்?

சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் பாலசந்தரின் மகன் மறைந்தபோது சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் சோகத்துடன் அமர்ந்திருந்த பாலச்சந்தர் ஒருகட்டத்தில் கொந்தளித்துவிட்டார்.

அவரது மகனின் சடலத்தை மின்மயான அறைக்கு எடுத்துச் சென்றபோது அதுவரை பின்தொடர பல காமிராமேன்கள் முயன்றபோது, சத்தம் போட்டு அதைத் தடுத்ததை நேரடியாகப் பார்க்க முடிந்தது. ஒரு தந்தையாக அவரின் தவிப்பை உணர முடிந்தது.

தொலைக்காட்சிகளுக்குள் டி.ஆர்.பி. ரேட்டிங்கைப் பெறுவதில் போட்டி இருக்கலாம். அதற்காக எந்த எல்லையையும் மீறி அதையும் நியாயப்படுத்தலாம்.

ஆனாலும் ஒரே ஒர் கேள்வி.

ஊடகங்களுக்கான சுதந்திரம் துக்கவீடுகளிலும், மயான எல்லைகள் வரை நீள வேண்டுமா?

_ யூகி 

You might also like