– பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொசுக்கள், வைரஸ்கள், நுண்ணுயிரிகள் மூலம் பல்வேறு தொற்றுகள் பரவி வருகிறது.
இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்கான சிகிச்சை கட்டமைப்புகளை விரிவுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை காரணமாக தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புகளும்,
குறிப்பாக டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது எனவும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழக பொது சுகாதார விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக உள்ளது எனவும்
எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவர்களுக்கு உரிய விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த எச்சரிக்கை தொடர்பாக முதல் முறை நோட்டீஸ் வழங்கப்படும், அதனை ஓரிரு நாளில் சரிசெய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.