கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் வழியாக நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் பூம்பட்டினம் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் சங்கமம் ஆகும் ஜீவநதிதான் காவிரி.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காவிரியில் அடிக்கடி கட்டுக்கடங்காத வெள்ளம் புரண்டோடி திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை வெள்ளக்காடாக்கியது.
இதில் பயிர் அழிவு, மனித உயிர்கள், உடமைகள் அழிவு தொடர்ந்துள்ளது.
தண்ணீரும் வீணாகக் கடலில் கலந்து தேவைப்படும் நேரத்தில் வறட்சியின் பிடியில் மக்கள் தவித்துள்ளனர்.
இதில் மக்கள் மட்டுமின்றி, சாகுபடி செய்யப்பட்ட வெள்ளாமையும் தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.
இதைக் கண்டு துயருற்ற சோழ மண்டலத்தை ஆண்டு வந்த மன்னர் கரிகால் சோழன், இந்நிலையை மாற்றி காவிரியின் குறுக்கே ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தார்.
நீரின்றி இவ்வுலகம் இல்லை என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்ததால் காவிரியின் போக்கை மாற்ற கல்லணை அமைந்தது.
அணை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மலைகள் உள்ள இடமல்ல; முற்றிலும் சமவெளிப் பரப்பு. ஆனால், உலகையே அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது தமிழர்களின் திறன்.
ஒரு நொடிக்கு 2 லட்சம் கன அடி நீர் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கும் காவிரியின் குறுக்கே அணைகட்டுவது என்பது அன்றைய காலக்கட்டத்தில் அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார் மன்னன் கரிகால் சோழன்.
காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகள் கொண்டு வந்து போடப்பட்டன. நீர் அரிப்பின் காரணமாக தரைத்தளத்தில் பெருங்குழி ஏற்பட்டு அந்தப் பாறைகள் மண்ணுக்குள் புதையுண்டன.
அதன் மேல் வேறு பாறைகளை அடுக்கி அதன் நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் பசை போன்ற மண்ணைக் கொண்டு புதிய பாறைகளில் பூசி இரண்டு பாறைகளும் ஒட்டிக்கொள்ளும் வகையில் உருவாக்கினர். இதுவே இந்த அணை கட்டப்பட்டதன் தொழில்நுட்பம்.
இப்போதுள்ள அணைகளில் 1800 ஆண்டுகள் பழமையானது கல்லணையே. இதன் நீளம் 1080 அடி. அகலம் 66 அடி. உயரம் 18 அடி.
இது நெளிந்து வளைந்த அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
கல்லும், களி மண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் கட்டுமானம் 1800 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருகிறது.
தஞ்சை – திருச்சி எல்லையில் பூதலூர் வட்டம் தோகூர் கிராமத்தின் வடக்குத் திசையில் கல்லணை அமைந்துள்ளது.
திருச்சியில் அகண்ட காவிரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வலது புறத்தில் கொள்ளிடமாகவும் தென்புறத்தில் காவிரியாகவும் இரண்டாகப் பிரிகிறது.
தென்புறத்தில் பிரியும் காவிரி, கல்லணையை வந்து சேர்கிறது. அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளில் தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது.
வெள்ளக் காலங்களில் கல்லணையின் வடபுறத்தில் உள்ள கொள்ளிடத்தில் வெள்ளநீர் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக கடலில் கொண்டு சேர்க்க வழி செய்வது இதன் முக்கிய அம்சம்.
கடைசியாக 2005ம் ஆண்டு நவம்பர் 25, 26, 27 தேதிகளில் அதிகபட்சமாக கல்லணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.
வேறு எந்த கட்டமைப்பின் உதவியும் இன்றி, கல்லணை இந்தச் செயல்பாட்டை 2 ஆயிரம் ஆண்டுகளாகச் செய்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதுகாக்கப்படுவதுடன், சாகுபடிப் பயிர்களும் அழிவில் இருந்து காக்கப்படுகின்றன.
இப்போது கொள்ளிடத்தில் ஏராளமாள கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருவதால் தமிழக மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது கல்லணை.
சோழ மன்னன்னால் கி.பி. 2ம் நூற்றாண்டில் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு இன்றும் உறுதியுடன் நிலைத்து நிற்பது தமிழர்களின் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய சான்று.
நீரைத் தேக்கி வைக்கும் அணை என்றே கல்லணையை பலரும் நினைக்கின்றனர். ஆனால், அதுபோன்ற அணை அல்ல இது.
இது காவிரியில் பாயும் நீரைத் தடுத்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் பிரித்து டெல்டா மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்கு மட்டுமன்றி உணவு உற்பத்திக்கும், உழவர் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்குமான உயிர் நாடியாக விளங்குகிறது.
1804ம் ஆண்டு கேப்டன் கால்டுவெல் என்ற ஆங்கிலப் பொறியாளரால் கற்கள் கொண்டு கரைகளை உயர்த்தி கல்லணை அணை சீர் செய்யப்பட்டது. இந்திய நீர்ப்பாசனத் திட்டத்தின் தந்தையானசர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார்.
பல ஆண்டுகள் ஆராய்ந்த அவர், பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும், பாசன மேலாண்மையையும் கண்டு வியந்துபோனார்.
அணைக்கட்டின் 12 அடி ஆழத்திற்குக் கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை அறிந்து வியப்புற்றார்.
விநோதமான வடிவத்தில் கட்டப்பட்ட இந்த கல்லணை, வண்டல் மண் அணையில் படிந்துவிடாமல் கிளை ஆறான கொள்ளிடம் நீரோட்டத்தில் அடித்துக்கொண்டு ஓடுவது அதிகரிக்குமாறு வடிமைக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தார்.
இவர் மூலம் 1830 – 1840ம் ஆண்டுகளில் கொள்ளிடத்தில் மணற்போக்கி கட்டப்பட்டது. இவர், கல்லணை என்ற இந்த அதிசய கட்டமைப்பை உலகிற்கு எடுத்துக் கூறினார்.
கல்லணைக்கு ‘கிராண்ட் அணைக்கட்’ (மகத்தான அணை) என பெயரையும் சூட்டினார்.
1883 – 1886ம் ஆண்டுகளில் கர்னல் ஜோகிஸ்ட் என்பவரால் காவிரி, வெண்ணாறு ஆகிய நீரொழுங்கிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டன.
1925 – 1934ம் ஆண்டுகளில் மேட்டூர் அணை கட்டப்பட்டது.
அப்போது கல்லணையில் காவிரி, மேட்டூர் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு கல்லணைக் கால்வாய் தலைப்பு நீரொழுங்கி 1929 -31ம் ஆண்டு கர்னல் டபிள்யூ.எம். எல்லிஸ் அவர்களால் கட்டப்பட்டது.
1839ம் ஆண்டு அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு இப்போது சுற்றுலாத் தலமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கல்லணையில், பாசனத்திற்கு முதன்மையான ஆறு காவிரி. அணை கட்டப்படுவதற்கு முன்பு 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் பெற்றது. அதற்குப் பிறகு கி.பி.1800ல் 6 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பாக அதிகரித்தது.
கல்லணை அணைக்கட்டின் மூலமாகத்தான் டெல்டா மாவட்டங்களில் நீர்ப் பங்கீடு செய்யப்பட்டு அந்தப் பாசனத்தின் மூலம் உணவு உற்பத்தியை மையமாக வைத்து ‘சோழ நாடு சோறுடைத்து’, ‘தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.
1973 – 76ம் ஆண்டுகளில் ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் மணற்போக்கி ஆகிய நீரொழுங்கிகளின் முன்புறத்திலும், பின்புறத்திலும் தரைத்தளம் அமைக்கும் பணிகளும் – காவிரியில் 13 மதகுகள், வெண்ணாற்றில் 9 மதகுகள், மணற்போக்கியில் 5 மதகுகள், கொள்ளிடத்தில் 30 மதகுகள் மற்றும் மின்சார இயந்திரம் மூலம் அடைப்பு பலகைகளை ஏற்றி இறக்கும் பணிகளும் – செய்து முடிக்கப்பட்டன.
இப்போது கல்லணை ஒரு சிறப்புமிகு புராதனமான சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. கரிகாலனுக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் இளைப்பாற பூங்காவும் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
-அ.ஞானபாஸ்கரன்
– நன்றி: தினகரன் தீபாவளி மலர் 2021