சமீபத்தில் நம் எல்லோர் மனதையும் கனக்க வைத்த ஒரு தாயின் கண்ணீர் வாசகம் “கருவறையில் உன்னை முதன் முதலில் பார்த்து சிலிர்க்க வைத்தாய்! இப்பொழுது கல்லறையில் பார்க்க வைத்து விட்டாயே”.
– ஆம், பெருகிவரும் டீன் ஏஜ் தற்கொலைகள் நடுத்தர வயதினரை கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு யார் காரணம்? பெற்றோர்களா? ஆசிரியர்களா அல்லது சமூகமா இல்லை ஊடகங்களா? – நாம் ஒவ்வொருவரும் தான்.
இவ்வுலகம் வாழத் தகுதியற்ற இடம் என்று தன் உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற நிகழ்வுகளை நினைத்து நாம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
என்ன செய்யப் போகிறோம்? மனித இன அழிவிற்கு இது ஒரு விதை என்று தோன்றவில்லையா?
எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று பகிரங்கமாக கூவிக் கொண்டிருப்போமே! இப்பொழுது அது ஊனமாகிக் கொண்டிருப்பதை உணருகிறோமா என்ன?
முதலில் பெற்றோர்கள் தன் குழந்தைகளை புரிந்து கொள்ளவேண்டும். ‘Peer pressure’ என்னும் வார்த்தையை அகராதியிலிருந்து அழிக்க வேண்டும். வெற்றி தோல்விகளை சமமாக பார்க்கக் கூடிய மனநிலையை வரவழைக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளின் நடத்தையில் சிறிய மாற்றத்தை நீங்கள் கண்டால் கூட முதலில் அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் உங்களிடம் ஒளிவுமறைவில்லாமல் பகிர்ந்து கொள்ளக் கூடிய சூழலை உருவாக்கிக் கொடுங்கள்.
உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம் என்பதை அறிய வேண்டும். உங்களின் பிள்ளைகளை அடுத்தவர்கள் விமர்சிக்க நேர்ந்தால் நீங்கள் அதனை அனுமதிக்காதீர்கள்.
பணம் சம்பாதித்தல் மட்டுமே வசதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது என்ற நினைப்பை பெற்றோர்கள் நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும். ஒரு ஏழையின் வீட்டில் பணத்தட்டுப்பாட்டால் குழந்தைகள் கைபேசியில் முழுகுவதை தடுக்க வேண்டும். ‘Digital Detox’ என்பது நம் எல்லோருக்கும் அவசியம்.
ஆசிரியர்கள் குழந்தைகளை மட்டம் தட்டுவதை நிறுத்தவேண்டும். படிப்பை கண்டால் மாணவர்களுக்கு ஆர்வம் மட்டுமே மேலோங்கி நிற்க வேண்டும்.
தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்று பள்ளிகள் உணர்த்த வேண்டும். கணக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை. அவர்களை அவமானப்படுத்தி அவர்கள் மூளையில் நீங்கள் அமிலத்தை சுரக்கச் செய்யாதீர்கள்.
கணக்கு மட்டுமே வாழ்க்கை, இல்லையேல் இவ்வுலகில் பிழைக்க வாய்ப்பில்லை என்ற அச்சச்சதை அந்த பிஞ்சு மனதில் உருவாக்காதீர்கள்.
சமத்துவத்தை பரப்புவதற்குதானே பள்ளிக்கூடங்கள். சமத்துவம் என்பது சாதி வேறுபாடுகளை ஒழிப்பது மட்டுமல்ல, ஒருவருடைய தனித்தன்மையை குறிப்பதும்தான்.
ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் இயல்புகள் மற்றும் பண்புகளை ஏற்றத் தாழ்வின்றி ஏற்றுக்கொள்ள கல்வி நிலையங்கள் பயிற்றுவிக்க வேண்டுமே தவிர தாழ்வு மனப்பான்மையை வளர்க்கக் கூடாது.
ஊடகங்கள் தற்கொலைகளை வீரதீர செயலாகக் காட்டுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். ஒரு தற்கொலையினால் அந்த குடும்பம் படும் வேதனைகளை இச்சமூகத்திற்கு படம் பிடித்துக்காட்ட வேண்டும்.
தற்கொலையினால் இறந்தவருக்கு வேணுமானால் முடிவு இருக்கலாம். ஆனால் அவர்களின் சுற்றத்தாரும் மனநோய்க்கு ஆளாகி விடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்களின் தற்கொலைகளை வியாபாரத்திற்காக வைரல் – ஆக்குவதை ஊடகங்கள் கைவிட வேண்டும்.
ஏனெனில், பார்வையாளர்களில் பலர், தற்கொலை செய்பவர்களின் வழியே சரி என்று பின்பற்ற நேரலாம்.
உலகம் வாழத் தகுந்த இடம்தான் என்று வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தற்கொலை எல்லாவற்றிற்கும் தீர்வாக முடியாது அல்லவா?
இனியாவது நல்ல ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவோம்!
– எஸ்.பவித்ரா, பேராசிரியர், எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரி.