– லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
பூம்புகார் படத்தை எடுத்து வெளியிட்டால் நிச்சயம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கலைஞரும் நானும் இதுபற்றிப் பேசினோம்.
மேகலா பிக்சர்ஸ் சார்பிலேயே எடுப்பது என்று முடிவு செய்தோம். உடனே கலைஞர் ஏவிஎம் இடம் இருந்த உரிமையைத் திரும்ப வாங்கி வந்தார்.
கலைஞர் அவர்கள் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரப்படி கதையை அமைத்து நான் கோவலனாக நடித்தேன்.
அதில் அவர் மித அற்புதமாக திரைக்கதை வசனங்களை எழுதியிருந்தார்.
பிறகு எனக்கு நிகராக வசனம் பேசி நடிக்கக்கூடிய, என்னுடன் அதிக படங்களில் நடித்து நடிப்புப் பயிற்சி சிறப்பாகப் பெற்றிருந்த விஜயகுமாரியை கண்ணகியாகவும் நடிக்கச் செய்தோம்.
நன்றாக நடனம் ஆடத்தெரிந்த ராஜஸ்ரீயை மாதவியாகப் போட்டோம்.
நாகேஷ், மனோரமா, ஓ.ஏ.கே. தேவர் எல்லாம் பொருத்தமான நடிகர்களையே போட்டோம்.
வியாபார உத்திக்காக என்ன செய்யலாம் என்றபோது கவுந்தியடிகள் பாத்திரம் மிகச் சிறப்பாக இருக்கவேண்டும் என எண்ணினேன்.
அப்பாத்திரத்தில் நடிக்க முன்னாள் கதாநாயகி யு.ஆர்.ஜீவரத்தினம் அவர்களை ஒப்பந்தம் செய்யவிருந்தார் கலைஞர். நான் அவரிடம் கே.பி.சுந்தராம்பாளை கவுந்தியடிகளாக நடிக்க வைத்தால் படம் சிறப்பாக இருக்கும் என்றேன்.
சரிதான். அவர் நடித்தால் சிறப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர்களுக்கு நம்மால் பணம் தர முடியாதே என்றார்.
உடனே நான் கொடுமுடியில் இருந்த கே.பி.எஸ் அவர்களைச் சந்திக்க நானும் கலைஞரும் வருவதாக தகவல் அனுப்பி, பின் எனது பிளைமவுத் காரில் கொடுமுடிக்குச் சென்றோம்.
என் பிள்ளைகள் என்னைப் பார்க்க வருகிறார்கள் என சந்தோஷம் கொண்டு எங்களுக்கு உணவு தயாரித்து காத்திருந்தார். அவரிடம் நேரில் சென்று அக்கதாபாத்திரத்தின் தன்மையையும் எங்களின் பண நெருக்கடியையும் கூறினோம்.
அவர் உடனே ஒத்துழைப்புக் கொடுத்து அப்படத்தின் தரத்தையே உயர்த்தி விட்டார். தன் குரலாலும் தன் கானத்தாலும் தன் நடிப்பாலும் அப்பாத்திரம் மட்டுமல்ல அப்படமே சிறப்பாக அமைந்துவிட அவர் ஒரு காரணமாயிருந்தார் எனலாம்.
அதில் அவர் பாடிய
“வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் வாழ்க்கையிலே
மறக்கவொண்ணா வேதம்”
– என்கிற கலைஞர் அவர்களின் பாடல் வரிகளுக்கு கம்பீரம் சேர்த்தது.
பழைய படக் கதைகளை மறுபடியும் எடுத்து தோல்விகண்டார்கள் அல்லவா? இதனால் பூம்புகார் படத்தையும் விநியோகஸ்தர்கள் வாங்கத் தயங்கினார்கள்.
பிறகு மிகுந்த சிரமப்பட்டு படத்தை வெளியிட்டோம். படம் வெற்றிப்படமாக அமைந்து வசூலைக் குவித்தது.
பிறகு அதே விநியோகஸ்தர்கள் நாங்கள் கேட்ட தொகையைக் கொடுத்து பூம்புகார் படத்தை விலைக்கு வாங்கினார்கள்.
****
நன்றி: சசிகலா தேவி எழுதிய இலட்சிய நடிகரின் இலட்சியப் பயணம் நூலிலிருந்து…