பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.
அதேபோல, மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதால், மசோதா நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.