மார்க் ஆண்டனி – டபுள் கமர்ஷியல் ‘காலப்பயணம்’!

‘வெல்கம் டூ த வேர்ல்ட் ஆஃப் மார்க் ஆண்டனி மாமூ..’ என்று கார்த்தியின் குரலில் ஒலித்தது மார்க் ஆண்டனி ட்ரெய்லர். அது தந்த உற்சாகம் அளப்பரியது.

படத்தில் கதை புதியது அல்ல; ஆனால், கதை சொல்லும் விதம் புதிதாக இருக்குமென்ற நம்பிக்கையை விதைத்தது அந்த ட்ரெய்லர். படமும் அப்படித்தான் இருக்கிறதா?

வேறுமாதிரியான காலப்பயணம்!

சிரஞ்சீவி (செல்வராகவன்) என்றொரு விஞ்ஞானி, கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களோடு பேசும் டெலிபோன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்.

அதனைக் கொண்டு, கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பல சம்பவங்களை மாற்ற முடியும் என்று ‘இறுமாப்பு’ கொள்கிறார். ஆனால், அப்படிப்பட்டவரால் தனது இறப்பைத் தடுக்க முடியவில்லை.

‘டெலிபோன் டைம்மெஷின்’ கண்டுபிடித்த மகிழ்ச்சியில், அவர் ஒரு கிளப்புக்கு செல்கிறார். அங்கு வெளிநாட்டவர் சிலர் அவரைத் தாக்குகின்றனர்.

அதேநேரத்தில், கிளப்பின் உள்ளே ‘கேங்க்ஸ்டர்கள்’ சிலரும் மோதிக் கொள்கின்றனர். அதில் ஆண்டனி (விஷால்) கொல்லப்படுகிறார். அந்த தாக்குதலால் சிரஞ்சீவியும் காயப்படுகிறார்.

மரணத்தில் இருந்து தப்பிக்க, தனது ‘டெலிபோன் டைம்மெஷின்’ மூலம் இரண்டு முறை போன் செய்கிறார். ஆனாலும், அவரால் கடந்த காலத்தை மாற்ற முடியாமல் போகிறது.

25 ஆண்டுகள் கழித்து, ஆண்டனியின் மகன் மார்க் (விஷால்) ஒரு மெக்கானிக் கடையை நடத்தி வருகிறார். அவரை வளர்த்து வருபவர் ஆண்டனியின் நண்பர் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா).

ஜாக்கி ஒரு மாபெரும் கேங்ஸ்டர். அவருக்கு இரண்டு மகன்கள். அவரது மூத்த மகன் மதனுக்கு (அவரும் எஸ்.ஜே.சூர்யா தான்) தந்தையைக் கண்டாலே ஆகாது. ஆனாலும், அவர் மீது பயம் அதிகம்.

மகன்கள் இருந்தபோதும், ஜாக்கிக்கு மார்க் மீதுதான் உயிர். அவர் சாப்பிட்டபிறகே தான் சாப்பிடும் அளவுக்குப் பாசம் காட்டுவார்.

ரம்யா (ரீது வர்மா) என்ற பெண்ணை விரும்புகிறார் மார்க். தனது தாய் தந்தை பற்றிய தகவல் ஏதும் தெரிவிக்காமல், அவரது பெற்றோரைச் சந்தித்துப் பேசுகிறார்.

இந்த நிலையில், ஏகாம்பரம் (சுனில்) என்ற ரவுடியைப் பல ஆண்டுகள் கழித்து கையும் களவுமாகப் பிடிக்கிறார் ஜாக்கி. ‘ஆண்டனியைக் கொன்னது இவன் தான்’ என்று சொல்லி, மார்க் கையில் அவர் கத்தியைக் கொடுக்கிறார்.

ஏகாம்பரத்தைக் கொல்ல மறுக்கும் மார்க், ‘தனது தந்தை ஒரு கெட்டவன்’ என்கிறார். இந்த சம்பவத்தை நேரில் பார்க்கின்றனர் ரம்யாவின் பெற்றோர்.

அடுத்தநாளே, மார்க்கின் மெக்கானிக் ஷாப்புக்கு நேரில் வந்து, ‘போதும்பா’ என்று ஒரு கும்பிடு போடுகின்றனர்.

அதன்பிறகு, காதல் சோகத்தில் சிக்கித் தவிக்கிறார் மார்க். அப்போது, விபத்தில் இறந்துபோன ரம்யாவின் மாமா காரை தனது கேரேஜில் பார்க்கிறார். அதில் ஒரு பெட்டி இருக்கிறது. அதனுள், அதே ‘டெலிபோன் டைம்மெஷின்’ கிடக்கிறது.

அப்புறமென்ன? அதனை எடுத்து ரம்யாவின் வீட்டுக்கு ‘போன்’ செய்கிறார் மார்க். ’உங்க பொண்ணை எவ்ளோ லவ் பண்றேன்னு தெரியுமா ஆண்ட்டி’ என்கிறார்.

எதிர்முனையில் பேசும் ரம்யாவின் தாயோ, ‘என் பொண்ணு ஃபோர்த் ஸ்டாண்டர்டு படிக்கிறாப்பா’ என்று ’ரௌத்திரம்’ ஆகிறார்.

அப்போதுதான், அந்த போன் எப்படிப்பட்டது என்று அறிகிறார் மார்க். அப்புறமென்ன, தனது கடந்த காலத்தை மாற்ற முடியுமா என்று யோசிக்கிறார்.

அந்த காலப்பயணத்தில் தந்தை ஆண்டனி மிக நல்லவர் என்று தெரிய வருகிறது. கூடவே, அவரைக் கொலை செய்தது யார் என்பதும் புரிகிறது. அதன்பிறகு மார்க் வாழ்க்கை எப்படி மாறியது என்பதுதான் ‘மார்க் ஆண்டனி’ படக் கதை.

‘டைம் மெஷின்’ கதை என்றதும், அது குறித்த லாஜிக் விளக்கங்கள் இருக்குமென்று யோசிக்கத் தேவையில்லை. இதில், அந்த ஏரியா பக்கமே இயக்குனர் கால் வைக்கவில்லை.

அதேநேரத்தில், முழுப்படமும் மிகச்சில கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டே நகர்கிறது என்பதையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், இது வேறுமாதிரியான ஒரு காலப்பயணம்.

நடிப்பு அரக்கன்!

மேலோட்டமாகப் பார்த்தால், இது மார்க் மற்றும் ஆண்டனியாக நடிக்கும் விஷாலின் படமாகத் தெரியலாம். ஆனால், அவரைவிட ஒருபடி அதிகமாகவே திரையில் ‘தகதிமிதா’ ஆடியிருக்கிறார் ஜாக்கி மற்றும் மதனாக வரும் எஸ்.ஜே.சூர்யா.

அதிலும், இடைவேளைக்குப்பிறகு மொத்தக் கதையும் அவரது பாத்திரங்களைச் சுற்றியே நகர்கிறது. அதற்கு தியேட்டரில் கிடைக்கும் வரவேற்பே, அவர் ‘நடிப்பு அரக்கன்’ தான் என்பதைச் சொல்லிவிடுகிறது.

விஷாலுக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது ‘மார்க் ஆண்டனி’. படம் முழுக்க, ‘என்னப்பா எஸ்.ஜே.சூர்யாவுக்கு சமமா நடிக்க மாட்டேங்கிறாரே’ என்று யோசிக்க வைத்திருக்கிறார்.

அதனை மறக்கடிக்கும் விதமாக, கிளைமேக்ஸில் கழுத்தை இடம் வலமாக ஆட்டிக்கொண்டு முதிய தோற்றத்தில் அவர் அறிமுகமாகும் காட்சி அபாரம். ’அவன் இவன்’ படத்தில் விஷால் போட்ட ஆட்டத்தை, அந்த ஒரு காட்சி ‘ஓவர்டேக்’ செய்துவிடுகிறது.

ரீது வர்மாவுக்கு இதில் நான்கைந்து காட்சிகள் இருந்தால் அதிகம். ஆனால், அவரும் படத்தில் இருக்கிறார்.

அபிநயா, மீரா கிருஷ்ணன், அனிதா சம்பத் ஆகியோரும் இந்த படத்தில் உண்டு. அவர்களில் நடிகை சில்க் ஆக வரும் விஷ்ணுபிரியாவைத் திரையில் பார்த்தவுடன் தியேட்டரே அல்லோகலப்படுகிறது.

எண்பதுகளில் தமிழ் திரையுலகில் வலம் வந்த ஒய்.ஜி.மகேந்திரா, நிழல்கள் ரவியும் இதில் நடித்துள்ளனர்.

இந்தக் கதையில் செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனிலுக்கு குறிப்பிட்ட அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கிங்ஸ்லியின் காமெடிக்கும் சிறிய அளவில் இடம் உண்டு.

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு, கேங்க்ஸ்டர் உலகை மையப்படுத்திய ஒரு காலப்பயணத்துக்குள் நுழைய எளிதாக வகை செய்கிறது. இந்த வகைமையில் ஒரு ‘ட்ரெண்ட் செட்டர்’ ஆகவே அவர் மாறியிருக்கிறார்.

ஆர்.கே.விஜய்முருகனின் கலை வடிவமைப்பும் சத்யா என்.ஜே.வின் ஆடை வடிவமைப்பும், அப்படியே எண்பதுகளைச் சார்ந்த தென்னிந்திய திரைப்படங்களை மீண்டும் ஒருமுறை பார்த்தது போலிருக்கிறது.

அதிலும், அந்த ‘டைம்மெஷின் டெலிபோன்’ வடிவமைப்பில் விஜய்முருகன் அசத்தியிருக்கிறார்.

விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு, சிக்கலான திரைக்கதையை எந்தவித ‘ட்ரான்சிஸன் எபெக்ட்’களும் இல்லாமல் இயல்பாகச் சொல்ல முயன்றிருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு படம் இன்னொரு லெலலுக்கு போவதில் அவரது பங்கு கணிசம்.

ஒப்பனை, நடனம், சண்டைப்பயிற்சி, ஒலிப்பதிவு உட்படப் பல தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்றியவர்கள், கதையை ரொம்பவே ரசித்து தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர். அவர்களில் மிகமுக்கியமானவர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.

படத்தில் அவர் தந்திருக்கும் ‘அதிருதா’, ‘ஐ லவ் யூடி’, ’கருப்பண்ணசாமி’ பாடல்கள் நம்மை ஈர்க்கின்றன. ஆனால், அவை மீண்டும் மீண்டும் கேட்கும் ரகமாக அமையவில்லை.

அந்தக் குறையை ஜிவியின் பின்னணி இசை போக்கிவிடுகிறது. முதல் பாதியைக் கண்டு ரசிகர்கள் ‘கூஸ்பம்ஸ்’ ஆக அதுவே உதவியிருக்கிறது.

இந்த படத்தில் ‘அடியே மனம் நில்லுன்னா’ மற்றும் ‘பஞ்சுமிட்டாய் சீலை கட்டி’ பாடல்கள் மீண்டும் ஒலிக்கின்றன. திரைக்கதையில் அவை இடம்பெற்றிருக்கும் விதம், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஒரு ‘ஆஹா’ போட வைக்கிறது.

மீண்டும் ஆதிக்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் இரண்டு படங்கள் வரவேற்பையும் எதிர்மறை விமர்சனங்களையும் ஒருசேரக் கண்டவை.

‘பஹீரா’வில் நல்ல முயற்சியை வெளிப்படுத்தியிருந்தாலும், அது வெற்றிக்கோட்டைத் தொடவில்லை. அதன் தொடர்ச்சியாக, தனது படங்கள் எப்படிப்பட்டவை என்ற அடையாளத்தை ‘மார்க் ஆண்டனி’யில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஆதிக்.

தியேட்டரில் ரசிகர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்த வேண்டும்; முதல்முறை பார்ப்பவர்கள் ‘அடுத்தது என்ன நடக்கும்’ என்று நகம் கடிக்க வேண்டும்; முக்கியமாக, பிரதான பாத்திரங்களில் நடித்தவர்களின் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்க வேண்டும் என்பது போன்று முழுக்க ரசிகர்களின் ரெஸ்பான்ஸை மனதில் கொண்டு படம் இயக்குபவர்களில் தனக்கென்று தனியிடம் படைக்க முயன்றிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

அவரது திரைக்கதை ட்ரீட்மெண்ட் கொஞ்சம் பிசகினாலும், ‘மொக்கை’ என்று புறக்கணிக்கப்படும் தன்மை கொண்டது. அது தெரிந்தும், துணிந்து ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறார்.

தான் சொல்ல வந்த கதையில் நேர்த்தியை வாரியிறைத்திருக்கிறார். அந்த உழைப்பையும் சமநிலையையும் இனி வரும் படங்களிலும் ஆதிக் தொடர வேண்டும்.

இந்தக் கதையில் லாஜிக் மீறல்கள் சார்ந்த பல கேள்விகள் நிச்சயம் எழும். அவற்றைப் புறந்தள்ளினால் மட்டுமே, இப்படத்தை ரசிக்க முடியும். அதையும் மீறி, இயக்குனர் திரையில் வகுத்த விதிகளைக் கதையில் அவரே புறக்கணித்த இடமொன்று உண்டு.

அது. இக்கதையில் ரெடின் கிங்ஸ்லிக்கும் தனி ‘எபிசோடு’ அமைக்கத் தவறியது. ஆனால், தியேட்டரில் அமர்ந்திருக்கும்போது அது உங்கள் மூளையைச் சுரண்டாது. அதுவே ‘மார்க் ஆண்டனி’யின் வெற்றி.

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா பாத்திரங்களின் வாழ்வைப் புரட்டிப் போடும் சம்பவங்களின் தொகுப்பாக ‘மார்க் ஆண்டனி’ இருக்குமென்று சொன்னது அதன் ட்ரெய்லர். படமும் அப்படியே அமைந்திருக்கிறது.

ஆங்காங்கே கொஞ்சம் வேகம் மட்டுப்பட்டாலும், கிளைமேக்ஸ் வரை போரடிக்காமல் நகர்கிறது திரைக்கதை. அந்த வகையில், ஒரு கமர்ஷியல் 2 ‘காலப்பயணம்’ ஆக உள்ளது இந்த ‘மார்க் ஆண்டனி’!

– உதய் பாடகலிங்கம்

You might also like