சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோ பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரில், டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு சுமார் 5000 பேர் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி பயன்பாட்டிற்குத் தேவையான நீர் அனைத்தும் இங்குள்ள கிணற்றின் மூலமே பெறப்பட்டு வருகிறது.
இந்த இடத்தின் சிறு பகுதியில் அத்துமீறி, சட்ட விரோதமாக, மாநகராட்சியின் எந்தவித அனுமதியுமின்றி வர்த்தக ரீதியிலான ஓர் மாட்டுப் பண்ணை இயங்கி வருகிறது.
இந்த மாட்டுப் பண்ணையில் மாநகராட்சி விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. இதில், ஓலையிலான கூரைக் கொட்டகையில் மாடுகள் கட்டப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் கூரை வேய்ந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, நகர எல்லைக்குள் ஓலைக் கொட்டகையைப் பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்தது. ஆனால் அதையும் மீறி இங்கு ஓலைக் கொட்டகையில் மாட்டுப்பண்ணை இயங்கி வருகிறது.
இந்த மாட்டுப்பண்ணையில் முறையான கழிவுநீர் வெளியேற்றும் வசதி கிடையாது.
இதுவரை சட்டத்திற்குப் புறம்பாக அடையாறு ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றி வந்துள்ளனர்.
கடந்த 30.08.2023 அன்று காலை கல்லூரி துவங்கியதும் மாணவிகள் தண்ணீரைப் பயன்படுத்தும்போது, தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக புகார் செய்தனர்.
கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது, மாட்டுப் பண்ணையில் உள்ள நபர்கள் வேண்டுமென்றே கழிவுநீரை மாணவிகள் பயன்படுத்தும் கிணற்றில் கலக்கச் செய்தது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் அடையாறு ஆற்றின் உள்ளே கழிவுநீரை வெளியேற்றுவதற்கு சட்டவிரோதமாக குழாய் இணைப்பை ஏற்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சமூகவிரோத செயலில் ஈடுபடும் விஷமிகள் மீதும் அவர்களைத் தூண்டும் மாட்டுப்பண்ணை நடத்தும் நபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும் மண்டல அலுவலகத்திலும், பட்டினம்பாக்கம் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் அடிக்கடி குறுக்கிடும் மாடுகளின் தொந்தரவுகளும், குழந்தைகள் உள்ளிட்டோரை மாடுகள் தாக்குவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு, மாணவிகளின் ஆரோக்கியத்தோடு விளையாடும் மாட்டுப்பண்ணை நடத்தும் நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவிகளும், கல்லூரி நிர்வாகமும் கோரிக்கை விடுத்துள்ளது.