மைக் அல்லது காமிராவுக்கு முன்னால் சென்றால் நம்மில் பலர் தனிச் சாமியாட்டமே ஆடத்தொடங்கி விடுகிறார்கள். தனி வீறாப்பு வந்து விடுகிறது. வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வரம்பு மீறுகின்றன.
சமீபத்தில் ஒரு மதம் சார்ந்த மூத்த பெரியவர் ஒரு கூட்டத்தில் அம்பேத்கர் பற்றியும், திருவள்ளுவரைப் பற்றியும் பேசிய பேச்சுகள் அநாகரீகத்தின் உச்சம்.
கன்னாபின்னாவென்று கொச்சையான தாக்குதல்கள் நிறைந்த அந்த பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து அதைப் பேசிய பெரியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைது செய்யப்படும் போது தான் அவருக்கு மிகச் சரியாகத் தன்னுடைய முதுமையும், தனக்கிருக்கும் நோய்களின் பட்டியலும் நினைவுக்கு வருகின்றன.
ஏன் இந்த நினைவு பொதுவெளியில் பேசுவதற்கு முன் வரவில்லை?
இன்னொரு அரசியல் புள்ளி முன்பு நீதிமன்றத்தைப் பற்றிக் கடுமையாகப் பேசியவர் அண்மையில் ஊடவியலாளர்களைப் பார்த்துக் குறிப்பிட்ட கட்சி அலுவலகத்திற்கு முன்னால் பிச்சை எடுக்கிறீர்களா?- என்று கோபத்துடன் எகிற அதையும் ஊடகங்கள் ‘பொறுப்பாக’ ஒளிபரப்புகின்றன.
ஏன் இத்தகைய வன்மத்தை காமிராவுக்கு முன்பு ஆதாரப்பூர்வமாக வீசி எறிகிறார்கள்? இப்படிப் பேசி விட்டு வழக்கு வந்தால், நீதிமன்றத்தில் எப்படி அவர்களால் மறுக்க முடியும் அல்லது வேறு அர்த்தம் கற்பிக்க முடியும்?
தீப்பொறியைப் பற்ற வைத்துவிட்டு, உலர்ந்த மன்னிப்பால் அதை அணைத்துவிட முடியுமா?
சனாதனம் என்ற சொல்லை அவ்வப்போது ஆளுநர் ரவி தவறாமல் உச்சரித்து வந்தாலும், அமைச்சர் உதயநிதி உச்சரித்த பிறகு அது பெரும் சர்ச்சையைக் கிளப்பி பிரதமர், உள்துறை அமைச்சர் முதற்கொண்டு அதற்குப் பதில் அளிக்கிறார்கள்.
ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்குப் பகிரங்கமாக விலையை நிர்ணயிக்க, இன்னொரு ஒன்றிய அமைச்சரோ “நாக்கை வெட்டுவேன், கண்ணைத் தோண்டுவேன்” என்று ‘மாண்புமிகு’ வார்த்தைகளை உதிர்க்கிறார்.
ஏற்கனவே அண்மையில் மணிப்பூரில் நாம் பார்த்துவரும் கொடுமைகள் போதாதா?
கருத்துச் சுதந்திரம் என்கிற கருத்தாக்கத்தையும், பிறரைச் சகட்டு மேனிக்குத் தாக்குவதையே சுதந்திரம் என்கிற நோய்க்கூறான கருத்தாக்கத்தையும் இணைத்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
தொலைக்காட்சி சேனல்களில் நடக்கும் விவாதங்களில் சிலர் பேசும் பேச்சுகளும் களேபரத்தை ஏற்படுத்துகின்றன.
சிலர் பேசும் பேச்சுகள் அவ்வளவு தூரத்திற்குத் தரக்குறைவாகவும், நாகரீகமற்றும் இருக்கின்றன. பார்க்கிற பார்வையாளருக்குப் பிரஷரை ஏற்றுகின்றன. மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.
இப்படியே தரமற்ற பேச்சாளர்களை வரவழைத்து, தரமற்ற பேச்சுக்களைத் தொடர்ந்து அனுமதிக்கும் சேனல்கள் நாளைக்கு ‘ட்ராய்’ நிறுவனத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும் ஆபத்தும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
தமிழில் உள்ள வெவ்வெறு சேனல்களில் நடக்கும் எந்த விவாதங்களுக்கும் வாடிக்கையாக அழைக்கப்படும் பேச்சாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அறுபதுக்குள் தான் இருக்கும்.
இவர்களின் பேச்சுத் தராதரத்தை அந்தந்த சேனல்கள் அனுபவத்தில் உணர்ந்து அழைக்கலாம் அல்லது அழைப்பதைத் தவிர்க்கலாம். இல்லை என்றால் சிக்கல்கள் சேனல்களுக்குத் தான்.
பேசிய வார்த்தைகளுக்குப் பேசியவர்களும், அதை வெளியிட்டவர்களும் பொறுப்பேற்றாக வேண்டும். பேச்சின் எல்லை எதுவரை என்பதை உணர வேண்டும்.
எந்த அரசியல், ஆட்சி, மதம், சாதி பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, பொதுவெளிக்கு வந்துவிட்டால் வள்ளுவன் சொன்ன மாதிரி ‘நா காக்க வேண்டும், இல்லை என்றால் அதே சொல்லால் இழுக்குப் படுவீர்கள்.’
– யூகி