எழுத்தாளர் இந்திரன்
எனக்கு 24 வயது இருக்கும்போது ஜெயகாந்தனை அவரது மடத்தில் நான் சந்தித்து இருக்கிறேன்.
நான் நடத்திய ‘வெளிச்சம்’ இதழுக்கு நேர்காணல் செய்வதற்காக முதல்முதலாகச் சென்றேன். அப்போது அவர் ஒரு லுங்கியில் வெற்றுடம்போடு தரையில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தார்.
நண்பர்கள் தரையில் அவரைச் சுற்றி அமர்ந்தபடி சிலுப்பி அடித்துக் கொண்டே உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள்.
தேவபாரதி, புலவர் த.கோவேந்தன் போன்றவர்கள் என்னை விட மூத்தவர்கள் என்றாலும் என் நண்பர்கள். 1991-லிருந்து 1996 வரை இருந்த மடம் பிறந்த கதையை ஒருமுறை தேவபாரதி என்னிடம் சொன்னார்:
1961-ல் தேவபாரதியும் டைரக்டர் விஜயனும் சேர்ந்து “இனி ஒரு ஜென்மம் தரு” எனும் மலையாள படம் எடுப்பதற்கான ஆபீசாக ஆழ்வார்பேட்டையில் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் அரச மர நிழலில் ஒரு மாடியை வாடகை எடுத்தனர்.
பெரிய ஹால் ஒரு அறை. ஒரு சமையற்கட்டு, பால்கனி. காற்றும் வெளிச்சமுமான இடம்.
ஒருமுறை ஜே.கேவை என் ஆபீசுக்கு வாங்களேன் என்றார் தேவபாரதி. ஜே.கே மறுநாள் 11 மணிக்கெல்லாம் ஆஜர். அந்த வீட்டுக்கு 3 சாவிகள். அதில் ஒன்று ஜே.கேவுக்குக் கொடுக்கப்பட்டது. ஜே.கேயின் நண்பர்கள் கூடத் தொடங்கினார்கள்.
1996-ல் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் காலி செய்யச் சொன்னதுவரை மடம் ஜேஜே என்று களைகட்டியது.
ஜே.கேவின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவனாக நான் இல்லை என்றாலும் ஜே.கேவின் கம்பீர இலக்கிய வாழ்க்கையை நேரில் பார்த்து ரசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்து இருக்கிறது.
முழுநேர எழுத்தாளராக வாழ்ந்து முழு வெற்றி அடைந்தவர் ஜெயகாந்தன் மட்டும்தான். இன்றைக்கும் வருஷத்துக்கு 1.5 லட்சம் ரூபாய் ராயல்ட்டி வருகிறது.
தனது வெளியீட்டாளர்கள் குறித்து அவர் “கணக்கு உண்டு. வழக்கு இல்லை” என்று சொல்லி வாழ்ந்தவர். கடைசிவரை ஒரு முழு நேர எழுத்தாளனாக வாழ்ந்து வெற்றி கண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன்.