தமிழ் எழுத்தாளனாக இருப்பது அவமானம்!

– எழுத்தாளர் சு. வேணுகோபாலன்

“எழுத்தாளனுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து இருப்பதாக என் இளம் வயதில் நம்பியதால்தான் எழுத்துத்துறை மீது பெரும்காதல் கொண்டேன். அது பொய் என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன்.

இவர் நல்ல நாவல் ஒன்றை தந்திருக்கிறார் என்று என்னை மற்றவர்களிடம் மூத்தவர்கள் அறிமுகம் செய்யும்போது அவர், அப்படியா என்று கேட்டதற்காக முணுமுணுத்துக்கொண்டு கடந்து போயுள்ளனர்.

இவர் நாவல் எழுதி முதல் பரிசு பெற்று அமெரிக்காவிற்குச் சென்று வந்துள்ளார் என்று அறிமுகப்படுத்தும் தருணங்களில் ஓடிவந்து கையைக் குலுக்கியுள்ளனர்.

அமெரிக்கா சென்றதைத்தான் அந்தஸ்தாக நினைக்கிறார்கள். என் நாவலின் இலக்கிய பெருமதிக்காக அல்ல என்பதை சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டேன்.

அதிக வாசகர்களைச் சென்று சேரும் வெகுஜன இதழ்களில் எழுதுவதால் எழுத்தாளனுக்கு ஒரு அந்தஸ்த்து வரவே செய்கிறது.

எழுத்தின் வழியாக பணம் சம்பாதிக்க முடிகிற எழுத்தாளனுக்கு ஒரு அந்தஸ்த்தை மக்கள் தருகிறார்கள்.

உண்மையில் தமிழ் எழுத்தாளனாக இருப்பது ஒரு அவமானம். சீரழிந்த தமிழ்ச் சமூகத்தில் அவனுக்கு எந்த மதிப்பும் கிடையாது. தனக்கு ஒரு அந்தஸ்த்து இருப்பதாக நம்புவதும் பேதமை.

விதி கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் தமிழ் எழுத்தாளனாக பிறப்பது மட்டும் ஒரு துரதிஸ்டம்தான். பின் ஏன் அவர் தொடர்ந்து எழுத்தாளனாக இயங்க வேண்டும்?

கலைஞன் சக மனிதர்களைக் காட்டிலும் எந்தவிதத்திலும் உயர்ந்தவன் கிடையாது.

அப்படி நினைத்தாலே மிகச்சிறந்த கதைகளை எழுத முடியாது.

எழுத்தாளனைவிட எல்லாவிதத்திலும் உயர்ந்த மனிதர்களை அறிந்தபடியேதான் இருக்கிறான்.

மோசமான எழுத்தாளன் மிகச்சிறந்த படைப்பை தந்துவிடமுடியும். எனவே அவனைவிட அவனது படைப்பு மேலானதாக இருக்கிறது.

அந்தஸ்து என்பதை சமூகம் தருகிறது. ஒரு எழுத்தாளனின் இடையறாத எழுத்து பங்களிப்பிற்காக சமூகம் கொண்டாடுகிறது. புதுமைப்பித்தன் வறுமையில் ரத்தம் கக்கித்தானே செத்தான்.

பாரதி ஒரு வாய் சோற்றுக்கு அலைந்து திரிந்துதானே வீழ்ந்தான். எழுத்தாளனுக்கு அவன் வாழ்கிற காலத்தில் சிறிதளவு நன்மதிப்பு அங்காங்கு கிடைத்திருக்கலாம்.

கூடைபின்னுபவன் கலைநேர்த்தியோடு முடைந்து தரத்தான் செய்கிறான். கட்டிலுக்குக் கயிறு போடுகிறவன் விண்ணென அதிரும்படி பின்னலிலே தன் கைவண்ணத்தை கொட்டிவைத்து விடுகிறான்.

எழுத்தாளனும் தன் படைப்புகள் வழி இதுபோன்ற ஒரு செயலைத்தான் செய்கிறான்.

ஆனால், சாதாரண மனிதனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு எழுத்தாளனுக்கு பொறுப்பிருப்பதாகக் கருதுகிறேன்.

தன் எழுத்தின் வழி இந்த சமூகத்தை அறவழியில் ஆற்றுபடுத்தியபடியே இருக்கிறான்.

தஸ்தாவேஸ்கி செய்ததை, டால்ஸ்டாய் செய்ததை, ப.சிங்காரம் செய்ததை, இளங்கோ செய்ததை, செல்மா லேகர்லெவ் செய்ததை, புதுமைப்பித்தன் செய்ததை, கம்பன் செய்ததை – போல நானும் ஒன்றை செய்துவிட்டுப் போகிறேன்.

இது அந்தஸ்து கிடையாது. பிறந்ததன் பயன். என்ன பிக்கல் பிடுங்கல்களுக்கு ஆளானாலும் விவசாயி பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதுபோல ஒரு செயல்பாடு. அவனுக்கு வேறு செய்யத்தெரியாது.

இந்தக் காரியத்திற்காக இளங்கோவடிகளை இந்தச் சமூகம் கொண்டாடுகிறது. எனவே நான் காரியமாற்ற மட்டுமே வந்திருக்கிறேன். இகழ்ந்தாலும் இதை செய்ய வேண்டுமென்பதே என் அவா. “

சு.வேணுகோபாலன்
நன்றி: வல்லினம்

You might also like