கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே ரஜினி, கமல் படங்களை முறியடித்து விஜயும், அஜித்தும் வெற்றிகளைக் குவித்து வந்தனர்.
விஜயின் மாஸ்டரும் அஜித்தின் வலிமையும் பெரிய அளவில் ஜெயித்தன. இதனால், இரண்டு சீனியர் நடிகர்களையும் ஓரம் கட்டி, ஜுனியர்கள் இருவரும் ஊதிய விதத்தில் முன்னேறினர். நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தனர்.
கடைசியாக துணிவு படம் கொடுத்த அஜித், அரிதாரம் பூசி ஓராண்டு கடந்து போன நிலையில், விஜய் அடுத்த கட்டத்துக்கு நகர ஆரம்பித்தார். அதாவது – அரசியல்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக வென்ற மாணவ – மாணவிகளை சென்னைக்கு அழைத்து பரிசளித்த விஜய், இப்போது வாராவாரம், தனது விஜய் இயக்கத் தோழர்களோடு உறவாடுகிறார்.
அண்மையில் இயக்கத்தின் பெண் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில் பெண் ரசிகை ஒருவர் ‘விஜய் சாரை நேரில் பார்க்க வேண்டும்’ என தனது ஆசையை வெளிப்படுத்த, இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதறிப்போனார்.
“இனிமேல் யாரும் விஜயை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. தலைவர் என்றே கூப்பிட வேண்டும்” என ஆணையிட்டார். ஆக, இளையத் தளபதி, அரசியலுக்குள் நுழைந்து ‘தலைவர்’ ஆவது உறுதியாகி விட்டது.
கமலின் விசுவரூபம்
ரஜினியும், கமலும் என்ன செய்யப் போகிறார்கள்? என அவர்கள் ரசிகர்கள் கவலைப்பட்ட நேரத்தில் விக்ரம்-2 மூலம் விசுவரூபம் எடுத்தார், கமல்.
‘மாஸ்டர்’ சினிமா மூலம் விஜயை அடுத்த உயரத்துக்கு கொண்டு சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜை அணுகினார் கமல்.
தனக்கு ஒரு படம் டைரக்ட் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். கமலே அந்த படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.
’விக்ரம்-2’ என பெயரிடப்பட்ட அந்தப்படம் கமலின் சினிமா வாழ்க்கையில், நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு மைல் கல்லாக அமைந்தது.
அவருக்கான பங்காக மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் கிடைத்தது.
விக்ரம்-2 வெற்றியால், பிரமாண்ட படங்கள் கமலைத் தேடி வர ஆரம்பித்துள்ளன.
ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடந்த ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து முடித்து விட்டார்.
5 மணி நேரம் ஓடும் வகையில் மொத்த காட்சிகள் உள்ள நிலையில் கமல் மேற்பார்வையில், அந்தப் படம் எடிட் செய்யப்பட்டு, 3 மணி நேரமாக குறைக்கப்பட்டு வருகிறது.
கிராபிக்ஸ் வேலைகள் முடிந்ததும், படம் வெளியீட்டுக்கு தயாராகி விடும். புதிதாக அவர், பிரபாஸ், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கும் கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் படப்பிடிப்பு நிறைவுற்றதும், தனது சொந்த தயாரிப்பில் எச்.வினோத் டைரக்ஷனில் கமல் நடிக்கப்போகிறார்.
பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவும் கால்ஷீட் அளித்துள்ளார் கமல். படப்பிடிப்பு எப்போது என தெரியவில்லை.
இது தவிர பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் படங்களும் கமலுக்காக காத்திருக்கின்றன.
ரஜினியிடமும் 3 படங்கள்
சில ஆண்டுகளாக சுமார் ரகப் படங்களை தந்த ரஜினிகாந்துக்கு ‘அண்ணாத்த’ படம் பெரும் தோல்வியாக அமைந்தது. இதனால் அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க சூழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த சூழலில் தான், அண்மையில் ஜெயிலர் எனும் சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்தார் ரஜினி.
‘அண்ணாத்த’ படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர் படத்தையும் தயாரித்தது. இதுவரை, அந்த படம் 650 கோடி ரூபாய் வசூலித்து ரிகார்ட் பிரேக் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ எனும் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றியால் ‘லால் சலாம்’ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
லால் சலாம் முடிந்துள்ள நிலையில் ரஜினி, லைகா நிறுவனத்துக்கு தேதிகள் அளித்துள்ளர். இது, அவரது 170- வது படம்.
ஜெய்பீம் படம் கொடுத்த தா.செ.ஞானவேல், இந்த படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
இது ரஜினிகாந்தின் 171 -வது படம். ஜெயிலர் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனமே இதனைத் தயாரிக்க உள்ளது.
உச்ச நடிகர்களின் முதல் தேர்வாக இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதனை டைரக்ட் செய்கிறார்.
தற்காலிகமாக ‘தலைவர் 171’ என படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அனிருத் இசை அமைக்கிறார். ஸ்டண்ட் காட்சிகள் – கேஜிஎஃப் புகழ் அன்பறிவு.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமே ரஜினிகாந்த் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வருகிறது.
லோகேஷ் கனகராஜை, தனது வீட்டுக்கு நேரில் அழைத்து இது குறித்து ரஜினிகாந்த் பேசியதாக இயக்குநர் மிஷ்கின் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
“சினிமாவுக்கு குட்பை சொல்லப் போகிறேன். உங்கள் இயக்கத்தில் கடைசி படம் செய்ய விரும்புகிறேன்” என ரஜினி சொன்னதாகவும், அதனை ஏற்று ரஜினியை இயக்க லோகேஷ் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்.
ஆனால் ரஜினி தரப்பில் இது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் -2 ஆகிய ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்த லோகேஷ், இப்போது ‘லியோ’ படத்தின் இறுதிக் கட்டப்பணிகளில் பிஸியாக இருக்கிறார்.
இதனை முடித்து விட்டு, ரஜினி படத்துக்கான வேலைகளை தொடங்க உள்ளார்.
‘தலைவர் 171’ – முழுக்க முழுக்க, லோகேஷ் பாணியிலான ஆக்ஷன் படமாக இருக்குமாம்.
– பி.எம்.எம்.