வறுமையையும், முதுமையையும் பொருட்படுத்தாமல் 2 ரூபாய்க்கு சுடச்சுட இட்லி கொடுத்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த தனம் பாட்டி.
யார் இந்த தனம் பாட்டி, இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்க காரணம் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர், 85 வயதான மூதாட்டி தனம் என்கிற தனலட்சுமி. இவரது கணவர் சண்முகம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், அவர்கள் திருமணம் முடித்து வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
தற்போது தனிமையில் வசித்து வரும் தனம் பாட்டி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கணவர் நடத்தி வந்த இட்லி கடையை எடுத்து நடத்தி வருகிறார்.
தனம் பாட்டியின் கைப்பக்குவத்தில் சுடச்சுட தயாராகும் இட்லிகளை சுவைக்க அவரது குடிசைக்குள் குனிந்தவாறு செல்ல வேண்டும்.
நாற்காலி, மேசை வசதிகள் எதுவும் இல்லாமல் எளிமையாக காணப்படும் பாட்டியின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சுடச்சுட இட்லியை சுவைப்பதே தனி சுகம் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
விலைவாசி உயர்வால் பத்து ரூபாக்கும் அதிகமாக ஒரு இட்லி விற்பனை செய்யப்படும் இந்த காலத்தில், இரண்டு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் மூதாட்டிக்கு வாடிக்கையாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
கூலி வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தான் தனம் பாட்டியின் முக்கிய வாடிக்கையாளர்கள்.
தரமான இட்லியை 2 ரூபாய்க்கு கொடுக்கும் தனம் பாட்டி, இட்லியின் சுவையால் மட்டுமின்றி தனது அன்பான உபசரிப்பாலும், அக்கறையான பேச்சாளும் வாடிக்கையாளர்களை நெகிழச் செய்கிறார்.
கிடைப்பது குறைந்த வருவாய் என்றாலும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் தினமும் வந்து வயிறார சாப்பிட்டுச் செல்வது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் தனம் பாட்டி.
தான் வாழும் குடிசை மழைக் காலங்களில் வசிக்க முடியாத இடமாக உள்ளதாகவும் தனக்கு ஒரு வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக கை கால்கள் தடுமாறினாலும், எண்ணத்திலும் செயலிலும் தடுமாறாமல் தினமும் உழைத்து பலரின் பசியை போக்கும் தனம் பாட்டியின் அர்ப்பணிப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதில் ஐயமில்லை.
– தேஜேஷ்