– தினமும் திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடக்கம்
கோவை மத்திய ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் குற்றங்களுக்கு தகுந்தவாறு வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் நல்லெண்ணத்தை அதிகரிக்கும் வகையிலும், திருந்தும் வகையிலும் கல்விக்கூடம் மூலம் கற்பித்தல், நூலகம் மூலம் வாசிப்புத்திறனை மேம்படுத்துதல், யோகா பயிற்சி, உடற்பயிற்சிகள் அளித்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியான ஜெயில் வளாகத்தில் திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் அறிவுரையின் பேரில் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், “கோவை மத்திய சிறையில் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் தினமும் காலை 7 மணிக்கு ஏதாவது ஒரு கைதியின் மூலம் ஒலிபெருக்கியில் ஒரு திருக்குறள் வாசிக்கப்படும். தொடர்ந்து குறளின் பொருளும் வாசிக்கப்படும்.
அதைத்தொடர்ந்து அறிஞர்களின் சிந்தனைத்துளிகள், அன்றைய தினத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் ஆகியவை தினமும் வாசிக்கப்படுகிறது.
சிறைத்துறை நிர்வாகத்தினர் மூலம் இவை தயார் செய்து கைதியிடம் அளிக்கப்படும். அவர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மைக்கை பயன்படுத்தி வாசிப்பார். அனைத்து பிளாக்குகளிலும் ஒலிபெருக்கி உள்ளது.
இதன் மூலம் சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் திருக்குறள், அதன் பொருள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் உள்ளிட்டவற்றை கேட்டு அறிந்து கொள்வர்.
இந்த மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறும்போது சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளை நல்வழிப்படுத்திட இந்த குறள் கூறும் பொருள் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.