இந்தியாவா? பாரத்தா? ஏன் இந்தச் சர்ச்சை?

தாய் – தலையங்கம்

நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்காமல், அவருடைய பெயரை மாற்றினால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

அதைப் போலத்தான் இருக்கிறது நம் நாட்டின் நிலைமையும்.

பொருளாதார அளவில் பின்தங்கிக் கொண்டிருக்கிறோம். ஏராளமான கடன்களை ஒன்றிய அரசும் வாங்கியிருக்கிறது. மாநில அரசுகளும் வாங்கியிருக்கின்றன.

பண மதிப்பிழப்பில் தொடங்கி ஜி.எஸ்.டி. வரை வேலையின்மையும், தொழில் நசிவும் பலரது வாழ்வைப் பின்னுக்குத் தள்ளியிருக்கின்றன. பட்ஜெட்கள் பெரும்பான்மை மக்களைப் பொருத்தவரை வெறும் புள்ளிவிபரக் கணக்கு மட்டுமே.

இந்தியா எங்கும் வேறுவழியற்ற நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் தாண்டிச் செல்கிறவர்கள் அதிகரித்துக் கொண்டே போகிறார்கள்.

இந்த நிலையில் தான் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவதற்கான முயற்சிகள் அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடந்து கொண்டிருப்பது நம் காலத்தின் விசித்திரம்.

எதிர்க்கட்சிகள் ஒருவழியாக ஒன்றிணைந்து ‘இந்தியா’ என வரும்படித் தங்கள் கூட்டணிக்குப் பெயர் வைத்தாலும் வைத்தன. அந்தப் பெயருக்குப் பல வியாக்கியானங்களை முதலில் சொன்னவர்கள் தற்போது நாட்டின் பெயரையே மாற்ற முயற்சிக்கிறார்கள்.

பாரத் என்ற சொல்லும் அரசியல் சட்டத்திலேயே இருந்திருக்கிறது. குறிப்பிட்ட சில இடங்களில் அந்தச் சொல் புழக்கத்தில் இருக்கிறது என்று சொன்னாலும், ‘இந்தியா’ என்ற சொல்லை ஏன் வெறுப்பானேன்?

இதே சொல் இந்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட எத்தனை பேர்களால் உச்சரிக்கப்பட்டும், எழுதப்பட்டும் வந்திருக்கிறது? தன்னை ‘இந்தியனாய்’ப் பெருமைப்பட்டவர்கள் எத்தனை பேர்? நம் குறுகிய தேர்தல் அரசியலுக்காக அந்தச் சொல்லினை உயிரிழக்க வைக்கலாமா?

“இந்தியா என்பதை பாரத் என்று மாற்றினால், இந்தி என்ற சொல்லையும் ‘பாரத்’ என்று மாற்றுவீர்களா?’’ – என்று அரசியல் நிர்ணயச் சட்டக்குழுவில் இருந்த உறுப்பினர் ஒருவர் அன்று கேட்ட மாதிரி பலவற்றை மாற்றிக் கொண்டே இருப்பீர்களா?

நம் நாட்டில் மாற்றுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. கால அவசியத்தால் அவற்றை மாற்றுங்கள்.

அதைவிட்டு விட்டு – தேர்தலுக்கு முகாந்திரமாக இந்தியா என்ற அடையாளத்தை மாற்ற முயலாதீர்கள்.

பசித்தவனுக்கு உணவு அளியுங்கள். அது அவசியம்.

அவனுடைய அடையாளத்தை மாற்றாதீர்கள். அது உரிய தீர்வல்ல.

You might also like